ஜாகிர் நாயக்: கோலாலம்பூர் உச்சி மாநாட்டால் மலேசியா, சௌதி உறவில் உரசலா?

மகாதீர்

பட மூலாதாரம், Getty Images

மலேசியாவில் நடைபெற்றுவரும் உச்சி மாநாடு, மதம் குறித்து விவாதிக்க கூட்டப்படவில்லை என்றும், உலகெங்கும் இஸ்லாமியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து விவாதிப்பதே மாநாட்டின் நோக்கம் என்றும் மலேசிய பிரதமர் மகாதீர் விளக்கமளித்துள்ளார்.

எனினும், இம்மாநாடு இஸ்லாமிய நாடுகளுக்கிடையே புது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. இந்த மாநாட்டுக்கு சௌதி அரேபியா வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

மலேசிய பிரதமர் அளித்துள்ள விளக்கத்தால் சௌதி அரேபியா சமாதானமடையவில்லை என்பது அதன் தலைமையில் இயங்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் வழி தெரியவருகிறது. உலகெங்கும் பல்வேறுவிதமான மோதல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் இப்படியொரு மாநாட்டை நடத்துவதை ஏற்க இயலாது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

"இஸ்லாமிய ஒத்துழைப்பு (ஓஐசி) அமைப்பை வலுவிலக்கச் செய்யும் எந்தொரு முயற்சியும் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் வலுவிலக்கச் செய்வதாகவே கருதப்படும்," என்று அந்த அமைப்பின் பொதுச்செயலர் யூசஃப் அல் ஒத்தாய்மீன் ( Yousef al-Othaimeen) தெரிவித்துள்ளார். ஒத்துழைப்பு அமைப்புக்கு வெளியே நடைபெறும் இத்தகைய கூட்டங்கள் இஸ்லாமிய சமூகத்தின் நலன்களுக்கு எதிரானவை எனவும் அவர் கூறியுள்ளார்.

சௌதி அரேபியாவின் எதிரணி நாடுகளாகக் கருதப்படும் துருக்கி, ஈரான், கத்தார் ஆகியவற்றின் தலைவர்கள் கோலாலம்பூர் உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இதுதான் சௌதி தரப்புக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது 57 இஸ்லாமிய நாடுகள் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினராக உள்ளன. இந்நிலையில் இஸ்லாமிய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இப்படியொரு மாநாட்டை அந்த அமைப்புக்கு மாற்றாக ஏற்பாடு செய்யவேண்டியதன் அவசியம் என்ன? என்பதே சௌதி தரப்பின் மறைமுகக் கேள்வியாக உள்ளது.

உச்சி மாநாட்டில் பல விஷயங்களை சுதந்திரமாகப் பேச முடியும் என்கிறார் துருக்கி அதிபர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

துருக்கி அதிபர் எர்துவான்

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயல்பாடுகளால் மலேசியப் பிரதமர் மகாதீர், துருக்கி அதிபர் எர்துவான் உள்ளிட்ட தலைவர்கள் சலிப்படைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இஸ்லாமிய நலம் சார்ந்த விவகாரங்களில் இந்த அமைப்பு உறுதியான முடிவுகளை எடுத்துச் செயல்பட தவறிவிட்டதாக இவ்விரு தலைவர்களும் கருதுகிறார்கள் என்றும் மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கோலாலம்பூர் உச்சி மாநாட்டின் முதல் நாளான்று உரையாற்றிய அதிபர் எர்துவான், தமது இந்த அதிருப்தியை வெளிப்படுத்தினார். இஸ்லாமிய உலகத்தை ஒருங்கிணைக்கும் அமைப்புகள் அல்லது தளங்கள் முடிவுகளைச் செயல்படுத்த தவறிவிடுவதுதான் பெரும் பிரச்சினையாக உள்ளது என்றார் எர்துவான். எனினும் அவர் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பை நேரடியாகக் குறிப்பிடவில்லை.

"பாலத்தீன விவகாரத்தில் நாம் எந்தவித முன்னேற்றத்தையும் இதுவரை காணவில்லை. நமது வளங்கள் சுரண்டப்படுவதைத் தடுக்க முடியவில்லை. இஸ்லாமிய சமூகத்தைத் துண்டாக்கக் கூடிய பிரிவினைவாதத்தைத் தடுக்க முடியவில்லை.

"இந்த உச்சி மாநாட்டில் நமது பிரச்சினைகள் குறித்து சுதந்திரமாகப் பேசக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். 'இஸ்லாம்ஃபோபியா' முதல் தீவிரவாதம், நமது வட்டாரங்களில் நிகழும் மோதல்கள், பிரிவினைவாதம், இன மோதல்கள் உட்பட பலவற்றைப் பேசமுடியும்," என்றார் எர்துவான்.

ஐ.நா. பாதுகாப்பு சபை இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றவர்களால் உருவாக்கப்பட்டது என்று குறிப்பிட்ட அவர், அந்த சபை காலாவதி ஆகிவிட்டதாகவும் இஸ்லாமிய நாடுகளின் நலன்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

எந்தவொரு தரப்பையும் தனிமைப்படுத்துவது மாநாட்டின் நோக்கமல்ல: மகாதீர்

கோலாலம்பூர் உச்சி மாநாட்டில் ஈரான் அதிபர் ஹாசன் ரௌகானி, கத்தார் நாட்டின் அமிர் ஷேக், தமிம் பின் ஹமிட் அல்-தானி (Qatari Emir Sheikh Tamim bin Hamid Al-Thani) ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். சௌதி அரேபியாவின் வெளிப்படையான எதிர்ப்பு, கடும் அதிருப்தி காரணமாக கடைசி நேரத்தில் இம்மாநாட்டில் பங்கேற்பதில்லை எனும் முடிவை எடுத்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்.

பட மூலாதாரம், SHAUN CURRY/ GETTY IMAGES

படக்குறிப்பு,

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தான் எப்போதும் தீர்வின் ஓர் அங்கமாகவே இருக்க விரும்புவதாகவும் பிரச்சினையின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை என்றும் அந்நாட்டின் தகவல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்த மாநாட்டில் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்தோனேசிய அதிபர் ஜோகோவி விடோடோவும் மாநாட்டில் பங்கேற்கவில்லை. தற்போது மலேசியாவில் வசித்து வரும் சர்ச்சைக்குரிய இந்திய மதபோதகர் ஜாகிர் நாயக்கும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டார்.

துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் கடந்தாண்டு சௌதி செய்தியாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்டார். இதையடுத்து சௌதி-துருக்கி இடையேயான உறவு மோசமடைந்தது.

இந்நிலையில் உச்சி மாநாட்டில் உரையாற்றிய மலேசியப் பிரதமர் மகாதீர் எந்தவொரு இஸ்லாமிய நாடும் வளர்ச்சியடைந்த நாடாக கருதப்படவில்லை என்றார். இஸ்லாத்தையும் சக இஸ்லாமியர்களையும் பாதுகாக்க தமது உயிரையும் கொடுக்க சில இஸ்லாமியர்கள் தயாராக இருப்பதாகவும், சிலர் இவ்வாறு உயிரிழப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"மதிப்பற்ற தீவிரவாதச் செயல்களின் காரணமாக நமது மதத்துக்கு நிறைய சேதத்தை ஏற்படுத்தி விட்டோம். ஐரோப்பிய காலனித்துவத்தின் கீழ் இஸ்லாமியர்கள் தங்கள் நாடுகளை இழந்தனர். எனினும் சுதந்திரம் கிடைத்த பிறகும்கூட நாம் இந்த வீழ்ச்சியில் இருந்து மீளவில்லை. மாற்றம் ஏதும் நிகழவில்லை எனில் இந்த வீழ்ச்சி மேலும் ஆழமடையும் என்பதுடன் இஸ்லாமியர்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுவார்கள்," என்றார் மகாதீர்.

பட மூலாதாரம், DAN KITWOOD/GETTY IMAGES

படக்குறிப்பு,

சௌதி மன்னர்

கோலாலம்பூர் மாநாடு யாரையும் எந்தவொரு தரப்பையும் தனிமைப்படுத்தும் நோக்கத்துடன் நடைபெறவில்லை என்று குறிப்பிட்ட அவர், பாகுபாடு காட்டுவதும் மாநாட்டின் நோக்கமல்ல என்று தெரிவித்தார். எனினும் எந்தவொரு நாட்டின் பெயரையோ அல்லது தலைவரையோ அவர் குறிப்பிடவில்லை.

"சிறிய அளவில் ஒரு முயற்சியைத் துவங்கி உள்ளோம். இதில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள், பரிந்துரைகள் மற்றும் தீர்வுகள் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இருப்பின், பலன் தரும் என்று நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவற்றை இதைவிடப் பெரிய தளங்களின் பரிசீலனைக்குக் கொண்டு செல்ல முடியும் என நம்புகிறோம். இந்த மாநாட்டின் மூலம் இஸ்லாமிய உலகம் தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் முயற்சியில் சிறிதேனும் முன்னேற்றம் காணவேண்டும் என்பதே தமது விருப்பம்," என்றார் மகாதீர்.

இந்த மாநாட்டில் 56 நாடுகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், பேராளர்கள் பங்கேற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்குப் போட்டியாக நடத்தப்படும் உச்சி மாநாடா?

என்னதான் யாரையும் தனிமைப்படுத்தவில்லை, பாகுபாடு காட்டவில்லை என்று மலேசியப் பிரதமர் விளக்கமளித்தாலும், சௌதி தலைமையில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்குப் போட்டியாகவே கோலாலம்பூர் உச்சி மாநாடு கருதப்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் சிலர் கூறுகின்றனர்.

சௌதி அரேபியா அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சில நாடுகளின் தலைவர்கள்தான் இந்த மாநாட்டில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை அந்த ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இதனால் மலேசிய தலைமை மீது சௌதி அரேபியா அதிருப்தி அடைந்துள்ளது என்றும் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த விரிசல் பெரிதாக வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

"சௌதி-மலேசியா இடையேயான உறவுகளில் பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படாது"

இஸ்லாமிய நாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் உச்சி மாநாடு நிச்சயம் வரவேற்கத்தக்க ஒன்றுதான் என்கிறார் மலேசிய தமிழ்ப் பத்திரிகை உலகின் மூத்த செய்தியாளரான எம்.எஸ். மலையாண்டி.

பட மூலாதாரம், M.S.MALAYANDI

படக்குறிப்பு,

மூத்த செய்தியாளர் எம்.எஸ்.மலையாண்டி.

இந்த மாநாட்டின் வழி எந்த நாட்டையும் தனிமைப்படுத்துவதோ அல்லது ஒதுக்குவதோ தமது நோக்கமல்ல என்பதை மலேசியப் பிரதமர் துன் மகாதீர் மாநாட்டுத் தொடக்க உரையிலேயே மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாக மலையாண்டி சுட்டிக் காட்டுகிறார்.

மாநாடு தொடர்பாக சௌதி அரேபியா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள போதிலும் சௌதி-மலேசியா இடையேயான உறவுகளில் பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படாது என தான் நம்புவதாகவும் அவர் கூறுகிறார்.

"இஸ்லாமிய சமூகம் எதிர்கொள்ளக்கூடிய பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்து அதன் வழி நல்ல தீர்வுகளைக் காண வேண்டும் என மலேசியப் பிரதமர் விரும்புகிறார். அதற்கான சிறு முயற்சியைத்தான் தற்போது மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு எதிராக அவர் களம் இறங்கியிருப்பதாகக் கூறுவது சரியல்ல. "இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினராக உள்ள 57 நாடுகளில் பெரும்பாலானவை கோலாலம்பூர் உச்சி மாநாட்டுக்குப் பிரதிநிதிகளை அனுப்பி வைத்துள்ளன. எனினும் 20 நாடுகளில் இருந்து மட்டுமே முக்கிய தலைவர்கள் தமது பிரதிநிதிகள் வந்திருப்பதாகவும் எனவே, இதர 37 நாடுகள் மலேசியா மீது அதிருப்தி கொண்டிருப்பதாகவும் கூறப்படுவதும் சரியல்ல.

"மேலும் இந்த மாநாடு காரணமாக மலேசியா தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாகக் கூறுவதையும் ஏற்க இயலாது. சில நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுக்கு வரவில்லை எனில் அதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். அதை மலேசியா மீதான அதிருப்தி என கருதக்கூடாது.

"தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும். இஸ்லாமிய நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பு தேவை என்பன உள்ளிட்ட பல்வேறு நல்ல விஷயங்கள் தொடர்பாக இம்மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. இன்றைய தேதியில் ஒட்டுமொத்த உலகத்துக்கும் தேவைப்படக்கூடிய சில நல்ல கருத்துக்களையும் மலேசியப் பிரதமர் முன்வைத்துள்ளார். எனவே, இந்த மாநாட்டின் மூலம் இஸ்லாமிய சமூகத்துக்கு நல்ல பல தீர்வுகள் கிடைக்கும் என நம்புகிறேன்.

பட மூலாதாரம், FAYEZ NURELDINE/AFP/GETTY IMAGES

"மேலும் அந்தத் தீர்வுகள், அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் சில இஸ்லாமிய நாடுகளின் மனநிலையையும் மாற்றக்கூடும். மலேசியப் பிரதமர் குறிப்பிட்டது போல கோலாலம்பூர் மாநாட்டில் முன்வைக்கப்படும் கருத்துக்களும் தீர்வுகளும் அடுத்தகட்டமாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு போன்ற பெரிய தளங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு மேலும் பயனுள்ள வகையில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

"சௌதி அரேபியாவின் அதிருப்தியை மீறி இந்த மாநாடு நடத்தப்படுவதால் மலேசியாவுக்கு இழப்பு ஏற்படும் என்று கூறுவதை ஏற்பதற்கில்லை. அதேசமயம் எந்த ஒரு தரப்புக்கும் அதிருப்தியோ வருத்தமோ ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என்கிற பொறுப்பும் மலேசியப் பிரதமருக்கு உள்ளது. அவர் இதுவரை சரியான கோணத்தில் செயல்படுவதாகவே கருதத் தோன்றுகிறது," என்கிறார் மூத்த செய்தியாளர் எம்.எஸ். மலையாண்டி.

மாநாட்டில் பங்கேற்ற ஜாகிர் நாயக்; செய்தியாளர்களிடம் பேச மறுப்பு

இதற்கிடையே சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கும் கோலாலம்பூர் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். எனினும் அவர் மாநாட்டில் உரையாற்றவில்லை. மேலும் செய்தியாளர்கள் அணுகியபோது அவர் அவர்களுடன் பேச மறுத்தார்.

சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் ஜாகிர் நாயக் ஆற்றிய உரையால் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து அவரை நாடு கடத்த வேண்டும் எனும் கோரிக்கை எழுந்தது. அவர் பொது நிகழ்ச்சிகளில் உரையாற்ற மலேசியாவின் பல்வேறு மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது.

காவல்துறையும் பேட்டியளிக்கவோ, கூட்டங்களில் உரையாற்றவோ ஜாகிர் நாயக்கிற்கு தடை விதித்துள்ள நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த உச்சி மாநாடு 21ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் ஜாகிர் நாயக் உரை நிகழ்த்த வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: