குடியுரிமை, காஷ்மீர், முஸ்லிம்கள் - மீண்டும் இந்தியாவை விமர்சிக்கும் மலேசிய பிரதமர்

மகாதீர்

பட மூலாதாரம், Getty Images

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மலேசிய பிரதமர் மகாதீர் மொகமத் தெரிவித்துள்ள கருத்து, இந்திய அரசுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், மீண்டும் காஷ்மீர் விவகாரம் குறித்து அவர் பேசியுள்ளார்.

இந்திய உள்நாட்டு விவகாரங்களில் அவர் கருத்து வெளியிடுவது முறையல்ல என்று இந்தியா கூறியுள்ள பின்னரும் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

காஷ்மீர் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், காஷ்மீர் விவகாரம் குறித்து மலேசியா கவலை கொண்டுள்ளது என்றும் கோலாலம்பூர் உச்சி மாநாட்டின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் குறிப்பிட்டார்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பான மலேசியாவின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். காஷ்மீர் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றியபோது மகாதீர் குறிப்பிட்டிருந்தார்.

"ஆம்... அதுதான் மலேசியாவின் நிலைப்பாடு," என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் மகாதீர்.

இந்திய நிர்வாகத்தின்கீழ் உள்ள காஷ்மீர் பகுதி குறித்து ஏன் மாநாட்டில் வெளிப்படையாக ஏதும் குறிப்பிடப்படவில்லை என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், மாநாட்டில் உரையாற்றிய சுல்தான் ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப்பட்ட, நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட மக்களைப் பற்றி குறிப்பிட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

"எந்த ஆக்கிரமிப்புப் பகுதி எனப் பெயரைக் குறிப்பிடாததால் காஷ்மீர் விவகாரம் குறித்து நாம் கவலை கொள்ளவில்லை என்று அர்த்தமாகிவிடாது. காஷ்மீர் விவகாரத்தில் மலேசியாவின் நிலைப்பாடு குறித்து வேறு பல மாநாடுகளில் தெரிவித்துள்ளோம். அதுதான் நமது நிலைப்பாடு."

படக்குறிப்பு,

இந்திய அரசின் எதிர்ப்பையும் மீறி காஷ்மீர் விவகாரம் குறித்து தொடர்ந்து கருத்து வெளியிட்டு வருகிறார் மகாதீர்.

"மலேசியாவைப் பொறுத்தவரை நாடுகளுக்கு இடையேயான பிரச்சனைகளை, மோதல்களை தீர்த்துக் கொள்ள ஆக்கிரமிப்பு செய்வது என்பது சரியான தீர்வல்ல. எத்தகைய பிரச்சனையாக இருந்தாலும் பேச்சுவார்த்தைகள், மத்தியஸ்தம் அல்லது சட்டப்படி தீர்வுகாணப்பட வேண்டும்," என்றார் மகாதீர்.

"இஸ்லாமியர்கள் மட்டும் தவிர்க்கப்பட்டால் அது நியாயமல்ல"

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்தும் அவர் மீண்டும் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

இந்தியாவில் தற்போது நடந்து கொண்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருந்து வந்துள்ளது. தொடக்கம் முதலே மக்கள் சார்ந்துள்ள மதங்கள் அவர்களை அந்நாட்டின் குடிமக்களாக ஆவதை தடுக்கவில்லை. இத்தனை ஆண்டுகளாக அவர்கள் இந்தியக் குடிமக்களாகவே இருந்து வந்துள்ளனர்.

"ஆனால் இஸ்லாமியர்கள் மட்டும் இந்தியக் குடிமக்களாக ஆவதில் இருந்து தவிர்க்கப்பட்டால் அது நியாயமல்ல."

குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் பட்டியலில் சேர்க்கப்படாத இஸ்லாமியர்கள் வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி இந்தியக் குடியுரிமையைப் பெறலாம் என்று வெள்ளியன்று இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதாவது மத ரீதியாக துன்புறுத்தப்பட்டோம் என்று கூறி அந்த நாடுகளின் இஸ்லாமியர்கள் இந்தியக் குடியுரிமை பெற இயலாது. ஆனால், இந்திய அரசு உலகின் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வகுத்துள்ள வழக்கமான குடியுரிமை விதிகளின்கீழ் அவர்கள் இந்தியக் குடியுரிமை பெற முடியும்.

பட மூலாதாரம், ARUN SANKAR via getty images

"மலேசியாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பூர்விகம் மலேசியா அல்ல. ஆங்கிலேயேர்கள் காலத்தில் இங்கு வந்தவர்களை நாம் மலேசிய குடிமக்களாக ஏற்றுக் கொண்டோம்."

"தங்களுடைய நம்பிக்கைகளை பின்பற்றும் சுதந்திரம் அவர்களுக்கு உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், ஒரு நாட்டில் குடியேற வேண்டும் என்று எண்ணத்துடன் வந்தவர்கள், நீண்டகாலம் அந்நாட்டில் தங்கியிருக்கும் பட்சத்தில் அவர்களைக் குடிமக்களாகவே கருத வேண்டும், நியாயமாக நடத்த வேண்டும்.

இந்திய வெளியுறவுத் துறைக்கு பதில்

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மகாதீர் தெரிவித்த கருத்து, இந்திய தரப்புக்கு அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சு மலேசியப் பிரதமர் இந்தியாவின் உள்விவகாரத்தில் தலையிடுவதாக, வெளியிட்ட செய்திக்குறிப்பு குறித்து பிரதமர் மகாதீரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, "அது அவர்களுடைய கருத்து. நான் தெரிவித்தது என்னுடைய கருத்து. எதை நம்ப வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள்தான் ஊடகம்," என்றார் மலேசியப் பிரதமர்.

சனியன்று டெல்லியில் உள்ள மலேசிய தூதரகத்தின் பொறுப்பதிகாரியை அழைத்து மகாதீரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த இந்திய வெளியுறவுத் துறை, இரு நாடுகளும் ஒருவரின் உள் விவகாரத்தில் இன்னொருவர் தலையிடுவதில்லை என்பதே இருதரப்பு உறவுகளை பின்பற்றும் முறை என்று தெரிவித்தது.

மேலும் இவ்வாறு கருத்து தெரிவிப்பது முழுமையான தகவல்களை அறியாமல் மட்டுமல்ல தீவிரத்தை அறியாமலும் பேசுவது என்று இந்தியா தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இந்தியாவுக்கு மலேசியா முக்கிய பாமாயில் ஏற்றுமதியாளராக உள்ளது.

மலேசிய பாமாயிலை இந்தியா வாங்க மறுத்ததாக வெளியான செய்தி குறித்தும் மகாதீர் கருத்துரைத்தார். அப்போது இந்தியா குறித்து தாம் சில கருத்துக்களைத் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.

"இந்தியா குறித்து சில கருத்துக்களை நாம் தெரிவித்துள்ளோம் என்பது சரிதான். இதையடுத்து மலேசிய பாமாயிலை வாங்கப் போவதில்லை என்று ஓர் அறிக்கை வெளியானது. எனினும் இது தனியார் தரப்பு வெளியிட்ட அறிக்கை. இந்திய அரசு இவ்வாறு அறிக்கை வெளியிடவில்லை. அதேசமயம் இந்த அறிவிப்பை நாங்கள் புறந்தள்ளவில்லை," என்றார் மகாதீர்.

ஜாகிர் நாயக் குறித்த கேள்வி: நேரடியாக பதிலளிக்காத மகாதீர்

இதற்கிடையே மதபோதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என மலேசியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான லிம் கிட் சியாங் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

பட மூலாதாரம், ANADOLU AGENCY

படக்குறிப்பு,

மதபோதகர் ஜாகிர் நாயக்

இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்ற அரங்கில் ஜாகிர் நாயக்கும் அமர்ந்திருந்தார். அவர் இருந்த பக்கம் திரும்பி லேசாகப் புன்னகைத்த பிறகு பதிலளித்தார் மகாதீர்.

இன உணர்வுகளைத் தூண்டும் வகையில் ஏதும் செய்யக்கூடாது என ஜாகிர் நாயக்கிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதேவேளையில், ஏராளமானோர் இன ரீதியிலான அறிக்கைகளை, கருத்துக்களைத் தெரிவித்து வருவதாக மகாதீர் சுட்டிக்காட்டினார்.

"மலேசியாவில் இன உறவுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ள வேண்டும். ஏனெனில் இது உணர்ச்சி மிகுந்த, நுட்பமான விவகாரம். இந்த நாட்டிலுள்ள மக்களையும், பல்வேறு இனங்களையும் தூண்டிவிடவோ, விரோதம் ஏற்படுத்தவோ நாங்கள் விரும்பவில்லை," என்றார் பிரதமர் மகாதீர்.

எனினும் ஜாகிர் நாயக் நாடு கடத்தப்படுவாரா என்பது குறித்து அவர் ஏதும் குறிப்பிடவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: