குடியுரிமை சட்ட மசோதா: இம்ரான்கான், பாகிஸ்தான் இந்துக்களின் நிலைப்பாடு என்ன?

குடியுரிமை சட்ட மசோதா: பாகிஸ்தான் பிரதமர், இந்துக்களின் நிலைப்பாடு என்ன? படத்தின் காப்புரிமை Getty Images

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றிய நாள், அண்டை நாடான பாகிஸ்தானின் ஊடகங்கள் முற்றிலும் மாறுபட்ட பிரச்சனையில் கவனம் செலுத்தின. லாகூரில் வழக்கறிஞர்களுக்கும், மருத்துவர்களுக்கும் இடையிலான மோதல் அந்நாட்டில் தலைப்பு செய்திகளில் இடம்பெற்றன.

இருப்பினும், அதற்கு அடுத்த நாளே, இந்தியாவின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா சர்வதேச சட்டங்களை மீறுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

"நரேந்திர மோதி தலைமையில், இந்து மேலாதிக்கவாதத்தை நோக்கி இந்தியா நகர்ந்து வருகிறது" என்று தனது ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கொண்ட சில சமூக ஊடக பயன்பாட்டாளர்கள், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிலிருந்து முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டது குறித்து பேசுவதற்கு முன், பாகிஸ்தான் தனது நாட்டிலுள்ள சிறுபான்மையினரின் அவலநிலை குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தனர்.

இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தொடர்பான இம்ரான் கானின் கருத்துக்கு ட்விட்டரில் எதிர்வினை ஆற்றியுள்ள ராஜா அட்டா-உல் மன்னன் என்பவர், "உங்களது தலைமையில் பாகிஸ்தான் எங்கே போகிறது? உங்கள் அரசாங்கத்தில், அட்டாக்கில், ஒரு பெண் உதவி ஆணையர், காவல் ஆணையர் மற்றும் "ஆண்கள்" நிறைந்த அறையில் ஒரு கும்பலால் துன்புறுத்தப்பட்டார். அகமதியாகளை அகமதியா & பாகிஸ்தானியர்கள் என்று அழைத்ததே அவரது குற்றம்" என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அகமதியா உள்ளிட்ட பாகிஸ்தானில் உள்ள சமூகங்களிடையே உள்ள ஒற்றுமை பற்றி கூட்டம் ஒன்றில் பேசியதற்காக, அங்குள்ள கும்பலால் தொந்தரவுக்குட்படுத்தப்பட்ட பெண் காவல்துறை துணை ஆணையர், தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்பதை போன்ற காணொளி ஒன்று சமீபத்தில் பாகிஸ்தான் வைரலானது. அதைத்தான் அவர் தனது ட்விட்டர் பதிவில் மேற்கோள்காட்டி கருத்துத் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்நிலையில், இந்தியாவின் இந்த நடவடிக்கை தொடர்பாக தனது வாராந்திர கூட்டத்தில் பேசிய பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் முஹம்மது பைசல், இந்தியாவின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, ஒரு தீவிரவாத இந்துத்துவ சிந்தனையின் நச்சு கலவையால் இயக்கப்படுகிறது என்று கூறினார்.

"இந்த சட்டம் பல தசாப்தங்களாக வலதுசாரி இந்து தலைவர்களால் இடைவிடாமல் முன்னிலைப்படுத்தப்பட்டு வரும் 'இந்து ராஷ்டிரா' என்ற கருத்தாக்கத்தை அடைவதற்கான மற்றொரு முக்கிய படியாகும்" என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியாவின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கும் பாஜகவுக்கும் எதிராக பாகிஸ்தானிலுள்ள தொலைக்காட்சிகள் காரசாரமான விவாதங்களை முன்னெடுத்தன. இந்தியாவின் செயல் ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரானது என்றும் குறிப்பிடப்பட்டன.

இந்நிலையில், பாகிஸ்தான் அரசு மற்றும் ஊடகங்களின் கருத்துடன் அந்நாட்டு மக்களும் உடன்படுவதாகவே தெரிகிறது.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய பாகிஸ்தான் சேர்ந்த ஜாஃபெரி, "இது இந்தியாவின் மதச்சார்பற்ற பிம்பத்தை நேரடியாக பாதிக்கிறது; மோதியின் இந்தியா இரண்டு தேசக் கோட்பாடு சரியானதே என்பதை நிரூபிக்கிறது" என்று கூறினார்.

இந்தியாவில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது பாகிஸ்தானுக்கு கிடைத்த படிப்பினை என்றும் அவர் கூறினார்.

"ஒரு நாடு அனைத்து சமூகங்களையும் அரவணைத்து செல்ல வேண்டும். அரசாங்கங்கள் ஒரு சமூகத்தை ஓரங்கட்டவும், குறிவைக்கவும் தொடங்கும் போது, ​​அவர்களின் சர்வதேச அடையாளம் பாதிக்கப்படும்."

இஸ்லாமாபாத்தை சேர்ந்த தொழிலதிபரான சர்மத் ராஜா, "இந்தியா மீண்டும் தான் ஒரு ஜனநாயக நாடு அல்ல என்பதை நிரூபிக்கிறது. அதுமட்டுமின்றி, அந்நாட்டு தன்னுடைய மதவழிபட்ட ஆட்சியை நோக்கி பயணிக்கிறது" என்று கூறுகிறார்.

இந்தியா நிறைவேற்றிலுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து கருத்துத் தெரிவித்த பாகிஸ்தானில் ஊரகப்பகுதி ஒன்றில், ஊராட்சித் தலைவராக இருக்கும் இந்து மதத்தை சேர்ந்த ப்ரீத்தம் தாஸ், "நாங்கள் முஸ்லிம்களை ஒதுக்கும் இந்தியாவின் நடவடிக்கையை எதிர்க்கிறோம். ஆனால், பாகிஸ்தானில் தாங்கள் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளதாக நினைப்பவர்கள், இதை ஒரு சாதகமான வளர்ச்சியாக கருதுகிறார்கள்" என்று கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பாகிஸ்தானில் இந்து திருமணங்கள் 2017ல் சட்டபூர்வமானவையாக ஏற்கப்பட்டன.

பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் அமர் குரிரோ, அந்நாட்டில் இந்துக்கள் அதிகளவில் வாழும் சிந்து மாகாணத்தில் வசிக்கிறார். அங்கு ஐந்து மில்லியனுக்கும் அதிகமான இந்துக்கள் வாழ்கின்றனர்.

"பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் தங்கள் சிந்தி அடையாளத்தில் பெருமிதம் கொள்கிறார்கள்; அவர்கள் இந்தியாவுக்கு குடிபெயர விரும்புகிறார்கள் என்ற கருத்து பெரும்பாலும் தவறானது" என்று அமர் கூறுகிறார்.

"இந்தியாவுக்கு மிகவும் குறைவானவர்களே செல்கிறார்கள். அப்படி சென்றவர்களும், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் மீண்டும் பாகிஸ்தானுக்கே வந்த கதைகளும் உண்டு. இந்தியாவின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் மூலம், பல பாகிஸ்தானிய இந்துக்கள் இந்தியாவுக்கு செல்வார்கள் என்று நான் நினைக்கவில்லை" என்று அமர் மேலும் கூறுகிறார்.

ஐக்கிய நாடுகள் அவை கருத்து

இந்தியாவின் புதிய குடியுரிமை சட்டத் திருந்த மசோதா அடிப்படையிலேயே பாரபட்சமானது என்று நாங்கள் கவலைப்படுகிறோம் என்று ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

"பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து மத ரீதியிலான துன்புறுத்தலின் காரணமாக இந்தியாவுக்கு வந்த இந்துக்கள் உள்ளிட்ட ஆறு மதத்தை சேர்ந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் இந்த சட்டத்தில் முஸ்லிம்களுக்கு இடமளிக்கப்படவில்லை. இதுபோன்ற சட்டத் திருத்தங்கள் மக்கள் தேசியத்தை அணுகுவதில் பாரபட்சமான விளைவை ஏற்படுத்தும்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த வழக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதை கவனித்து வருவதாகவும், மேலும் அசாமில் குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிரான வன்முறைகளில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளது குறித்து தாங்கள் கவலை கொண்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: