கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிப்பது பாவச் செயல்: ஜாகிர் நாயக் பதிவால் புது சர்ச்சை

மதபோதகர் ஜாகிர் நாயக்

பட மூலாதாரம், ANADOLU AGENCY

படக்குறிப்பு,

மதபோதகர் ஜாகிர் நாயக்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் இட்ட பதிவு ஒன்று மதபோதகர் ஜாகிர் நாயக்கை மையப்படுத்தி புது சர்ச்சை வெடிக்கக் காரணமாகி உள்ளது. இஸ்லாமியர்கள் எவரும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிக்கக் கூடாது என அந்தப் பதிவில் ஜாகிர் நாயக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜாகிர் நாயக் ட்விட்டரில் பதிவிட்டதாகக் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு தகவல் பரவி வருகிறது.

"மெர்ரி கிறிஸ்துமஸ்"

"எனதருமை இஸ்லாமியர்களே... தயவு செய்து கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்வதை தவிர்த்திடுங்கள். அது மிகப்பெரிய பாவச்செயல். கிறிஸ்துமஸ் இஸ்லாத்துக்கு எதிரானது. இந்தச் செய்தியை நீங்களும் மறுபதிவிட்டு பரவச் செய்யுங்கள்..." என்று ஜாகிர் நாயக் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்தப் பதிவை குறிப்பிட்டு கடந்த 2016ஆம் ஆண்டு ஆப்பிரிக்க நாளேடு ஒன்றில் கட்டுரை ஒன்று வெளியானது. தற்போது அந்தக் கட்டுரையையும் பலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் ஜாகிர் நாயக் கருத்துகளைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் அவரது இந்தச் செய்தியுடன் ஒளிபரப்பப்பட்ட காணொளியும் வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில் ஜாகிர் நாயக்கின் கிறிஸ்துமஸ் வாழ்த்து தொடர்பான கருத்துக்கு மலேசிய முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம் பதிலடி கொடுத்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மலேசிய பிரதமர் மகாதீர்

"ஜாகிர் நாயக் இதைத்தான் தெரிவித்தார் என்றால் இந்நாட்டில் உள்ள அனைத்து முஃப்திகளும் உடனடியாக தங்களது ஓய்வூதிய பலன்களை பெற்றுக்கொண்டு பணியில் இருந்து ஓய்வு பெறுவது நல்லது," என்று சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் ராய்ஸ் யாத்தின் குறிப்பிட்டுள்ளார்.

"அடுத்து சீனப் பெருநாள் வாழ்த்துகள் (Kong ci fa cai), தீபாவளிக்கும் அவர் இதே கருத்தைத் தெரிவிக்கக் கூடும். அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்பதை மீண்டும் தெரிவிக்கிறேன். ஜாகிர் நாயக் மலேசியாவில் நிரந்தரமாக வசிக்கும் உரிமையை எவ்வாறு பெற்றார்? யார் அவருக்கு அதை அளித்தது? என்பதை எவரேனும் உள்துறை அமைச்சில் உறுதி செய்ய இயலுமா," என்று ராய்ஸ் யாத்திம் தமது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவின் கிளந்தான் மாநிலத்தில் ஜாகிர் நாயக் ஆற்றிய உரை பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது. மலேசியாவாழ் இந்தியர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்குதான் விஸ்வாசமாக உள்ளனர் என்று அவர் கூறியதாக புகார் எழுந்தது. மேலும் தாம் மலேசியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றால் தமக்கு முன்னதாகவே மலேசியாவுக்கு வந்த சீனர்கள் வெளியேற வேண்டும் என்று அவர் கூறியதாகவும் சர்ச்சை வெடித்தது.

இதையடுத்து ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் எனும் கோரிக்கை வலுத்தது. மலேசியாவில் அவர் பொது நிகழ்ச்சிகளில் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் 2014ஆம் ஆண்டு சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு தற்போது பரவலாகப் பகிரப்பட்டு மீண்டும் ஜாகிர் நாயக்கை மையப்படுத்தி புது விவாதம் எழுந்துள்ளது.

இந்நிலையில், ஜாகிர் நாயக்கின் ட்விட்டர் பதிவு குறித்து சிலரிடம் பிபிசி தமிழ் கருத்துகளைக் கேட்டறிந்தது.

பட மூலாதாரம், kambam-beer-mohammad

படக்குறிப்பு,

கம்பம் பீர் முகம்மது

பழைய கருத்துக்களைக் கிளறுவது தேவையற்ற ஒன்று - எழுத்தாளர் கம்பம் பீர் முகம்மது

"ஜாகிர் நாயக் எந்தப் பின்னணியில் இத்தகையதொரு கருத்தை தெரிவித்துள்ளார் என்பது தெரியவில்லை. அதற்கு ஏதேனும் தகுந்த காரணங்கள் இருக்கலாம்," என்கிறார் எழுத்தாளர் கம்பம் பீர் முகம்மது.

ஜாகிர் முன்பு எப்போதோ தெரிவித்த சில கருத்துகளை இப்பொழுது மீண்டும் கிளறுவது தேவையற்ற ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டார்.

"மலேசியா மூன்று இனத்தை சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக வாழும் நாடு. இங்கு இன, மத நல்லிணக்கம் என்பது நிச்சயம் தேவை. மத, இன, மொழி வேறுபாடுகளை கடந்து மலேசிய மக்கள் இணக்கமாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதுதான் மற்ற நாடுகளைவிட இந்நாட்டிற்குள்ள சிறப்பு அம்சம். இந்த இணக்கமான அற்புதமான சூழலை யாரும் கெடுத்துவிடக்கூடாது."

"எல்லா மதங்களின் வேத நூல்களையும் ஆய்வு செய்தவர் ஜாகிர் நாயக். அவர் மிகுந்த ஆற்றல் உடையவர். அனைத்து மதங்கள் குறித்தும் நன்கு அறிந்து வைத்துள்ள அவர், எந்த அடிப்படையில் இப்படியொரு கருத்தை வெளிப்படுத்தினார் என்பதை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும்."

"இந்த கருத்துக்குரிய காரணத்தையும் விரிவான விளக்கத்தையும் அவர் அளித்திருக்கக் கூடும். ஆனால் அதுகுறித்த தகவல் ஏதும் இல்லை. அது தெரிந்தால்தான் நான் தெளிவாகப் பேசமுடியும். இந்நிலையில் தேவையின்றி முன் எப்போதோ கூறியவற்றை எல்லாம் இப்போது எடுத்துப் பார்த்துப் பரப்புவது பகிர்ந்து கொள்வது தேவையற்ற செயல் என்றே தோன்றுகிறது," என்கிறார் எழுத்தாளர் கம்பம் பீர் முகம்மது.

ஃபிதாவுல்லாஹ் கான்: ஜாகிர் நாயக் கூறியதை முழுமையாகப் பார்க்க வேண்டும்

பட மூலாதாரம், Phidhawullah-khan

படக்குறிப்பு,

ஃபிதாவுல்லாஹ் கான்

ஜாகிர் நாயக் இவ்வாறான ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார் என்பது உண்மை என்றால், அவர் கூறியதை முழுமையாகப் பார்க்க வேண்டும் என்கிறார் பத்திரிகை ஆசிரியரான ஃபிதாவுல்லாஹ் கான்.

ஜாகிர் நாயக் ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்ல முற்பட்டிருக்கலாம் என்றும் இவர் கருதுகிறார்.

"இப்போது குறிப்பிடப்படும் ஒன்றிரண்டு வரிகளை வைத்துக் கொண்டு எதையும் தீர்மானிக்க இயலாது. இந்த கருத்துக்கு முன்பகுதியாக என்ன சொன்னார்; பின்பகுதியாக என்ன கூறியுள்ளார் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்."

"இறைவனுக்கு இணையாக யாரையும் ஒப்பிட முடியாது. அதேபோல் இறைத்தூதர்கள் அனைவரையும் நாம் மதித்துப் போற்ற வேண்டும். இறைத்தூதர் நபியை எந்தளவுக்குப் போற்றுகிறோமோ அதேபோல் இயேசுவையும் போற்றவேண்டும். அதேபோல் மோசஸ், அப்ரஹாம் அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டும்."

"ஜாகிர் நாயக் எதற்காக இப்படி ஒரு கருத்தைச் சொன்னார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். யாரேனும் அவரிடம் கேள்வி எழுப்பினார்களா? அதற்குப் பதிலளிக்கும்போது அதன் ஒரு பகுதியாக இவ்வாறு குறிப்பிட்டாரா? எங்கேனும் உரையாற்றும்போது இடையில் கூறப்பட்ட கருத்தா என்பது தெரியவில்லை," என்கிறார் ஃபிதாவுல்லாஹ் கான்.

பட மூலாதாரம், chris-walter

படக்குறிப்பு,

கிறிஸ் வால்டர்

தனிப்பட்ட கருத்துக்காக இருக்கக்கூடும் - கிறிஸ்ஃடோபர் வால்டர்.

இப்போதெல்லாம் பொதுவாகவே ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லக்கூடிய பழக்கம் குறைந்து விட்டது என்கிறார் தனியார் நிறுவன மேலாளர் கிறிஸ்ஃடோபர் வால்டர்.

மிகக் குறைவானவர்களே மற்றவர்களைத் தேடிச் சென்றோ தொடர்பு கொண்டோ மனதார வாழ்த்துகிறார்கள் என்றும் கூறுகிறார்.

"மதபோதகர் ஜாகிர் நாயக் தனிப்பட்ட வகையில் ஒரு கருத்தை தெரிவித்திருப்பதாகவே கருதுகிறேன். மலேசியா போன்ற நாடுகளில் பல இனத்தவர்கள் உள்ளனர். அதிலும் திறந்த இல்ல உபசரிப்பு (ஓபன் ஹவுஸ்) என்ற நடைமுறை மலேசியாவில்தான் அதிகம் பின்பற்றப்படுகிறது."

"பல இனத்தவர்கள் ஒரே இடத்தில் கூடுவதற்கான வாய்ப்பைத் தரும் நிகழ்வு அது. அதுபோன்ற நிகழ்வுகள் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் நாட்டில் இணக்கமான சூழ்நிலை நிலவும்," என்கிறார் கிறிஸ்டோபர் வால்டர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: