பெர்லின் சுவர் இடிந்து 30 ஆண்டுகளுக்கு பின் ஐரோப்பா குடியேறிகளுக்கு தடைகள் போடுவது ஏன்?

பெர்லின் சுவரில் துளையிடும் சிறுவன். படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 1989ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது.

பெர்லின் சுவர் வீழ்ந்து நேற்றுடன் (நவம்பர் 9) 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. அமெரிக்கா - சோவியத் ஒன்றியம் இடையிலான பனிப்போர் நடந்த காலத்தில் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து மேற்குப் பகுதிக்குப் செல்ல முடியாமல் மக்களைத் தடுக்கும் வகையில் இருந்த அந்தத் தடை 1989 நவம்பர் 9ஆம் நாள் அகற்றப்பட்டது.

அந்த சுவர் இடிக்கப்பட்டு 30 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், கண்டத்தின் குறுக்கே பல நூறு கிலோ மீட்டர் நீளத்துக்கு சமீபத்தில் புதிய வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவும் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

ஐரோப்பாவில் நாடுகளுக்கு இடையிலான தற்போதைய கடினமான உறவின் மையமாக இருப்பது குடியேற்றப் பிரச்சனைதான். ''இயல்பானதாகிவிட்ட பழிவாங்கும் வகையிலான கொள்கைகளால் கடலில் மனித உயிர்கள் பறிபோவதுடன், இன்னல்களும் அதிகமாகிவிட்டன,'' என ஐரோப்பிய நாடுகளில் குடியேற நினைப்பவர்களின் நிலை குறித்து எல்லைகள் இல்லாத மருத்துவர்கள் எனும் மருத்துவ தொண்டு அமைப்பு (Médecins Sans Frontières) கூறியுள்ளது.

குடியேற்றப் பிரச்சனையால் மனிதாபிமான விஷயங்களைக் கடந்து, பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகள் பற்றி தாங்கள் மிகவும் கவலைப்படுவதாக சில ஐரோப்பிய நாடுகள் காட்டிக் கொள்கின்றன.

குடியேற்றம் குறித்து ஐரோப்பியர்களின் மனப்போக்கு எப்படி மாறியது, ஏன் மாறியது?

பிளவுபட்ட துணைக்கண்டம்

இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து, கிழக்கு ஐரோப்பா கம்யூனிச சார்புடைய பகுதியாகவும், மேற்கு ஐரோப்பா முதலாளித்துவ சார்புடைய பகுதியாகவும் பிரிந்தது.

கிழக்குப் பகுதி நாடுகளின் அரசுகள் சர்வாதிகார ரீதியில் செயல்படத் தொடங்கியதால், அந்த நாடுகளில் இருந்து ஏராளமானோர் வெளியேறினர். 1949க்கும் 1961க்கும் இடைப்பட்ட காலத்தில் 2.7 மில்லியன் பேர் கிழக்கு ஜெர்மனியில் இருந்து மேற்கு ஜெர்மனிக்குச் சென்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பெர்லின் சுவர் நெடுக மனிதர் செல்ல தடைகள், கண்ணிவெடிகள் இருந்ததோடு, ஆயுதம் தாங்கிய காவலர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

இதைத் தொடர்ந்து, சோவியத்தை முன்மாதிரியாகக் கொண்ட நாடுகள் கடும் எல்லைக் கட்டுப்பாடுகளை உருவாக்கின. மின்சார வேலிகள் அமைப்பது, கண்ணிவெடிகள் புதைப்பது, ஆயுதம் ஏந்திய காவலர்களின் பாதுகாப்பு போடுவது என்று தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தன.

பனிப்போர் முடிவுக்கு வந்த காலக்கட்டத்தில் பிரிட்டன் பிரதமராக இருந்த மார்கரெட் தாட்சர், ''சுதந்திரத்தை நோக்கி ஓடும் மக்களைத் தடுக்க ஈவிரக்கமற்ற, காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக,'' கிழக்கு நாடுகள் மீது குற்றஞ்சாட்டினார்.

இதில் மிகவும் பிரபலமான அல்லது இகழ்வுக்குரிய நடவடிக்கையாக கருதப்பட்ட பெர்லின் சுவர் 1961ல் எழுப்பப்பட்டது. ஜெர்மனியின் தலைநகரின் நடுவே அமைந்த இந்த சுவர் இரு பகுதிகளையும் பிரிப்பதாக இருந்தது.

எல்லையைக் கடக்க முயன்ற போது 262 பேர் கொல்லப்பட்டதாக 2017ல் பெர்லினில் Free University நடத்திய ஆய்வில் தெரிய வந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பெர்லின் சுவரை கடக்க முற்பட்டபோது, இறந்தோரின் நினைவாக பெர்லின் சுவரின் ஒரு பகுதி இன்றும் உள்ளது.

அன்பான வரவேற்பு

கிழக்குப் பகுதி நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து சென்றவர்கள், மேற்கத்திய நாடுகளில் அன்புடன் வரவேற்கப்பட்டனர். மக்கள் நடமாட்டத்துக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பதையும், அவை அமல் செய்யப்பட்ட விதம் குறித்தும் மேற்கத்திய நாடுகள் கடுமையாகக் கண்டித்தன.

மேற்குப் பகுதி நாடுகளின் அரசுகளைப் பொருத்த வரையில், பெருமளவு குடிபெயர்வைத் தடுக்கும் தடைகளை எதிர்ப்பதற்கான காரணங்கள் வெளிப்படையானவை. அந்த மனப்போக்கு நீடித்திருக்கவில்லை.

பனிப்போர் பின்னணியில் பார்த்தால், தங்கள் குடிமக்களில் பெரும்பாலானவர்களே அங்கிருந்து வெளியேறி, சித்தாந்த ரீதியில் எதிர் பக்கம் இருக்கும் நாடுகளுக்குச் சென்று வாழ விரும்புகிறார்கள் என்பது கம்யூனிச நாடுகளுக்கு அரசியல் ரீதியில் மரியாதைக் குறைவாக அமைந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜெர்மனியின் கிழக்கு பகுதியில் நிலவிய சர்வாதிகாரத்தின் அடையாளமாக பெர்லின் சுவர் விளங்கியது.

அதே சமயத்தில் மேற்கு ஐரோப்பிய பொருளாதாரங்கள் வேகமாக வளர்ந்தன. வேலையில்லா திண்டாட்டம் மிகக் குறைவாக இருந்தது. குடிபெயர்ந்து வந்தவர்கள் மூலம் தொழிலாளர் பற்றாக்குறை தீர்ந்ததால் பொருளாதாரம் உயர உதவியாக இருந்தது.

போருக்குப் பிந்தைய காலத்தில் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க, கிழக்கு ஐரோப்பாவில் இருந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்து வருபவர்களை வரவேற்க பிரிட்டன் அரசு திட்டங்களை உருவாக்கியது.

பெர்லின் சுவர் எழுப்பப்பட்ட பிறகு, கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வரும் வழிகள் துண்டிக்கப்பட்டதால், குடிபெயர்ந்து வருவோரின் எண்ணிக்கை திடீரென குறைந்தது. இதை சமாளிக்க துருக்கி, மொராக்கோ போன்ற நாடுகளுடன் மேற்கு ஜெர்மனி வேக வேகமாக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.

இதனால் தொழிலாளர்கள் கிடைக்கும் பிரச்சனை சமாளிக்கப்பட்டது. எனவே மேற்குப் பகுதி அரசியல்வாதிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பெருமளவில் குடிபெயர்வோரை அனுமதிக்காத செயலுக்கு கிழக்குப் பகுதியை அரசியல்வாதிகள் விமர்சனம் செய்தனர். கிழக்குப் பகுதி எல்லைகளைக் கடந்து வரும் குடியேறிகளின் உணவுப் பிரச்சனையை சமாளிக்க சிரமம் இருக்கவில்லை.

புதிய ஐரோப்பா

ஆனால் அந்த சௌகர்யமான சூழ்நிலை அதிக காலம் நீடிக்கவில்லை.

கிழக்குப் பகுதி நாடுகள் சீர்குலைந்து போயின. முன்னாள் கம்யூனிச அரசுகளில் பலவும் இப்போது மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து, தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கின்றன. ஆனால் பெருமளவில் குடிபெயர்வது குறித்த மனப் போக்குகள் மிகவும் வேறுபட்டவையாக உள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் எல்லை சுவர்களை கட்டியுள்ளன.

முன்பு தடுப்புகளுக்குப் பின்னால் குடிமக்களைத் தடுத்த பல நாடுகள், இப்போது மற்றவர்கள் உள்ளே வந்துவிடாமல் தடுப்பதற்கு வேலி அமைக்கின்றன.

ஐரோப்பிய யூனியனுக்குள் மக்கள் எளிதாகப் பயணம் செய்யலாம் என்றாலும், வெளிப்புற எல்லைகளை பலப்படுத்த இந்த அமைப்பு தீவிரமாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது - ''கோட்டையான ஐரோப்பா'' என்று இந்தக் கொள்கை விமர்சிக்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் பெரும்பகுதி எல்லைப் பாதுகாப்பு அதன் தெற்கு எல்லையை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் இருந்து குடியேறிகள் வருவதற்கான பிரதான வழித்தடமாக அந்தப் பகுதி இருக்கிறது.

சைபீரியாவுடனான 155 கிலோ மீட்டர் நீளத்துக்கான எல்லையில் இரட்டை அடுக்கு தடுப்பை ஹங்கேரி கட்டமைப்பு செய்துள்ளது. அது அலாரம் வசதி கொண்டதாகவும், உடல் வெப்ப நிலையை கண்டறிந்து தகவல் தெரிவிக்கும் வசதி கொண்டதாகவும் உள்ளன.

பல்கேரியா, 260 கிலோ மீட்டர் நீளத்துக்கு துருக்கி எல்லையில் தடுப்பு வேலி அமைத்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images/HUNGARIAN INTERIOR MINISTRY PRESS OFF
Image caption “ஐரோப்பிய பாதுகாப்பு அரண்” கொள்கையை போல ஐரோப்பிய ஒன்றிய கொள்கை உருவாகியுள்ளது.

மத்திய தரைக்கடல் பகுதியில், வட ஆப்பிரிக்கா பகுதியில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய பகுதிகளுக்குப் படகுகளில் வரும் குடியேறிகள் தடுத்து நிறுத்தி, தாங்கள் புறப்பட்ட நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படுகின்றனர். கடல் வழியாக வருபவர்கள் பெரும்பாலும் இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின் நாடுகளை நோக்கி பயணிப்பவர்களாக இருக்கின்றனர்.

ஆனால் இந்தத் தடுப்புகள் ஐரோப்பிய எல்லைகளுடன் முடிந்துவிடவில்லை. ஐரோப்பாவின் உள்பகுதிக்குள் இந்த குடியேறிகள் செல்வதைத் தடுப்பதற்கும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

குரேசியா எல்லையில் 300 கிலோ மீட்டர் நீளத்துக்கு ஹங்கேரி தடுப்பு வேலிகள் அமைத்துள்ளது; ஸ்லோவேனியா எல்லையில் ஆஸ்திரேலியா தடுப்பு ஏற்படுத்தியுள்ளது; குரேசியாவுக்கு இடையில் ஸ்லோவேனியா தடுப்பு உருவாக்கியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் தனது குடியேற்ற மேலாண்மை மற்றும் எல்லைப் பாதுகாப்பு மூலம் சொல்ல முடியாத அளவுக்கு மக்களுக்குத் துயரங்களை ஏற்படுத்தியுள்ளது என்று எம்.எஸ்.எப். கூறியுள்ளது.

இனி வரவேற்பு கிடையாது

மனப்போக்குகள் மாறிவிட்டதால் குடியேற்றப் பிரச்சனையில் ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக நடந்து கொள்கிறது.

பனிப்போர் முடிந்து நீண்ட காலத்துக்குப் பிறகு, குடியேற்றப் பிரச்சனை, தொந்தரவு தருவதாக மாறியது. பல நூறாயிரம் பேர் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு குடிபெயரத் தொடங்கினர். 2015அக்டோபர் மாதத்தில் மட்டும் 220,000 பேர் குடிபெயர்ந்து வந்தனர்.

ஐரோப்பா முழுக்க வலதுசாரி கட்சிகள் வலிமை பெற்றன. குடியேற்றத்துக்கு எதிராக அவை பிரசாரம் செய்தன. பிரதான அரசியலில் உள்ள கட்சிகளும் தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொண்டன.

2008ல் தொடங்கிய பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, ஐரோப்பாவின் பொருளாதாரம் இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அதிக வளர்ச்சி மற்றும் குறைவான வேலையில்லா திண்டாட்டம் என்பவை கடந்த கால விஷயங்களாகிவிட்டன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption குடியேற்றத்திற்கு எதிராக ஐரோப்பா முழுவதும் வன்முறை ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்துள்ளன.

குடிபெயர்ந்து வந்தவர்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் பரவலாக குடியமர்த்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோற்றுவிட்டன. ஒவ்வொரு நாடும் எவ்வளவு பேரை ஏற்றுக் கொள்வது என்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே இதற்குக் காரணம்.

வேலி போட்டு தடுப்பு

எனவே ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் குடியேறிகள் வருவதைத் தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டன. 2017 ஜனவரியில் 7000 பேர் மட்டுமே குடிபெயர்ந்து வந்தனர்.

2015ஆம் ஆண்டில் சிரியாவில் இருந்து 33 சதவீதம் பேரும், ஆப்கானிஸ்தானில் இருந்து 15 சதவீதம் பேரும், இராக்கில் இருந்து 6 சதவீதம் பேரும் வந்துள்ளனர். அந்த நாடுகளில் உள்நாட்டுச் சண்டைகளால் பல நூறாயிரம் பேர் பலியான சூழ்நிலையில் இந்த குடிபெயர்வு நடந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே குடியேறிகளை தங்க வைக்க துருக்கிக்கு 3.3 பில்லியன் டாலர்கள் வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டுள்ளது.

ஆனால் சில தசாப்தங்களுக்கு முன்பு கிழக்குப் பகுதியில் இருந்து வந்து குடியேறியவர்களைப் போல இவர்களுடைய சூழ்நிலை பார்க்கப்படவில்லை.

குடிபெயர்ந்து வந்தவர்கள் யார் என்ற அடிப்படையும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

ஹங்கேரியைச் சேர்ந்த வரலாற்றாளர் கஸ்ஜ்ட்டவ் கெக்ஸ்கேஸ் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ''பனிப்போர் சூழ்நிலை அகதிகள் பிரச்சனையை அப்போது பிரசாரத்துக்கு மிக முக்கியமானதாக ஆக்கியது. சோவியத் பகுதியை விட்டு வெளியேறிய ஒவ்வொருவரும் மேற்குப் பகுதியை மேன்மையானதாகக் கூறினர்,'' என்று தெரிவித்துள்ளார்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் ஐரோப்பிய கிறிஸ்தவர்கள். இளைஞர்கள், கல்வி கற்றவர்களாக, முக்கியமாக அந்தக் காலத்தில் கம்யூனிச எதிர்ப்பாளர்களாக இருந்தனர். அவர்கள் செல்லும் நாடுகளின் சித்தாந்தங்களுடன் இசைவு கொண்டவர்களாக அவர்கள் கருதப்பட்டனர்.

இப்போதைய அகதிகள் பல வகையினராக உள்ளனர். தொழில் திறன் அல்லாதவர்கள், தொழில் செய்பவர்கள், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறத்தினராக உள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

சிரியா, இராக், ஆப்கன் பகுதிகளில் இருந்து வரும் பெரியவர்களும், குழந்தைகளும் வேறு மாதிரி உலகில் இருந்து, போர்களில் இருந்து தப்பித்து, எங்கே செல்கிறோம் என்பது தெரியாமலேயே வருகின்றனர். தாங்கள் செல்லும் நாடுகளில் உள்ள பெரும்பாலான இனம் மற்றும் மதங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர்களாக இருக்கிறார்கள். அந்த நாடுகள் தீவிர வலதுசாரிகளாகவும் மற்ற வகையினராகவும் இருப்பதால், இவர்கள் ஏற்புடையவர்களாக இல்லை.

மேலும், அதிக அளவில் இவர்களுக்கு இடம் கொடுக்க ஐரோப்பிய ஒன்றியம் விரும்பவில்லை அல்லது அரசியல் ரீதியாக சாத்தியப்படவில்லை என்று தோன்றுகிறது. மாறாக, தனது எல்லைக்கு வெளியே, உலகில் அதிக அளவிலான அகதிகளை துருக்கி தங்க வைத்துள்ளது. சிரியாவில் இருந்து மட்டும் 3.6 மில்லியன் பேர் இதில் இடம் பெற்றுள்ளனர். குடிபெயர்ந்து வருபவர்களை உற்சாகத்துடன் ஏற்றுக் கொள்ளும் ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் 1.1 மில்லியன் பேர் எடுத்துக் கொள்ளப்பட்டனர். அதைவிட அதிகமாக துருக்கி இடம் கொடுத்துள்ளது.

துருக்கியைவிட சற்று அதிகமான மக்கள் தொகை கொண்ட ஜெர்மனியின் பொருளாதாரம் அதைவிட நான்கு மடங்கு ்திகம். ஆனால் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான அகதிகளுக்கு மட்டுமே இடம் கொடுத்துள்ளது.

ஐரோப்பாவின் முன்னணி நாடான பிரிட்டனுக்கு இதுவரை 126,000 அகதிகள் மட்டுமே வந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை JASON FLORIO/MOAS/Reuters/handout
Image caption மத்திய தரைக்கடல் வழியாக ஆபத்தான, சட்டவிரோத பயணங்களை பல குடியேறிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் இதனால் உயிரிழந்துள்ளனர்.

"இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 720,000 அகதிகளுக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது. இது ஆஸ்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மறுவாழ்வு அளித்த அகதிகளின் எண்ணிக்கையைவிட மூன்று மடங்கு அதிகம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

ஆனால், "நடைமுறையில் ஐரோப்பிய ஒன்றியம் எல்லைகளை மூடி, குடிபெயர்வோரின் மனித உரிமைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துவது, ஆதார வளங்கள் குறைவாக உள்ள மாகாணங்களின் பொறுப்பில் பாதுகாப்பை ஒப்படைப்பது, துன்புறுத்தல், பாலியல் வன்முறை மற்றும் இதர தீவிர சட்ட மீறல் செயல்களுக்கான ஆபத்தை அதிகரிக்கும்,'' என்று ஐ.நா. நம்புகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :