"இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறோம்": ஆப்பிரிக்க பெண்கள் கதறல் - பிபிசி புலனாய்வு

  • நியாஷா கடன்தாரா
  • பிபிசி ஆப்பிரிக்கா ஐ
காணொளிக் குறிப்பு,

பிபிசி ஆப்பிரிக்கா ஐ: "என் உடலுக்காக இறக்குமதி செய்யப்பட்டேன்"

பல்வேறு பொய்கள் சொல்லி, கென்யா உள்ளிட்ட நாடுகளிலிருந்து, பல பெண்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்படுவதை, பிபிசியின் புலனாய்வுக்குழுவான `ஆப்பிரிக்கா ஐ` கண்டறிந்துள்ளது.

இவ்வாறு அழைத்துவரப்படும் பெண்கள், புதுடெல்லியில் வாழும் ஆப்பிரிக்க ஆண்களின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, பாலியல் தொழிலில் ஈடுபட நிர்பந்திக்கப்படுகின்றனர்.

2018 ஆம் ஆண்டு, தங்களுடைய வாழ்க்கை முறையை பராமரிக்க, பணம் செலவழிக்க ஆண் கொடையாளர்களை இளம் கென்ய பெண்கள் நாடும் போக்கு குறித்து புலனாய்வு செய்தது ஆப்பிரிக்கா ஐ. அப்போது, நேர்காணல் செய்யப்பட்ட பல பெண்களில் கிரேஸும் ஒருவர்.

கிரேஸ் ஒரு பாடகி, நடனக்கலைஞர் மற்றும் இசைக்கலைஞர். அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானபோது, தனது மகளை பார்த்துக்கொள்ள போராடிக்கொண்டிருந்தார்.

கிரேஸின் அந்த கதையை கூறிய பத்திரிகையாளர் நான். அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான பிறகும்கூட, நாங்கள் தொடர்பில் இருந்தோம்.

பிரபலமாக, நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று முயன்றுகொண்டிருந்த அவர், தனது வாட்ஸப்பில் உள்ள ஒரு குழுவில், இந்தியாவில் வேலைபார்க்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று வந்த செய்தியை பார்த்தார். அதில், நடனக் கலைஞர்களுக்கு வேலை தருவதாகவும், சுற்றுலா பயணிகளை உபசரிக்கும் வேலை தருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

"அதில் நல்ல பணம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால், ஒப்புக்கொண்டேன்" என்கிறார் கிரேஸ்.

தனது மகளிற்கு நல்ல எதிர்காலம் வேண்டும் என்றும், தான் சந்தித்த இன்னல்களை அவர் சந்திக்கக்கூடாது என்பதற்காகவே இவ்வளவு உழைப்பதாக அவர் நம்மிடம் கூறினார்.

புதிய வேலைக்காக இந்திய தலைநகரான புதுடெல்லிக்கு வந்து இறங்கிய கிரேஸிற்கு, தான் மோசமான ஒரு வலைக்குள் சிக்கவைக்கப்பட்டதை உணர முடிந்தது. இதனை தொடர்ந்து, எனக்கு நிர்பந்தத்தில் தொடர்ச்சியாக தகவல்களை அவர் அனுப்பி வந்தார்.

கிரேஸ் அளித்த தகவல்களை பார்த்தபிறகு, நான் கிளம்பி இந்தியா சென்றேன். புதுடெல்லியில் உள்ள ஒரு மார்க்கெட்டில் கிரேஸை சந்தித்தேன். டெல்லி விமான நிலையத்தில் இறங்கியவுடன் நேரடியாக ஒரு விபசார விடுதிக்கு தான் அழைத்துச்செல்லப்பட்டதாக அவர் என்னிடம் கூறியதோடு, இந்த புலன்விசாரணைக்கு உதவ ஒப்புக்கொண்டார்.

கிரேஸின் டெல்லி வாழ்க்கை:

கிரேஸ் தங்கியுள்ள வீட்டின் பொறுப்பாளர் கோல்டி என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறார். கிரேஸின் பயண செலவுகளை இவரே ஏற்றுள்ளார். இப்போது, கிரேஸின் பாஸ்போர்ட் கோல்டியிடம் உள்ளது. அதற்காக $4000 தனக்கு தரவேண்டும் என்று அவர் கிரேஸிடம் கேட்கிறார். கென்யாவிலிருந்து இந்தியாவிற்கு பயணிக்கும் விமான டிக்கெட்டைவிட இது ஏழு மடங்கு அதிகம். இந்த கடனை திருப்பித்தர கிரேஸிற்கு ஒரே வழிதான் உள்ளது.

ஐந்து மாதங்களாக, கடத்தி வரப்பட்ட மற்ற ஐந்து பெண்களோடு இணைந்து கிரேஸ் அந்த வீட்டில் ஒரு அறையில் தங்கியிருந்தார்.

"அடுக்குமாடி வீட்டிற்கு தினமும் ஆண்கள் வருவார்கள். பல சமயங்களில் வாடிக்கையாளர்களை வீட்டுக்கு வரவழைப்போம் அல்லது ஹோட்டல்களுக்கு செல்வோம். அறைக்குள் வாடிக்கையாளருடன் ஒருத்தி இருந்தால், மீதி பேர் வெளியே ஹாலில் தூங்குவோம். உள்ளே இருப்பவள் விஷயத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்ததும், உள்ளே சென்று தூங்குவோம்."

கிச்சன்கள்:

மாலை நேரங்களில் பெண்கள் உள்ளூரில் உள்ள கிச்சன்கள் எனப்படும் பார்களுக்குச் சென்று ஆண்களைக் கவர வேண்டும். கிச்சன்கள் என்பவை, புதுடெல்லியில் தங்கி வேலைபார்க்கும் ஆப்பிரிக்க ஆண்கள் பலரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்ட சட்டவிரோத கிளப்கள். அங்கே குடிக்கலாம், நடனமாடலாம், பாலுறவுக்காக ஆப்பிரிக்க பெண்களை தேர்வு செய்யலாம். முதன்முறை கிச்சன்களுக்கு சென்ற தனது அனுபவத்தை விவரிக்கத் தொடங்கினார் கிரேஸ்.

"நான் அங்கு சென்ற முதல் நாள், ஏராளமான பெண்களைப் பார்த்தேன். நாங்கள் உட்கார்ந்திருக்க வேண்டும். ஓர் ஆண் வந்து தேர்வு செய்வார். மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு தேர்வு செய்வது போல, அவர் எங்களைத் தேர்வு செய்வார். 'இவரை பிடித்திருக்கிறது, இவருடன் செல்கிறேன்' என்று அந்த ஆண் சொல்ல வேண்டும்."

"வழக்கமாக புதிய பெண் வந்தால் மேடம் தான் கிச்சனுக்கு அழைத்துச் செல்வார். ஆனால் நான் மற்ற சகோதரிகளுடன் சென்றேன். கழிவறைக்கு நான் செல்ல முற்பட்டபோது, ஒருவர் தடுத்து நிறுத்தி, "எவ்வளவு?" என்று கேட்டார்.

"நீங்கள் சொல்வது புரியவில்லை. காத்திருங்கள். திரும்ப வருகிறேன்" என்று அந்த ஆணிடம் சொன்னேன்.

"என் தோழியிடம் சென்று, `எவ்வளவு என்று அந்த ஆள் கேட்கிறார். நான் என்ன பதில் சொல்வது'என கேட்டேன்.

ஒரு ராத்திரிக்கா அல்லது ஒருமுறை மட்டுமா? என்று தோழி கேட்டார்.

உண்மையில் என்ன மாதிரியான தொழிலில் இருக்கிறோம் என்பது அப்போது தான் எனக்கு உறைத்தது."

"நீங்கள் 1000 ரூபாய் தர விரும்புகிறீர்களா. 1000 ஓ.கே. நோ பிராப்ளம். என்பது போல எனக்குத் தோன்றியது. அப்படியென்றால், 2.7 லட்சம் ரூபாய்க்கு நான் எத்தனை ஆண்களுடன் படுக்க வேண்டும்." என்கிறார் கிரேஸ்.

இந்த 2.7லட்சம் ரூபாயை திரும்பிக் கொடுத்தால்தான், கிரேஸின் பாஸ்போர்ட்டை தருவார் கோல்டி. தன்னுடைய கடனை எப்படி, எந்த தேதியில், எவ்வளவு தவணைகளாக கட்டினேன் என்பதை எழுதி வைத்துள்ள புத்தகத்தை நம்மிடம் கிரேஸ் காண்பித்தார்.

"இன்றைக்கு நான் மூவாயிரம் ரூபாய் கொடுத்தால் நான் 3000 என எழுதிக் கொள்வேன். கோல்டி 3000 என எழுதிக் கொள்வார். இந்த எண்களை நான் பார்க்கும்போது, எந்த ஆண்களுடன் சென்றேன் என்பது நினைவுக்கு வரும். ஏறத்தாழ அவர்கள் அனைவரையும் நினைவிருக்கும்.", கிரேஸ்.

எங்களுடைய புலனாய்வின் போது, தெற்கு டெல்லியில் ஏழு குடியிருப்புப் பகுதிகளில் குறைந்தது 15 கிச்சன்களை நாங்கள் கண்டுபிடித்தோம். அங்கே நிறைய ஆப்பிரிக்க பெண்கள், உடலை விற்கும் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எங்களுக்காக அவர் பதிவு செய்து கொண்டு வந்திருந்த காட்சிகளை, திரும்பவும் பார்த்த கிரேஸ், அதில் உள்ள ஓர் ஆணை குறிப்பிட்டு, தங்கள் பகுதியான துக்ளகாபாத் பகுதியில் இந்த பாலியல் தொழிலில் அவர் தான் முக்கியமான நபர் என்று கூறினார்.

இந்த நபரின் பெயர் எட்டி. எயின்ஸ்கா என்ற அமைப்பின் உள்ளூர் தலைவராக கருதப்படுகிறார். வெளிநாடுகளில் வாழும் ஆப்பிரிக்க மாணவர்களுக்குள் தொடர்பு ஏற்படுத்தி ஆதரவு அளிக்க சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள அமைப்பு எயின்ஸ்கா என்று ஆன்லைனிலும், இந்தியா முழுக்க பல நகரங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. நைஜீரிய தூதரகத்தால் அத்தாட்சி வழங்கப்பட்டது எனத் தோன்றும் எயின்ஸ்கா பெயரில் அதிகாரபூர்வ சுற்றறிக்கை ஒன்றை நாங்கள் கண்டோம்.

அது எங்களுக்குள் 'மணி' அடித்தது. சில கிச்சன்களின் நுழைவாயில் அருகே எயின்ஸ்காவின் தேர்தல் பிரசார சுவரொட்டிகளை நாங்கள் படம் பிடித்திருந்தோம். எட்டியை அம்பலப்படுத்த உதவுவதாக கிரேஸ் ஒப்புக்கொண்டார்.

படக்குறிப்பு,

செய்தியாளர் நியாஷா கடன்தாரா - எட்டி: நேருக்கு நேர்.

எட்டி:

கென்யாவில் இருந்து பெண்கள் இந்தியா வருவதற்கு சம்மதிக்க வைக்கும் வேலை முன்பு கிரேஸுக்கு தரப்பட்டிருந்தது. ஆனால் இங்கே வர வேண்டாம் என்று அந்தப் பெண்களை கிரேஸ் எச்சரித்துக் கொண்டிருந்தார். சில பெண்களிடம் தொலைபேசியில் பேசிய கிரேஸ், தான் ஏமாற்றப்பட்டதை குறிப்பிட்டு அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

"ஏதாவது வேலை என்று சொல்லி கூப்பிடுவார்கள். கடைசியில் விபசாரத்தில் தள்ளிவிடுவார்கள். நான் பொய் சொல்லவில்லை!" என்றார் கிரேஸ்.

இந்தியாவுக்கு வர வேண்டாம் என்று தன் தோழிகள் சிலருக்கு கிரேஸ் கூறியதால், ஒரு மேடமுக்கு உறுதியளிக்கப்பட்டவாறு பாலியல் தொழிலுக்கு ஒரு பெண் வராமல் போய்விட்டார். புதிதாக ஒரு பெண்ணை சம்மதிக்க வைத்து வரவழைக்க வேண்டும். இல்லாவிட்டால் மேடமுக்கு அதற்கான நஷ்ட ஈட்டை நீதான் செலுத்த வேண்டும் என எட்டி மிரட்டியிருக்கிறார்.

தொலைபேசி மூலம், கிரேஸிடம் இது குறித்து பேசினார் எட்டி. சமூக வலைதளங்கள் மூலமாக, நண்பர்களை அணுகி, இந்தியாவிற்கு அழைத்து வருமாறு கிரேஸிடம் கூறினார்.

படக்குறிப்பு,

எட்டி

"இந்தியா மோசம் என சொல்வதை நிறுத்திக் கொள். நீ அவர்களைப் படைக்கவில்லை. நீ ரட்சகரும் கிடையாது." என்று கிரேஸை அதட்டினார்.

இது மட்டுமின்றி, கிரேஸிற்கு ஒரு சலுகையை கொடுத்தார் எட்டி. அதாவது, அந்த மேடத்திற்கான பெண்ணை வரவழைத்த பிறகு, தனக்காக ஒரு பெண்ணையும் கிரேஸ் வரவழைத்து கொள்வதற்கான யோசனையை அவருக்கு கூறினார். இதன்மூலம் ஒரு பெண் வந்தால், அவர் கிரேஸிற்கு சம்பாதித்து கொடுப்பார் என்பது பொருள். இப்படித்தான் அந்த நெட்வொர்க் வளர்கிறது.

சுரண்டலுக்கான வலைப்பின்னல்

"உங்களை இந்தியாவுக்கு வர வைத்தவர், இந்தியாவில் உங்களுடைய தாய். அந்தப் பெண்ணை இங்கே வர வைத்தவர் உனக்கு பாட்டி. உன்னுடன் வரவைக்கப்படும் மற்ற பெண்கள் உன் சகோதரிகள். தாய் என்ற வார்த்தை நல்லது போல தோன்றும். ஆனால், யார் வரவழைத்த பெண் என்பதை அடையாளம் காண்பதற்காக இது பயன்படுத்தப்படுகிறது." என்று தெரிவிக்கிறார் கிரேஸ்.

இந்தியாவில் சுமார் ஓராண்டு முடிந்த நிலையில், எட்டியின் கடனை கிரேஸ் அடைத்துவிட்டார். ஆனால் தனக்கு ஏற்பட்ட இன்னல்களை ஈடுசெய்ய அவரிடம் எதுவும் இல்லை. இந்த நிலையில் பணம் சம்பாதிக்க ஒரே வழி, புதுடெல்லிக்கு புதிய பெண்களை வரவழைப்பது தான். இதற்கு உதவி செய்ய எட்டி தயாராக இருக்கிறார். அதில் ஆர்வம் உள்ளது போல கிரேஸ் நடித்தார்.

அவர்களிம் சந்திப்பின்போது, "ஒரு பெண்ணை வரவழைக்க என்ன நடைமுறை? எனக்கு எதுவும் தெரியாது." என்று எட்டியிடம் கிரேஸ் தெரிவிக்க, "பெண்களை கொண்டு வருவது, நீ ஏஜென்ட்களை பயன்படுத்துகிறாயா?" என்று மறுகேள்வி கேட்டார் எட்டி.

அதற்கும் தெரியாது என்று பதிலளித்தார் கிரேஸ். "பெண்ணிடம் பணம் தராதே. ஏஜென்டிடம் கொடுத்துவிடு. அந்தப் பெண் நைரோபி வந்து சேர்ந்ததும், மற்ற ஏற்பாடுகளை ஏஜென்ட்கள் செய்வார்கள். இந்தப் பணத்தைக் கொண்டு பாஸ்போர்ட், பிறப்பு சான்றிதழுக்கு கூட ஏற்பாடு செய்வார்கள்." என்று அறிவுரை வழங்கினார் எட்டி.

கிரேஸ் மூலம் இவ்வளவு ஆதாரங்கள் திரட்டிய பிறகு, தலைவரை எதிர்கொள்ள நாங்கள் தயாரானோம்.

அவருக்கு எதிராக உள்ள ஆதாரங்களை காண்பித்து அவர் நடத்தும் கிச்சன்கள் குறித்து விளக்கம் கேட்டோம். அதற்கு தான் அவ்வாறு எதுவும் செய்யவில்லை என்றும், இந்தியாவில் உள்ள ஆப்பிரிக்கர்களுக்குத் தலைவர் நான். தெரிந்து கொள்ளுங்கள். என்று பதிலளித்தார் எட்டி.

"உங்களுக்கு எதிரான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. பெண்களை ஏற்பாடு செய்வதாக நீங்கள் கூறிய ஆதாரம் உள்ளது. அவர்கள் பாலியல் தொழிலுக்காக கென்யாவில் இருந்து இந்தியாவுக்கு வருவதாகக் கூறியுள்ளீர்கள்." என்று கேட்டோம்.

அதற்கு அவர், "ஆதாரங்களை நீங்கள் என்னிடம் காட்டலாம்." என்றார்.

"காட்டுகிறோம். இப்போது இங்கே ஆதாரம் உள்ளது. இது உங்கள் கருத்தை சொல்வதற்காக அளிக்கப்படும் உரிமை. நீங்கள் பிபிசியை அணுகி பதிலை அளிப்பதற்கான உரிமை. உங்கள் பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்." என்று அவரிடம் நகல்களை கொடுத்துவிட்டு வந்தோம்.

எட்டியை மூன்று முறை Africa Eye தொடர்பு கொண்டது. கென்யாவில் இருந்து பாலியல் தொழிலுக்காக இந்தியாவுக்கு பெண்கள் யாரையும் அழைத்து வரவில்லை என அவர் மறுத்தார். பாலியல் தொழிலுக்காக பெண்களை வர வைப்பது மற்றும் விபசார விடுதி நடத்துவது தொடர்பான தகவல்கள் குறித்து மேடம் கோல்டி பதில் எதுவும் அளிக்கவில்லை.

புதுடெல்லியில் உள்ள நைஜீரிய உயர் ஆணையத்தை பிபிசி தொடர்பு கொண்டது. இந்திய மற்றும் நைஜீரிய சட்ட வரம்புகளுக்கு உள்பட்டு தான் எயின்ஸ்கா அமைப்புடன் தங்களுடைய செயல்பாடுகள் உள்ளன என்று அவர்கள் கூறினர். பாலியல் தொழிலுக்கு பெண்களை வரவழைப்பது போன்ற கிரிமினல் செயல்கள் எதற்கும் ஒப்புதல் தருவதாக இது கிடையாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

எயின்ஸ்காவை நாங்கள் தொடர்பு கொண்டபோது துக்ளகாபாத் பகுதி பணிக் குழு தலைவராக எட்டி அனிடேஹ் இருப்பதை உறுதி செய்தனர். ஆனால் அவருடைய கடமைகள், எயின்ஸ்காவின் விதிகளின்படி தான் இருக்க வேண்டும் என்றும், சட்டவிரோத நடவடிக்கைகள் எதையும் மன்னிப்பதாக அது இருக்காது என்றும் கூறினர்.

கிரேஸின் குடியேற்ற நிலை பிரச்சனைக்குத் தீர்வு காணவும், சுற்றுலா விசாவில் வந்து கூடுதல் காலம் தங்கியதற்கான அபராதத்தை செலுத்தியும், அவர் கென்யா சென்று தம் குடும்பத்துடன் சேர Afrcia Eye உதவி செய்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: