சூடான் தீ விபத்து: 23 பேர் பலி, 3 தமிழர்களை காணவில்லை - விரிவான தகவல்கள்

சுடான் தீ விபத்து: 22 பேர் பலி, இந்தியர்களின் நிலை என்ன? - விரிவான தகவல்கள் படத்தின் காப்புரிமை Getty Images

சூடான் நாட்டில் உள்ள ஒரு செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருபதுக்கும் மேற்பட்டோர் பலி ஆகி உள்ளனர்.

அந்த செராமிக் தொழிற்சாலையில் பணிபுரிந்த இந்தியர்கள் சிலர் பலியாகி உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அவர்களின் நிலையை அறிய தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.

இதற்கான சிறப்புத் தகவல் மையமும் திறக்கப்பட்டுள்ளது.

என்ன நடந்தது?

சூடான் தலைநகர் கார்டோமில் உள்ள செராமிக் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் 23 பேர் பலியானதாகவும், 130 பேர் காயம் அடைந்ததாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமை அரசு தகவல்களைக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த தீ விபத்தின் காரணமாகத் தொழிற்சாலை முழுவதுமாக அழிந்துவிட்டதாக அரசு தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

இந்த விபத்திலிருந்து தப்பிய அந்த தொழிற்சாலை பணியாளர் வில்லியம், "என்ன நடந்து என்று எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு பெரும் சத்தத்தைக் கேட்டேன். அதன் பின் அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன். என் பின்னால் ஓடி வந்தவருக்குப் பயங்கர காயம். எனக்கும் காலில் காயம்" என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்காததே இந்த விபத்துக்குக் காரணம் என சுடான் அரசு கூறியதாகத் தகவல் வெளியிட்டுள்ளது ராய்ட்டர்ஸ் செய்தி முகமை.

முழுவதுமாக எரிந்த நிலையிலிருந்த 14 உடல்களை மீட்டதாகக் கூறுகிறார் அந்த இடத்திற்குச் சென்ற தன்னார்வலர் ஹூசைன் உமர்.

இந்தியர்கள் நிலை என்ன?

செராமிக் தொழிற்சாலையில் பணியாற்றிய இந்தியர்கள் பலியாகியதையும், சிலர் காயமடைந்ததையும் அறிந்தேன். இந்த தகவல் வருத்தமடையச் செய்கிறது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் ட்வீட் செய்துள்ளார்.

தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர் எனக் கூறி உள்ள ஜெய்ஷங்கர், எமெர்ஜென்சி ஹாட்லைன் வசதியையும் ஏற்படுத்தி உள்ளதாகக் கூறி உள்ளார்.

தமிழர்களின் நிலை

இந்திய தூதரகம் அளிக்கும் தகவலின்படி அந்த தொழிற்சாலையில் பணி செய்துவந்த மூன்று தமிழர்களை காணவில்லை.

ராமகிருஷ்ணன், வெங்கடாசலம் மற்றும் ராஜசேகர் ஆகியோர் அந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனர். தீ விபத்துக்கு பிறகு அவர்களின் நிலை என்ன ஆனது என தெரியவில்லை.

ஜெயக்குமார் என்பவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

முகமது சலீம் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் தமிழகத்தின் எந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்