கமலா ஹாரீஸ்: சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகியது ஏன்?

கமலா ஹாரீஸ் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகியது ஏன்? படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார்.

2020-ம் ஆண்டு நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராவதற்கான போட்டியில் குதிப்பதாக அறிவித்து இருந்தார் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா தேவி ஹாரிஸ்.

2016ல் கலிபோர்னியா மாகாணத்திலிருந்து செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா, அம்மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாக முன்னதாக பதவி வகித்தவர்.

54 வயதாகும் கமலா, அதிபர் டொனால்டு டிரம்பை தீவிரமாக விமர்சிப்பவர். ஜனநாயகக் கட்சிக்குள் வளர்ந்துவரும் நட்சத்திரமாக கூறப்படுகிறவர்.

நம்பிக்கை அளிக்கும் தலைவராகப் பார்க்கப்படும் கமலா ஹாரிஸ், "அமெரிக்க விழுமியங்களைப் பாதுகாப்பதற்காகக் குரல் உயர்த்தும் உங்களைப் போன்ற மில்லியன் கணக்கானவர்களைத்தான் நாட்டின் எதிர்காலம் நம்பியிருக்கிறது. அதற்காகத்தான் அமெரிக்க அதிபர் பதவியை நோக்கிச் செல்லுகிறேன்," என்று ஜனவரி மாதம் கூறி இருந்தார்.

அந்த சமயத்தில்தான் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான போட்டியில் இருப்பதாக 20,000 பேர் கூடி இருந்த கூட்டத்தின் முன்பு கமலா ஹாரிஸ் அறிவித்தார்.

ஏன் விலகினார்?

நிதிப் பற்றாக்குறைதான் காரணம்.

இந்த தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்ல தம்மிடம் போதிய நிதி இல்லை என முன்பே கூறி இருந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

நிதிப்பற்றாக்குறையின் காரணமாக தன்னுடைய அலுவலக செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் சிலரைப் பணி நீக்கம் செய்தார்.

ஜனநாயகக் கட்சியின் சார்பாக அதிபர் தேர்தலில் நிற்பதற்கான போட்டியில் இவருடன் ஜோ பிடன், பெர்னி சாண்டெர்ஸ் மற்றும் எலிசபெத் வாரன் ஆகியோர் போட்டியில் இருந்தனர்.

கமலா, "நான் பெரும் பணக்காரர் அல்ல. என்னால் எனது பிரசாரத்தின் செலவுகளைச் சமாளிக்க முடியவில்லை. கடந்த சில நாட்களாகப் பிரசார செலவுகளை எதிர்கொள்ள மிகவும் சிரமப்பட்டேன். இப்படியான சூழலில் தேர்தல் பிரசாரத்தை மேலும் தொடர்ந்தால் மேலும் சிரமத்திற்கு உள்ளாவேன்," என்றார்.

"தனது பிரசாரத்தை நிறுத்திக் கொள்கிறேன். அனைத்து மக்களுக்கும் நீதி கிடைக்கத் தினமும் போராடுவேன்," என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் கமலா ஹாரிஸ்.

கிண்டல் செய்த டிரம்ப்

படத்தின் காப்புரிமை Getty Images

கமலா ஹாரிஸை தொடர்ந்து விமர்சித்து வந்த டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில்,"இது சரியல்ல. நாங்கள் உங்களை மிஸ் செய்வோம்" என்று நக்கல் தொனியில் ட்வீட் செய்திருந்தார்.

இதற்குப் பதில் அளித்த கமலா, "கவலை வேண்டாம் அதிபரே, உங்களை விசாரணையில் சந்திப்போம்," என்று கூறியுள்ளார்.

அதிபர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாக, டிரம்ப் விசாரணையை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: