ஜாகிர் நாயக்கை ஏன் நாடு கடத்தவில்லை?: இந்தியாவுக்கு விளக்கம் அனுப்ப மலேசியா முடிவு

  • 8 நவம்பர் 2019
ஜகிர் நாயக் படத்தின் காப்புரிமை ANADOLU AGENCY
Image caption மதபோதகர் ஜாகிர் நாயக்

இந்தியாவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்த இயலாது என மலேசிய அரசு மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய அரசுக்கு அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை மலேசியா அனுப்பி வைக்கும் என மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோ சைஃபுதின் அப்துல்லா கூறியுள்ளார்.

இந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் குறித்து அரசாங்க தலைமை வழக்கறிஞருடன் (அட்டர்னி ஜெனரலுடன்) தாம் கலந்தாலோசிக்க இருப்பதாக நாடாளுமன்றத்தில் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பண மோசடி உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகளின் பேரில் மதபோதகர் ஜாகிர் நாயக்கை தேடப்படும் நபராக அறிவித்துள்ளது இந்திய அரசு. இந்நிலையில் அவருக்கு நிரந்தர வசிப்பிட உரிமையை வழங்கியுள்ளது மலேசிய அரசு.

சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசியபோது ஜாகிர் நாயக் தெரிவித்த சில கருத்துக்களால் அங்கு சர்ச்சை வெடித்தது.

மலேசிய வாழ் இந்தியர்கள் பிரதமர் மகாதீருக்கு விசுவாசமாக இல்லை என்றும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியைத்தான் ஆதரிக்கிறார்கள் என்றும் ஜாகிர் நாயக் பேசியதாக புகார் எழுந்தது.

படத்தின் காப்புரிமை VCG
Image caption பிரதமர் மகாதீர்

மேலும், தாம் மலேசியாவில் இருந்து வெளியேற வேண்டும் எனில், தனக்கு முன்பே அந்நாட்டிற்கு விருந்தினர்களாக வந்திறங்கிய சீனர்கள் முதலில் வெளியேற வேண்டும் என்றும் ஜாகிர் நாயக் பேசியதை அடுத்து, அவரை நாடு கடத்துமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், ஜாகிர் நாயக்கை நாடு கடத்தும் எண்ணம் இல்லை என்று பிரதமர் மகாதீர் இருமுறை திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

பாங்காக்கில் சந்தித்துப் பேசிய இந்திய, மலேசிய வெளியுறவு அமைச்சர்கள்

இந்நிலையில் மலேசிய வெளியுறவு அமைச்சர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்த முடியாததற்கான விளக்கத்தை அளிக்கும் வகையில் இந்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்படும் எனக் கூறியுள்ளார் மலேசிய வெளியுறவு அமைச்சர்.

சர்ச்சைக்குரிய இந்த மதபோதகரை நாடு கடத்த வேண்டும் என இந்திய தரப்பில் இருந்து கோரிக்கை வந்ததாகக் குறிப்பிட்ட அவர், ஜாகிர் நாயக்கை ஏன் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப இயலாது என்பது குறித்து மலேசியப் பிரதமர் ஏற்கெனவே விளக்கம் அளித்திருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் கடந்த வாரம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற 35ஆவது ஆசியான் மாநாட்டின் போது இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை தாம் சந்தித்ததாகக் குறிப்பிட்ட டத்தோ சைஃபுதின் அப்துல்லா, அச்சமயம் ஜாகிர் நாயக் விவகாரம் குறித்து விவாதித்த்தாகத் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை SAJJAD HUSSAIN

"எங்கள் சந்திப்பின் போது ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவது குறித்து அமைதியான முறையில் அவர் (ஜெய்சங்கர்) விவரம் கேட்டறிந்தார். பின்னர் மலேசியாவின் நிலைப்பாடு குறித்து அதிகாரப்பூர்வமாக பதில் அனுப்பும்படி கூறினார். அதன்படி, கடிதம் அனுப்ப இருக்கிறோம்," என்று மலேசிய நாடாளுமன்றத்தில் அமைச்சர் டத்தோ சைஃபுதின் அப்துல்லா கூறினார்.

இந்தியாவுக்கு அனுப்ப உள்ள கடிதத்தில் என்னென்ன விவரங்கள் துல்லியமாகக் குறிப்பிடப்பட வேண்டும் என்பது குறித்து அரசு தலைமை வழக்கறிஞருடன் தாம் கலந்தாலோசிக்க இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதையடுத்து ஜாகிர் நாயக் மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது.

`மலேசிய அரசின் பிடிவாதத்திற்கான காரணம் புரியவில்லை'

இந்நிலையில் ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவது மட்டுமே நல்ல தீர்வாக இருக்கும் என்று மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ மோகன் ஷான் தெரிவித்துள்ளார்.

ஜாகிர் நாயக்கை அவரது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும் விவகாரத்தில், மலேசிய அரசு ஏன் இன்னும் பிடிவாதம் பிடிக்கிறது என்பதும், இதன் பின்னணியில் உள்ள மறைமுகமான நோக்கம் என்ன என்பதும் தமக்குப் புரியவில்லை என்று பிபிசி தமிழிடம் அவர் கருத்துத் தெரிவித்தார்.

"பிற மதங்கள் குறித்து தவறாகப் பேசுவதும் மறைமுகமாக தீவிரவாதத்தை வளர்ப்பது போன்றது தான். மலேசிய அரசின் திட்டவட்ட முடிவால் இங்குள்ள இந்துக்கள், இந்தியர்கள் நிச்சயம் மன வருத்தம் கொள்வர். எனவே அவரை நாடு கடத்துவது தான் சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் நல்லது," என்கிறார் டத்தோ மோகன் ஷான்.

படத்தின் காப்புரிமை Facebook
Image caption சரஸ்வதி கந்தசாமி, வழக்கறிஞர், மலேசிய தொழில் துறை மேம்பாட்டு நிதியகத்தின் தலைவர்

`மலேசிய அரசை மட்டும் குறை சொல்ல முடியாது'

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்திய அரசு தூதரக அளவில் மென்மையான கோரிக்கையை மட்டுமே விடுத்திருக்கிறதே தவிர, அனைத்துலகச் சட்டத்தை பின்பற்றவில்லை என்கிறார் மலேசிய தொழில் துறை மேம்பாட்டு நிதியத்தின் தலைவரும், வழக்கறிஞருமான சரஸ்வதி கந்தசாமி.

ஜாகிர் நாயக்கிற்கு மலேசியாவின் பெரும்பான்மை இனமான மலாய், இஸ்லாமிய சமூகம் ஆதரவு அளிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இத்தகைய சூழ்நிலையில் மலேசிய அரசை மட்டும் குறை சொல்வதற்கில்லை என்கிறார்.

"என்னைப் பொறுத்தவரை மலேசிய அரசு தெரிவிக்கும் காரணத்தைக் குறை கூறுவதற்கு இல்லை. மாறாக, இந்திய அரசு மென் கோரிக்கை மட்டுமே விடுத்துக் கொண்டிருக்காமல், அனைத்துலகச் சட்டத்தைப் பின்பற்றி ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவதற்கான உத்தரவைப் பெற்று அதை மலேசியாவிடம் அளிக்க வேண்டியது முக்கியம்," என்கிறார் சரஸ்வதி கந்தசாமி.

கடிதத்தின் உள்ளடக்க விவரங்களுக்காக காத்திருக்கும் பினாங்கு ராமசாமி

படத்தின் காப்புரிமை Facebook
Image caption பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி

இதற்கிடையே, ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என்பதில் தொடக்கம் முதலே உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி, தனது முந்தைய கருத்திலும் நிலைப்பாட்டிலும் எந்தவித மாற்றமும் இல்லை என பிபிசி தமிழிடம் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

"ஜாகிர் நாயக்கிற்கு இந்தியாவில் நீதி கிடைக்காது என்றும், அங்கு அவரது உயிருக்கே ஆபத்து என்றும் மலேசிய அரசு ஏற்கெனவே ஒரு காரணத்தைக் கூறியுள்ளது. குற்றம் செய்தவர்களை பரிமாறிக் கொள்வதற்கான ஒப்பந்தம் மலேசியா, இந்தியா இடையே உள்ளது. இந்தியாவில் ஒருவர் குற்றம் செய்துவிட்டு மலேசியாவுக்கு வரும் பட்சத்தில், அந்நபரிடம் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

"குற்றம் செய்தது உறுதி செய்யப்படும் பட்சத்தில் அந்நபரை நாடு கடத்த வேண்டும். ஆனால் ஜாகிர் நாயக் விவகாரத்தில் அவர் மீதான இந்திய அரசின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடந்ததா என்பது தெரியவில்லை. அதே சமயம் மலேசியாவில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள புகார்கள் தொடர்பாக விசாரணை நடந்துள்ளது. காவல்துறை விசாரணை நடத்தியுள்ள நிலையில், அரசு தலைமை வழக்கறிஞரின் அறிக்கை வெளியாகாததால் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் தெரியவில்லை.

"எனினும் மலேசிய வாழ் இந்தியர்கள், சீனர்கள் மதபோதகர் ஜாகிர் நாயக் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இதில் எந்த மாற்றமும் இல்லை. எனவே இந்தியாவுக்கு அனுப்ப உள்ள கடிதத்தில் எத்தகைய விளக்கம் இடம்பெறப் போகிறது, அதன் உள்ளடக்கம் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொண்ட பிறகே எந்த முடிவுக்கும் வர இயலும்," என்று பேராசிரியர் ராமசாமி தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Facebook
Image caption பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர், சதீஸ் முனியாண்டி

"ஜாகிர் இல்லை என்றால் விடுதலைப் புலிகள் விவகாரமே எழுந்திருக்காது"

அண்மையில் அங்கு விடுதலைப் புலிகள் அமைப்புக்கு புத்துயிரூட்ட முயற்சித்ததாக எழுந்துள்ள புகாரின் பேரில், 12 பேர் கைதாகி உள்ளனர். இதற்கு ஜாகிர் நாயக் விவகாரமே காரணம் என்கிறார் மலேசியாவின் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினரான சதீஸ் முனியாண்டி.

ஜாகிர் நாயக் இல்லையென்றால் விடுதலைப் புலிகள் விவகாரம் எழுந்திருக்கவே வாய்ப்பில்லை என்றும் அவர் கூறுகிறார்.

"ஜாகிர் நாயக்கிற்கு கிளம்பியுள்ள எதிர்ப்பை ஒடுக்குவதற்கான நடவடிக்கையாகவே புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் என்று இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கைதாகி உள்ளனர்.

"ஐரோப்பிய ஒன்றியம், பல ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைப் புலிகள் அமைப்பை அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. மேலும் பயங்கரவாதம் குறித்து அமெரிக்கா அண்மையில் வெளியிட்டுள்ள பட்டியலிலும் புலிகள் அமைப்பு இல்லை," என சதீஸ் முனியாண்டி சுட்டிக்காட்டியுள்ளார்.

`மலேசிய அரசின் கேலிக்கூத்து'

படத்தின் காப்புரிமை Facebook
Image caption அரசியல் விமர்சகர் முத்தரசன்

இதற்கிடையே ஜாகிர் நாயக் விவகாரத்தில் மலேசிய அரசு இந்தியத் தரப்பிடம் எத்தகைய விளக்கத்தைத் தரப் போகிறது என்பதை தெரிந்து கொண்ட பிறகே கருத்து தெரிவிக்க இயலும் என்கிறார் அரசியல் விமர்சகர் முத்தரசன்.

எனினும், அனைத்துலக அரசியல் அரங்கில் மலேசியாவின் செயல்பாடு கேலிக்கூத்தாக அமைந்துள்ளது என்றும் அவர் விமர்சிக்கிறார்.

மலேசியாவின் அயல்நாட்டுக் கொள்கையில் உள்ள முரண்பாடே தமது இந்த விமர்சனத்துக்குக் காரணம் என்றும் பிபிசி தமிழிடம் அவர் .

Image caption மூத்த பத்திரிகையாளர் பெ. ராஜேந்திரன்

மூத்த பத்திரிகையாளர் பெ. ராஜேந்திரன் கூறுகையில், மலேசியாவின் பலம் என்பது அதன் ஒற்றுமையில் உள்ளது என்கிறார். அதற்கு ஒருசிலரால் பங்கம் ஏற்படுவது கவலை தருவதாகவும் குறிப்பிடுகிறார்.

"இந்நாட்டிற்கு வந்து இங்குள்ள பிற மதங்கள் குறித்த கருத்துக்களை தெரிவிக்க, அம்மதங்களைச் சார்ந்தவர்கள் குறித்துப் பேச அவருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. இதை அவரும், அவரைப் பேசவிட்டு வேடிக்கை பார்ப்பவர்களும் உணர வேண்டும்.

"அத்தகைய ஒருவரால் பாதிக்கப்பட்ட மக்கள், தங்களது ஒட்டுமொத்த அதிருப்தியை வெளியிட்ட பிறகும், அந்த நபருக்கு ஆதரவு அளிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வேதனை அளிக்கிறது. அதிலும் குறிப்பாக, அந்நபரை நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ள நிலையில், அவரை அனுப்ப முடியாது என்ற முடிவு வேதனையை அதிகப்படுத்துகிறது.

"இத்தகைய போக்கு இந்நாட்டில் கட்டிக் காக்கப்பட்டு வந்த சகிப்புத் தன்மைக்கு ஊறு விளைவித்துவிடுமோ என்ற அச்சத்தையும் கவலையையும் ஒருசேர அளிக்கிறது," என்கிறார் ராஜேந்திரன்.

படத்தின் காப்புரிமை Facebook
Image caption டத்தோ முருகையா: மத, இன நல்லிணக்கத்தின் அவசியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்

இதற்கிடையே மலேசியாவில் இனவாதம், மதவாதம் அதிகரித்து வருவதாக மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோ முருகையா கவலை தெரிவிக்கிறார்.

"கடித விவரங்கள் தெரியாமல் கருத்து சொல்ல தோன்றவில்லை. அதேசமயம் நாட்டின் மத, இன நல்லிணக்கத்தைப் பேண வேண்டியதன் அவசியத்தை அனைவரும் மனதார உணர்ந்து செயல்பட வே ண்டும் என்பதே எனது வேண்டுகோள்," என்கிறார் டத்தோ முருகையா.

`இந்தியா தான் இனி முடிவெடுக்க வேண்டும்'

படத்தின் காப்புரிமை Facebook
Image caption மலேசிய செனட்டர் டத்தோ மோகன்

ஜாகிர் நாயக் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இனி இந்தியா தான் முடிவெடுக்க வேண்டும் என்கிறார் மலேசிய செனட்டர் டத்தோ மோகன்.

"இன்று ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்காவிட்டால் நாளை மலேசியாவில் குற்றம் புரியும் ஒருவர், இந்தியாவில் அடைக்கலம் தேடலாம். அவரை ஒப்படைக்கும்படி மலேசியா கோரிக்கை விடுத்தால் என்னாகும் என்று தெரியவில்லை.

"விளக்கக் கடிதம் அனுப்புவதாக மலேசியா சொல்கிறது. அதைப் பெற்றுக் கொண்ட பிறகு இந்தியா என்ன செய்யும் என்பது குறித்து இப்போது ஏதும் சொல்ல முடியாது. எனவே தற்போதைய நிலையில் இந்தியா தான் அடுத்தக்கட்ட முடிவை எடுக்க வேண்டும்," என்கிறார் டத்தோ மோகன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்