பிரிட்டன் தேர்தலில் காஷ்மீர் பிரச்சனை எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும்?

பிரிட்டன் தேர்தல்: காஷ்மீர் பிரச்சனை எவ்வாறு அரசியல் சமன்பாட்டை எவ்வாறு மாற்றும்?

வடக்கு பிரிட்டனில் உள்ள பிராட்போர்ட் நகரில் காஷ்மீர் பற்றி எதாவது குறிப்பிடாமல், உரையாடலோ அல்லது விவாதமோ முழுமையடையாது.

இங்கு, ஆலயமோ, மசூதியோ, ஒருவரின் வீடோ அல்லது தேர்தல் பிரச்சாரமோ எதுவாக இருந்தாலும் காஷ்மீரை புறக்கணிப்பது கடினம்.

இந்தியாவில் இருந்து 6,500 கி.மீ தொலைவில் உள்ள பிரிட்டனில் தேர்தல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது காஷ்மீர்.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி, இந்திய அரசு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புரிமை தரும் 370 வது பிரிவை அகற்றி அதன் தனித் தன்மையை முடிவுக்கு கொண்டுவந்து மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, இரண்டையும் யூனியன் பிரதேசங்களாக ஆக்கியது.

இதனால், பிராட்போர்டில் வாழும் இந்திய மற்றும் பாகிஸ்தான் சமூகங்களிடையே, இது பிரச்சனையாக பெரிய அளவில் உருவெடுத்தது மட்டுமல்ல, வெறுப்பின் சுவரும் எழுப்பப்பட்டது.

இந்தியாவின் இந்த முடிவில் இந்திய சமூகம் மகிழ்ச்சியாக இருக்கும் அதே நேரத்தில், பாகிஸ்தான் சமூகம் மிகுந்த கோபத்தில் உள்ளது.

பிரிட்டனை சேர்ந்த கட்சிகளும், காஷ்மீர் பிரச்சினையில் தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளன. ஆனால் அவைகள் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்திருக்கின்றன.

தெற்காசிய மக்களின் வாக்குகள் முக்கியமானதாகக் கருதப்படும் 48 இடங்களின் தேர்தலில் காஷ்மீர் விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மதத்தின் அடிப்படையில் பிரிவினை?

பிரிட்டனில் பொதுத் தேர்தல் டிசம்பர் 12 அன்று நடைபெறவுள்ளது. பிராட்போர்டின் மக்கள் தொகையில் 43 சதவீதம் தெற்காசிய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் மிர்பூரைச் சேர்ந்த ஏராளமான மக்கள் இங்கு வசிக்கின்றனர். இங்கு தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

கட்சிகளின் காஷ்மீர் குறித்த கொள்கைகள், தாங்கள் வாக்களிக்கும் விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இங்குள்ள வாக்காளர்கள் கூறுகின்றனர்.

இங்கு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காஷ்மீர் ஏன் ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது? இது குறித்து சிலரிடம் பேசினோம்.

இந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக இந்திய நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குனர் ரஷ்பால் சஹி இவ்வாறு கூறுகிறார், "பிராட்ஃபோர்டில் காஷ்மீர் ஒரு தேர்தல் பிரச்சனையாக உருவெடுக்க காரணம், தெற்காசியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளதுதான். இந்த பிரச்சனை அவர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கிறது."

இளைஞர்களிடையே வேலையின்மை, வறுமை மற்றும் பெண்களுக்கு எதிரான பாகுபாடு ஆகியவை இந்த நகரத்தில் முக்கியமான பிரச்சினைகள். ஆனால் காஷ்மீர் பிரச்சினை தெற்காசிய மக்களுக்கும் மிகவும் முக்கியமானது.

பிராட்போர்டை தளமாகக் கொண்ட பாகிஸ்தான் வம்சாவழியைச் சேர்ந்த ஒரு வணிகக் குடும்பத்தை சந்தித்தோம். இந்த குடும்பத்தின் முதல் தலைமுறை பாகிஸ்தான் காஷ்மீரின் மிர்பூர் மாவட்டத்தில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்து தங்கிவிட்டது. ஆனால் இன்றும் காஷ்மீர் அவர்களுக்கு ஒரு உணர்ச்சிபூர்வமான பிரச்சனையாக இருக்கிறது.

மசூத் சாத்கி, அவரது மனைவியும், சமூக சேவகியுமான ருக்சானா சாத்கி, கல்லூரியில் படிக்கும் மகள் ஹானா சாத்கி என குடும்பத்தினர் அனைவருமே காஷ்மீர் பிரச்சனையில் இந்தியா மீது கோபத்தில் உள்ளனர்.

"இப்போது இங்கு இரண்டு எம்.பி.க்கள் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். இந்தப் பகுதியில் காஷ்மீரிகள் கணிசமான அளவில் வசிக்கின்றனர். தேர்தல்களில் வேட்பாளர்கள் தங்கள் வாக்காளர்களுக்கு விஷயங்களை தெளிவாக புரிய வைக்கவேண்டும். காஷ்மீர் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பும் வேட்பாளர்களையே அவர்கள் விரும்புகின்றனர்" என்று மசூத் சாத்கி கூறுகிறார்.

இந்த பிரச்சினை இந்திய மற்றும் பாகிஸ்தான் வம்சாவழியைச் சேர்ந்த மக்களிடையே வெறுப்புச் சுவரை எழுப்பியுள்ளது.

"நாங்கள் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் அனுசரித்துச் செல்கிறோம். நாங்கள் ஒருபோதும் சுவரை உடைக்க முயற்சிக்கவில்லை. ஒதுங்கி இருக்கிறோம், சுவரை உடைக்க முயற்சிப்பதில்லை" என்கிறார் ருக்சானா சாத்கி.

16 வயது நிரம்பிய ஹானா சாத்கிக்கு வாக்களிக்கும் வயது இல்லை என்றாலும், இந்த பிரச்சினையில் அவருக்கும் வலுவான கருத்துக்கள் உள்ளன.

"இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஒரு விவாதம் இருக்கிறது. அதற்கு மதம் மட்டும் காரணம் அல்ல என்று சொன்னாலும், மதமும் நிச்சயமாக ஒரு பங்கை வகிக்கிறது" என்று ஹானா கூறுகிறார்.

இந்திய மக்களின் அணுகுமுறை

பிராட்போர்டில் உள்ள இந்து சமூகத்திற்கும் காஷ்மீர் பிரச்சினை முக்கியமானது.

பிராட்போர்டில் உள்ள ஒரு கோவிலில் மதியம் 12 மணிக்கு ஆரத்தி தொடங்குகிறது, இதில் பெரும்பாலும் வயதான பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்துக் கொண்டனர்.

ஆர்த்தி முதல் தளத்தில் நடைபெறுகிறது. அலுவலகம், சமையலறை போன்றவை தரைத் தளத்திலும் இயங்குகின்றன.

இந்த கோயிலின் நிர்வாகக் குழுவில் ராகேஷ் சர்மாவும் ஒரு முக்கிய உறுப்பினர்.

1974 ஆம் ஆண்டில், அவர் டெல்லியில் இருந்து இங்கு வந்து குடியேறினார். தங்கள் நகரத்தில் காஷ்மீர் ஒரு தேர்தல் பிரச்சனை என்பதில் சந்தேகமே இல்லை என்று அவர் ஒப்புக்கொள்கிறார்.

பிபிசியிடம் பேசிய அவர், "இங்குள்ள பெரும்பாலான எம்.பி.க்கள் பாகிஸ்தான் வம்சாவழியைச் சேர்ந்தவர்கள், தொழிற்கட்சியைச் சேர்ந்தவர்கள் 370 வது சட்டப்பிரிவை இந்தியா நீக்கியது சட்டவிரோதமானது என்று கூறுகிறார்கள். தொழிற்கட்சி முஸ்லிம்களுக்கு அதிக ஆதரவு கொடுக்கிறது, இந்தியர்களுக்கு ஆதரவாக இல்லை என்று இந்தியர்கள் நினைக்கின்றனர்" என்று தெரிவித்தார்.

காஷ்மீரில் மனித உரிமைகளை மீட்டெடுப்பது குறித்து தொழிற்கட்சி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதாகவும் கூறப்படுகிறது.

இதன் பின்னர், கட்சி தனது தேர்தல் அறிக்கையில் காஷ்மீர் குறித்து 'மேலும் தலையிடும்' என்ற கொள்கை குறித்தும் குறிப்பிட்டிருக்கிறது.

தொழிற்கட்சியின் காஷ்மீர் தொடர்பான இந்த கொள்கை இந்திய இந்துக்களை கட்சியில் இருந்து விலக்கி வைத்திருக்கிறது.

52 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாபிலிருந்து இங்கு வந்தவர் முகேஷ் சாவ்லா. ஆனால் இந்தியாவுடனான அவரது தொடர்பு இன்னும் வலுவாகவே உள்ளது.

"எதிர்க்கட்சித் தலைவரும் தொழிலாளர் கட்சியின் எம்.பி.யுமான ஜெர்மி கோர்பின் இந்தியா 370 வது சட்டப் பிரிவை நீக்குவதை எதிர்த்தார், இதனால், இந்திய சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை ஆதரிக்கத் தொடங்கிவிட்டார்கள். மறுபுறம், கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் பேசும்போது, காஷ்மீர் இந்தியாவின் உள் விவகாரம், அதில் நாம் தலையிடக்கூடாது என்று கூறினார். அதனால்தான் இந்தியர்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாளர்களாகிவிட்டார்கள்" என்று முகேஷ் சாவ்லா கூறுகிறார்.

காஷ்மீர் பிரச்சனையில் கேள்வி

இங்குள்ள தேர்தல்களிலோ அல்லது அரசியலிலோ காஷ்மீர் விவகாரம் ஒரு பகுதியாக இருக்கக்கூடாது என்பதே இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள் சிலரின் வாதமாகும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து பிராட்போர்டுக்கு வந்தவர் பூர்வா கண்டேல்வால். இங்கு நடைபெறும் தேர்தலில் காஷ்மீர் பிரச்சனை எழுப்பப்படக்கூடாது என்கிறார் அவர்.

"இந்த விஷயம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலானது என்று நான் நினைக்கிறேன். பிரிட்டனின் அரசாங்கமோ அல்லது இங்குள்ள மக்களோ காஷ்மீர் விஷயத்தில் தலையிடக்கூடாது".

கட்சிகளின் காஷ்மீர் கொள்கையின் அடிப்படையில் தெற்காசிய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்கப் போகிறார்கள், ஆனால் தேர்தலுக்குப் பிறகு மக்கள் இந்த பிரச்சனையை மறந்துவிடலாம் என்றும் பூர்வா கண்டேல்வால் நினைக்கிறார்.

"குறிப்பிட்டுச் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு கட்சிகளால் இந்த விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது. இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் அங்கு விரிந்துள்ள பெரிய சந்தையானது, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க வைக்காது..." என்று சொல்கிறார் மசூத் சாத்கி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்