கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரண்டு முகம் கொண்டவர்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சனம் மற்றும் பிற செய்திகள்

நேட்டோ மாநாட்டில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்க அதிபர் டிரம்பை கேலி செய்வது போல் வெளியான வீடியோ ஒன்றால் ஜஸ்டின் ட்ரூடோவை இருமுகம் கொண்ட நபர் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரூடோ, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரூங் ஆகியோர் டிரம்பால் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்று குறித்து பேசி கொண்டிருப்பதாக அந்த வீடியோவில் தெரிகிறது.
நேட்டோ தலைவர்கள், ஒற்றுமையாக இருப்பது குறித்து ஒப்பந்தம் ஒன்றை ஏற்றுள்ளனர் ஆனால் லண்டனுக்கு அருகில் நடைபெற்ற 70ஆவது ஆண்டுவிழா கூட்டத்தில் பல சலசலப்புகள் ஏற்பட்டன.
அந்த கூட்டத்திற்கு பிறகு நடைபெறுவதாக இருந்த செய்தியாளர்கள் சந்திப்பை டிரம்ப் ரத்து செய்துவிட்டார்.
அவர் செய்தியாளர்களிடம், "நாம் ஏற்கனவே பல செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திவிட்டோம் என தெரிவித்திருந்தார்,"
வீடியோவில் என்ன இருந்தது?
கனடா ஊடகமான சிபிசியால் டிவிட்டரில் பதிவிடப்பட்ட அந்த வீடியோவில், ட்ரூடோ, போரிஸ் ஜான்சன், மக்ரூங், நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே மற்றும் அரசி எலிசபெத்தின் மகள் இளவரசி ஆனி ஆகியோர் பக்கிங்காம் அரண்மனையில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அந்த வீடியோவின் தொடக்கத்தில், "போரிஸ் ஜான்சன் மக்ரூங்கை பார்த்து அதனால்தான் நீங்கள் தாமதமாக வந்தீர்களா?," என கேட்கிறார்.
அதற்கு ட்ரூடோ, "40 நிமிடங்கள் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பால் அவர் தாமதமாக வந்துள்ளார்," என தெரிவித்துள்ளார்.
அதற்கு மக்ரூங் ஏதோ பதிலளிக்கிறார் ஆனால் அது அந்த வீடியோவில் தெளிவாக கேட்கவில்லை. அதன்பின் ட்ரூடோ, "ஆமாம் அவர் அறிவித்திருந்தார், அவரின் குழு ஆச்சர்யத்தில் மூழ்கியதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும்," என்று தெரிவிக்கிறார்.
ஆனால் இவர்கள் யாருக்கும் இவர்கள் பேசுவது பதிவு செய்யப்படுவதாக தெரிந்திருக்கவில்லை.
இந்த வீடியோவை குறிப்பிட்டுதான், கனடா பிரதமர் ட்ரூடோ இரு முகம் கொண்டவர் என தெரிவித்துள்ளார் டிரம்ப்.
யார் இவர்? - தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்படவுள்ளார் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை.
சென்னையில் பிறந்தவர்
சென்னையில் பிறந்தவரான அவருக்கு படிப்பில் எந்த அளவுக்கு ஆர்வம் இருந்ததோ, அதே அளவுக்கு விளையாட்டிலும் ஆர்வம் இருந்தது. பள்ளிக்கூட கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கியவர் அவர்.
பிராந்தியங்களுக்கிடையிலான போட்டிகள் பலவற்றில் அவரது அணி வெற்றிபெற்றிருக்கிறது.
பள்ளிக்காலத்திலிருந்தே தொலைபேசி எண்களை நினைவில் வைத்திருப்பதில் சுந்தர் பிச்சைக்குத் தனித் திறமை இருந்துவந்தது.
மேலும் படிக்க:யார் இந்த சுந்தர் பிச்சை?: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
இலங்கை: கிழக்கு, வடமத்தி மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்
இலங்கையின் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, வடமத்திய மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இவர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
ஏற்கனவே 6 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் இரண்டு மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் இலங்கையிலுள்ள 9 மாகாணங்களில் 8 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க:இலங்கை: 8 புதிய ஆளுநர்கள் நியமனம் - இருவர் பெண்கள்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்: இந்தி கற்றுக் கொடுப்பது ஏன்?
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்றுக் கொடுப்பது தொடர்பான விவகாரம் சர்ச்சையான நிலையில், அது தொடர்பாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் விளக்கமளித்திருக்கிறார்.
சென்னையிலிருந்து செயல்படும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்ஃபில், பிஎச்டி மாணவர்களுக்கு விருப்பப் பாடமாக இந்தி, பிரெஞ்சு மொழிகளைக் கற்பிக்கும் வகுப்புகளை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் திங்கட்கிழமையன்று துவக்கிவைத்தார். இதற்கென ஆறு லட்ச ரூபாயை தமிழக அரசு சமீபத்தில் ஒதுக்கீடு செய்திருக்கிறது.
ஆனால், தமிழைப் பரப்புவதற்காகவும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்காகவும் துவக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி கற்பிக்கப்படுவது சரியல்ல என தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரான தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்றுக் கொடுப்பது ஏன்? - அமைச்சர் விளக்கம்
"அன்று சாராயம் காய்ச்சினோம்; இன்று வனம் உருவாக்குகிறோம்"
எல்லாரும் விவசாயத் தொழிலைவிட்டு நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இந்த சமயத்தில், ஒரு கிராமமே விவசாய தொழிலை நோக்கி திரும்பி இருக்கிறது.
ஆம். இந்தக் கட்டுரையை இப்படிதான் தொடங்க வேண்டும்.
ஒரு காலத்தில் வாழ்வாதாரத்திற்காக மரம் வெட்டி, சாராயம் காய்ச்சி வாழ்ந்த இந்த கிராமம், இன்று வெற்றிகரமாக விவசாயத்தின் ஒரு பிரிவான தோட்டக்கலையில் முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கல்லுக்குடியிருப்பு கிராமம் அது.
மேலும் படிக்க:விவசாய தொழில் செய்ய ஊர் திரும்பும் ஒரு தமிழக கிராமம் - நம்பிக்கை பகிர்வு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்