போரிஸ் ஜான்சன் பிரிட்டனின் மோதி என்று ஏன் அழைக்கப்படுகிறார்?

போரிஸ் ஜான்சன் பிரிட்டனின் மோடி என்று ஏன் அழைக்கப்படுகிறார்? படத்தின் காப்புரிமை Getty Images

'போரிஸ் ஜான்சன் பிரிட்டனின் மோதி' - பிரிட்டனில் வாழும் புலம்பெயர்ந்த இந்தியர்களின் கருத்து இது.

பிரதமர் நரேந்திர மோதியைப் போல பிரிட்டன் பிரதமர் பிரபலமாக இல்லை, ஆனால் கருத்தியல் ரீதியில் இருவரும் ஒன்றுபோல் இருப்பதால் இப்படி கூறுவதாக பிரிட்டன் வாழ் இந்தியர்கள் கூறுகின்றனர்.

போரிஸ் ஜான்சன் எதிர்காலத்திலும் தேர்தலில் வெற்றி பெறும் ஆற்றல் கொண்டவர் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. 25 ஆண்டுகளில் ஜான்சன் தனது கட்சியை முதல் முறையாக மகத்தான வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றுள்ளார்.

அனைவருக்கும் இந்த கருத்துக்களுடன் உடன்பாடு இல்லை என்றாலும், "இரு தலைவர்களுக்கிடையில் ஒற்றுமை ஏதேனும் இருக்கிறதா என்று என்னால் கூற முடியாது. நாங்கள் கன்சர்வேடிவ் கட்சிக்கு வாக்களித்தோம், எனவே எங்களுக்கு திருப்தியாக இருக்கிறது. ஆனால் பலர் பிரெக்ஸிட் என்ற விஷயத்தை மனதில் வைத்தே போரிஸுக்கு வாக்களித்தனர்" என்று கூறுகிறார் பிராட்போர்டில் உள்ள ஆலயம் ஒன்றின் நிர்வாகக்குழுத் தலைவர் முகேஷ் சர்மா.

இந்திய சமூகத்தின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்த போரிஸ் ஜான்சன், இந்திய வம்சாவளி வாக்காளர்களை ஈர்க்க நிறைய முயற்சிகளை மேற்கொண்டார்.

படத்தின் காப்புரிமை FACEBOOK / BORIS JOHNSON

கன்சர்வேடிவ் கட்சியின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்களின் எண்ணிக்கையும், ஐந்தில் இருந்து ஏழாக அதிகரித்திருக்கிறது. தொழிலாளர் கட்சியில் இருந்தும் ஏழு வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ப்ரீத்தி படேல் உள்துறை அமைச்சராக தொடரும் வாய்ப்பு இருக்கிறது. போரிஸின் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்கள் இருப்பதைப் போலவே, எதிர்க்கட்சியிலும் இந்திய வம்சாவளி எம்.பிக்கள் இருப்பார்கள்.

தேர்தல் பிரசாரத்தின்போது லண்டனில் உள்ள நீஸ்டன் ஆலயத்திற்குச் சென்ற போரிஸ் ஜான்சன், கன்சர்வேடிவ் கட்சி இந்தியாவுடன் நெருக்கமாக இருக்கிறது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களின் நண்பன் என்பதை உணர்த்தினார்.

அங்கு பேசிய போரிஸ் ஜான்சன், பிரதமர் நரேந்திர மோதியுடன் தனிப்பட்ட நட்புக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். பிரிட்டனின் வளர்ச்சிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 லட்சம் மக்களின் கணிசமான பங்களிப்பு இருப்பதையும் அப்போது அவர் ஒப்புக் கொண்டார்.

வியாழக்கிழமை தேர்தல் முடிவுகள் வந்தபோது, கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்றது. இது 1987க்குப் பிறகு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றும் கூறப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Reuters

பிரெக்ஸிட்டிலிருந்து வெளியேறுவது சுலபமாக இருக்குமா?

பிரெக்ஸிட் தொடர்பான வாக்குறுதியின் அடிப்படையில் இந்த தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. கன்சர்வேடிவ் கட்சி ஆட்சிக்கு வந்தால், பிரிட்டன் உடனடியாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் என்று போரிஸ் ஜான்சன் உறுதியளித்தார்.

அடுத்த மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறப்போவதாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், பிரிட்டனின் உள்துறை அமைச்சருமான ப்ரீத்தி படேல் புதன்கிழமை இரவு தெரிவித்தார்.

இப்போது எந்தவொரு நாட்டுடனும் தனது உறவை ஏற்படுத்தும் சுதந்திரம் பிரிட்டனுக்கு இருக்கும் என்பதே இதன் பொருள்.

ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது ஒன்றும் அவ்வளவு எளிதானது அல்ல என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இந்த விஷயத்தை விவாகரத்துக்கு ஒப்பிடுகிறார் மான்செஸ்டரின் தொழிற்கட்சியின் ஆதரவாளரான தில்பாக் தனேஜா. நீண்டகால திருமண உறவுக்குப் பிறகு விவாகரத்து பெறும் தம்பதிகளின் நிலைக்கு ஒத்தது இது என்று அவர் சொல்கிறார்.

விவாகரத்துக்குப் பிறகு, இரு தரப்பும் தனிமையை உணரும். புதிய நண்பர்களைத் தேடும், ஆனால் அது அவ்வளவு எளிதாக இருக்காது என்று அவர் கூறுகிறார்.

பிரிட்டனுடனான நெருக்கமான வணிக உறவுகள் குறித்து பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். முதல் படியாக அமெரிக்காவுடன் ஒரு பெரிய வர்த்தக உறவை போரிஸ் ஜான்சன் உருவாக்குவார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவுடனான உறவு எப்படி இருக்கும்?

இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் இருக்கும் வலுவான உறவு மேலும் பலப்படும் என்று நீண்டகாலமாக தொழிலாளர் கட்சியுடன் தொடர்புடைய லார்ட் மேக்னாத் தேசாய் கூறுகிறார்.

பிரெக்ஸிட்டுக்குப் பிறகு, போரிஸ் ஜான்சன் மேற்கொள்ளும் முதல் பயணம் இந்தியாவுக்குச் செல்வதாகவே இருக்கும் என்று இங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் கருதுகிறார்கள்.

பிரதமர் முதலில் இந்தியாவுக்குதான் செல்ல வேண்டும் என்று லண்டனில் கடை வைத்திருக்கும் ஈஸ்வர் பிரதான் விரும்புகிறார்.

"போரிஸ் ஜான்சனுக்கு இந்தியாவுடன் பழைய தொடர்பு உள்ளது. அவரது முன்னாள் மனைவி ஓர் இந்தியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. லண்டன் மேயராக இந்தியா சென்றுள்ளார் போரிஸ் ஜான்சன். அடிப்படையில் அவர் இந்தியாவிற்கு ஆதரவானவர்" என்று அவர் கூறுகிறார்,

இந்தியாவிற்கும் பிரிட்டனுக்கும் நீண்டகல வரலாற்று உறவுகள் இருந்தாலும், அது அதிக ஆழமற்றது. அவ்வப்போது அதில் சற்று சுணக்கமும் இருந்துள்ளது. இருதரப்பு வர்த்தகமானது சுமார் 15-17 பில்லியன் டாலர்களாக உள்ளது.

பிரிட்டனுடனான இந்தியாவின் வர்த்தக உறவுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை விட மிக நெருக்கமானவை.

இத்தகைய சூழ்நிலையில், பிரிட்டனுடன் வர்த்தக உடன்படிக்கையை மேற்கொள்வதன் மூலம் இந்தியாவுக்கு பெரிய அளவில் நன்மை ஏற்படாது.

இந்த நேரத்தில் இந்தியாவுக்கு பிரிட்டனின் உறவு தேவை என்பதைவிட, இந்தியாவின் உறவே பிரிட்டனுக்கு அதிகம் தேவை.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரேந்திர சர்மா, தொழிலாளர் கட்சியின் எம்.பியாக ஐந்தாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இந்தியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையில் ஒரு பாலமாக பணியாற்ற முடியும் என்று அவர் கூறுகிறார்.

"அதிகாரத்திற்கு வரும் எந்தவொரு கட்சியாக இருந்தாலும் சரி, அது இந்தியாவுடன் வலுவான உறவைப் பேண வேண்டும். காஷ்மீர் குறித்து எங்கள் கட்சித் தலைவர் ஜெர்மி கோபைன் எடுத்த நிலைப்பாட்டை நானே மறுதலித்துள்ளேன்" என்று வீரேந்திர சர்மா கூறுகிறார்.

அவரைப் பொறுத்தவரை, இந்தியா மிகப்பெரிய சந்தை, இந்தியாவுடன் ஏற்படும் வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் சாதகமாக இருக்கும்.

இந்தியாவைச் சேர்ந்த சுமார் 900 நிறுவனங்கள், இங்கு அலுவலகங்களை திறந்து ஐரோப்பாவில் வர்த்தகம் செய்கின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption போரிஸ் ஜான்சன்

ஜாலியன்வாலாபாக் சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்பார்களா?

வெள்ளிக்கிழமையன்று தேர்தல் முடிவுகள் வெளியானப் பிறகு, பல வெளிநாட்டு இந்தியர்களுடன் பேசினோம். இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர வர்த்தகம் அதிகரிக்கக்கூடும், இந்திய இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை புரிந்துக் கொள்ள முடிந்தது. ஆனால் இதுமட்டுமே இரு தரப்பினருக்கும் போதுமானதாக இருக்காது.

போரிஸ் ஜான்சன், ஜாலியன்வாலாபாஹ் படுகொலைக்கு முறையாக மன்னிப்பு கேட்டால், அது பிரிட்டன் - இந்திய நட்பில் ஒரு புதிய பரிணாமத்தை தொடங்குவதாக இருக்கும் என்று உணவகம் ஒன்றின் உரிமையாளர் சுர்ஜித் சிங் கருதுகிறார்.

ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கோருவதாக தொழிலாளர் கட்சி முறையாக உறுதியளித்திருந்தது. இப்போது பெரும்பான்மை பலம் கொண்ட போரிஸ் ஜான்சனின் அரசால் அதைச் செய்ய முடியும்.

மறுபுறம், போரிஸ் ஜான்சன் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த முயற்சிப்பார் என்று பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர்களும் நினைக்கிறார்கள். போரிஸ் மற்றும் மோடியின் நட்பு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மெருகூட்டும் என்று பிபிசியின் சஜித் இக்பாலின் கருதுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: