பர்வேஸ் முஷாரஃப்: மரண தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் ராணுவ சர்வாதிகாரி - யார் இவர்?

Former Pakistani president Pervez Musharraf in 2004 படத்தின் காப்புரிமை EPA

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மற்றும் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் பர்வேஸ் முஷாரஃபுக்கு ராஜதுரோக வழக்கு ஒன்றில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது இஸ்லாமாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம்.

2001 - 2008 காலகட்டத்தில் நாட்டின் அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரஃப், 2007ஆம் ஆண்டு அவசர நிலையை பிரகடனப்படுத்தி அரசமைப்பை மீறி ராஜதுரோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ராணுவ ஜெனரல் முஷாரஃப் 2016ஆம் ஆண்டு முதல் துபாயில் வசித்து வருகிறார்.

இந்த மாத தொடக்கத்தில் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த இரு தசாப்தங்களாக முஷாரப்பின் வாழ்வானது நிச்சயமற்ற ஒன்றாக இருக்கிறது.

1999ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்பின் மூலம் ஆட்சியைப் பிடித்த முஷாரஃபை படுகொலை செய்ய பல்வேறு முறை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவற்றில் இருந்து தப்பிப் பிழைத்தவர் முஷாரஃப்.

ஆனால், கொலை முயற்சிகளில் தப்பிய ராணுவ சர்வாதிகாரி முஷாரஃபுக்கு அரசியல் களம் அவ்வளவு இலகுவானதாக இல்லை. 2008ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவர் தோற்றார்.

யார் இந்த பர்வேஸ் முஷாரஃப்?

1943ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி டெல்லியில் உள்ள உருது மொழி பேசும் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் பர்வேஸ் முஷரஃப்.

படத்தின் காப்புரிமை Reuters

1947ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தது முஷாரஃப் குடும்பம்.

ராணுவத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய அவர், 1998ஆம் ஆண்டு நவாஸ் ஷெரீஃப் ஆட்சியின் போது ராணுவ தளபதி ஆனார். பொறுப்பேற்ற சிறிது காலத்திலேயே நவாஸ் ஆட்சியைக் கவிழ்த்து, நாட்டின் தலைமை பொறுப்பை கைப்பற்றினார்.

அந்த சமயத்தில் நவாஸின் புகழ் சரிவின் விளிம்பிலிருந்தது. பொருளாதார சரிவு, காஷ்மீர் குழப்பம் என பல்வேறு தளங்களில் நவாஸ் தோல்வியைச் சந்தித்திருந்தார். காஷ்மீர் பகுதியில் ஊடுருவி அதனை தனதாக்கிக் கொள்ள பாகிஸ்தான் எடுத்த முயற்சியும் தோல்வியைச் சந்தித்து இருந்தது. இந்த தோல்விக்குப் பொறுப்பேற்றுக் கொள்ள ராணுவம் விரும்பவில்லை.

முஷாரஃபை ராணுவ தளபதி பதவியிலிருந்து நீக்கி வேறொருவரை நியமிக்க நவாஸ் காய்களை நகர்த்தினார், அதற்கு முன்பு ராணுவத்தின் ஆதரவுடன் நவாஸ் ஆட்சியைக் கவிழ்த்தார் முஷாரஃப்.

'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்'

செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின் காட்சிகள் மாற தொடங்கின.

இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின் ஜார்ஜ் புஷ், 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' ஒன்றை அறிவித்தார். இதற்கு ஆதரவு தெரிவித்தார் முஷ்ரஃப்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று அறிவித்தது தாலிபன் மற்றும் அல் கொய்தாவுக்கு எதிரான போரை. ஆனால், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இந்த அமைப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது.

தாலிபன் மற்றும் அல் கொய்தா ஆதரவாளர்களை முஷ்ரஃப் அரசு ஒடுக்கத் தவறிவிட்டதாக நேட்டோ மற்றும் ஆஃப்கன் அரசு தொடர்ந்து குற்றஞ்சாட்டியது.

2011ஆம் ஆண்டு அல்கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன், மிலிட்டரி அகாடெமி அருகே சுட்டுக் கொல்லப்பட்ட போது, மீண்டும் முஷாரஃப்பை நோக்கி கேள்விகள் எழுந்தன. ஆனால், தீர்க்கமாக தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார் அவர். பின் லேடன் இங்கு இருந்தது தமக்குத் தெரியாது என்றார்.

வீழ்ச்சியின் தொடக்கம்

முஷ்ரஃப் அதிகாரத்திலிருந்த போது, நீதித்துறையுடன் பல்வேறு முறை முரண்பட்டிருக்கிறார். குறிப்பாகப் பாகிஸ்தான் தலைவராக இருந்த போது, ராணுவத்துக்கும் தளபதியாக இருக்க விரும்பினார். அப்போது நீதித் துறை இவருடன் முரண்பட்டது.

2007ஆம் ஆண்டு பாகிஸ்தான் தலைமை நீதிபதி இஃப்திகார் முகம்மது செளதிரியை பதவியிலிருந்து நீக்கினார். இது நாடெங்கும் போராட்டம் வெடிக்கக் காரணமாக அமைந்தது.

படத்தின் காப்புரிமை AFP

இஸ்லாமாபாத் லால் மஸ்ஜித் மீது முஷாரஃப் தாக்குதல் நடத்த உத்தரவிட்டதில் குறைந்தது 100 பேர் பலியானார்கள். அந்த பள்ளிவாசலின் மதகுருக்கள் ஷரியா சட்டத்தை பாகிஸ்தான் தலைநகரில் அமல் செய்ய முயன்றனர் என்பதுதான் அவர்கள் மீதான குற்றச்சாட்டு.

இந்த தாக்குதல் 'பாகிஸ்தான் தாலிபன்' உருவாகக் காரணமானது. இதன்பின்பு ஏராளமான குண்டுவெடிப்பு தாக்குதல்கள் பாகிஸ்தானில் நடந்தன. பாகிஸ்தான் வரலாற்றில் ரத்தம் தோய்ந்த நாட்கள் அவை.

நாடுகடத்தப்பட்ட நவாஸ் 2007ஆம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பினார், முஷாரஃப்பின் வீழ்ச்சியானது இந்தப் புள்ளியில்தான் தொடங்கியது.

தனது பதவி காலத்தை நீட்டித்து கொள்ள. அவசரநிலையை பிரகடனப்படுத்த முஷாரஃப் முயற்சித்தார். ஆனால், பிப்ரவரி 2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி தோல்வியுற்றது. ஆறு மாதங்களுக்கு பிறகு தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறினார்.

மீண்டும் பாகிஸ்தான்

லண்டன், துபாய் ஆகிய நாடுகளில் வசித்த அவர், 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் திரும்பினார். ஆனால், அவமானங்களைச் சந்தித்தார். கைது செய்யப்பட்டார்.

அவர் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டது. அவரது கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கும் தேர்தலில் மோசமான தோல்வியையே சந்தித்தது.

அதன் பிறகு நீதிமன்றத்தில் அவர் மீது அடுக்கடுக்கான வழக்குகள் வந்தன. பெனாசீர் பூட்டோ 2007ஆம் ஆண்டு பாகிஸ்தானில் தாலிபான்களால் படுகொலை செய்யப்பட்டார். பெனாசீருக்கு போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என்றும் முஷ்ரஃப் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. அவர் மீது ராஜதுரோக வழக்கும் போடப்பட்டது.

மரண தண்டனை

இஸ்லாமாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் ஒன்று, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மற்றும் முன்னாள் ராணுவத் தளபதியான ஜெனரல் பர்வேஸ் முஷாரஃபிற்கு ராஜ துரோக வழக்கில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

முஷரஃப் 2007ஆம் ஆண்டு அவசர நிலையை பிரகடனப்படுத்தி அரசமைப்பை மீறி ராஜதுரோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நவாஸ் ஷெரிஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 2013ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது முஷரஃப் மீது இந்த வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை ஆறு வருட காலமாக நடைபெற்றது.

அவர் பாகிஸ்தான் அரசியலமைப்பை மீறியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. பாகிஸ்தான் வரலாற்றிலேயே அந்நாட்டின் அரசியலமைப்பை மீறிச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபர் பர்வேஸ் முஷரஃப் ஆவார்.

நீதிபதி வாகர் சேத் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இதில் இரண்டு நீதிபதிகள் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

இந்தச் செய்தி குறித்து மேலும்