வடகொரியாவை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அமெரிக்கா

கின் ஜாங் மற்றும் ட்ரம்ப் படத்தின் காப்புரிமை Reuters
Image caption டிரம்ப் - கிம் (கோப்புப் படம்)

அமெரிக்கா - வட கொரியா பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, வட கொரியா கடந்த வாரம் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து முக்கிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், பேச்சுவார்தையைத் தொடரும்படி வட கொரியாவை மீண்டும் அழைத்துள்ளது அமெரிக்கா.

வடகொரியாவுக்கான அமெரிக்க பிரதிநிதி ஸ்டீஃபன் பீகன் இவ்விதம் அழைப்பு விடுத்தார்.

இந்த ஆண்டு முடிவுக்குள், வடகொரியா மேல் விதித்த தடைகளை நீக்கும் ஷரத்துகளுடன் கூடிய அணு ஆயுதநீக்க ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்கா எட்டவேண்டும் என வடகொரியா கூறியிருந்தது.

தவறினால் அமெரிக்கா அபாயகரமான கிறிஸ்துமஸ் பரிசு ஒன்றை எதிர்பார்க்கலாம் எனவும் வடகொரியா கூறியிருந்தது.

வடகொரியாவுக்கான அமெரிக்க பிரதிநிதி பீகன், வடகொரியாவின் இந்த கூற்றை விரோதமானது ,எதிர்மறையானது மற்றும் தேவையில்லாதது என கூறியுள்ளார். மேலும் அமெரிக்காவுக்கு இலக்கு இருக்கிறது. ஆனால் யாரும் அதற்கு கெடு விதிக்க முடியாது என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், அவர் வடகொரியாவை அமெரிக்காவுடன் பேச வருமாறு அழைத்திருக்கிறார். "எங்களிடம் எப்படி வந்து பேச வேண்டும் என்று உங்களுக்கு தெரியும். நாங்கள் இங்குதான் உள்ளோம். இதை பேசி முடிப்போம்" எனக் கூறியுள்ளார் பீகன்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரியா அணு ஆயுத திட்டத்தை நிறுத்தும்வரை இந்த தடைகள் நீக்கப்படாது எனக்கூறியிருந்தார்.

ஆனால் ஒப்புக்கொள்ளும் வகையில் அமெரிக்கா உடன்படிக்கை செய்யாவிடில் தாங்கள் வேறு வழியை கண்டறியப்போவதாக வடகொரியா கூறியுள்ளது.

வடகொரியா செய்த சோதனை:

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு வடகொரியா உடன்படுவதுபோல் தெரியவில்லை. மாறாக அந்நாடு அணு ஆயுத சோதனையை மேற்கொள்ளுதலில் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

டிசம்பர் 8 அன்று ஒரு முக்கிய சோதனையை மேற்கொண்ட வடகொரியா, ஒரு வாரத்திற்குள் மீண்டும் டிசம்பர் 14 அன்று மற்றொரு சோதனையை நடத்தியது.

இந்த இரண்டு சோதனைகளும் சோஹே செயற்கைகோள் ஏவு தளத்தில் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தளத்தை மூடுவதாக வடகொரியா முன்னர் உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

என்ன சோதனை என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகள் சங்கத்திலிலுள்ள வல்லுநர் அங்கித் பாண்டா இது பேலிஸ்டிக் ரக ஏவுகணைக்கான அடிப்படையாக இருக்கலாம் என பிபிசியிடம் கூறியுள்ளார்.

அமெரிக்கா-வடகொரியா உறவு

படத்தின் காப்புரிமை Reuters

அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையேயான அணு ஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

வடகொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2018ல் சிங்கப்பூரில் சந்தித்தனர். இந்த சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. பின்னர் வியட்நாமில் 2019ன் தொடக்கத்தில் சந்தித்து அணு ஆயுத நீக்கம் தொடர்பாகப் பேசினர்.

வட மற்றும் தென் கொரிய எல்லைப் பகுதியில் உள்ள ராணுவ நீக்கம் செய்யப்பட்ட பகுதியில் ஜூன் மாதம் பேச்சுவார்த்தை நடை பெற்றது.

ஆனால் ஸ்வீடனில் நடைபெற்ற அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து வடகொரியா மீண்டும் குறுகிய தூர பேலிஸ்டிக் ஏவுகணை சோதனையை தொடங்கியது.

இந்த இரு ஆண்டுகளில் அதிபர் டிரம்புக்கு எதிராக மீண்டும் வடகொரியா பேசத் தொடங்கியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: