குடியுரிமை திருத்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல: பினாங்கு துணை முதல்வர் ராமசாமி

பேராசிரியர் ராமசாமி.

பட மூலாதாரம், Facebook

இந்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு மலேசியப் பிரதமர் மகாதீர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்கிறார் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி.

இந்த விஷயத்தில் தனது நெருங்கிய நண்பரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோவின் நிலைபாட்டில் இருந்து முற்றிலும் மாறுபடுகிறார் ராமசாமி.

குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஏதுமில்லை என்றும், இவ்விவகாரம் தொடர்பில் மலேசியப் பிரதமர் தெரிவித்த கருத்து சரியானது அல்ல என்றும் பிபிசி தமிழிடம் பேசிய போது அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

"இந்தியா சுதந்திரம் பெற்ற போது இஸ்லாமியர்களுக்கு என்று தனி நாடு தேவை என்று வலியுறுத்தப்பட்டு, மத அடிப்படையில் பிரிந்து சென்ற நாடு தான் பாகிஸ்தான். அதே போல் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகியவையும் இஸ்லாமிய நாடுகள்தான். இப்படிப்பட்ட நாடுகளில் உள்ள சிறுபான்மையினருக்கு நிச்சயம் பாதிப்புகள் இருக்கவே செய்யும். எனவேதான் அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள இந்துக்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையினருக்கும் ஆதரவாக இந்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இதில் எந்தத் தவறும் இல்லை," என்கிறார் ராமசாமி.

கேள்வி: இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டத்திருத்தம் என்று கருதுவதால் தானே இன்று இந்தியா முழுவதும் பரவலாகப் போராட்டங்கள் வெடித்துள்ளன?

பதில்: குடியுரிமை திருத்த சட்டத்தை படித்துப் பார்த்தபோது, அதில் இஸ்லாமியர்களுக்கு எதிராக எதுவும் தென்படவில்லை. ஆனால் சில ஊடகங்களிலும் மற்ற தளங்களிலும் இப்படியொரு தகவலை பரப்பி வருகிறார்கள்.

இஸ்லாமியர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவே கூடாது என்று இந்திய அரசு சொல்லவில்லையே? உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் உரிமை இருக்கிறதே? காங்கிரஸ் கட்சி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அரசியல் செய்யப் பார்க்கிறது. எந்தவொரு எதிர்க்கட்சியும் இதைத்தான் செய்யும்.

பட மூலாதாரம், Getty Images

என்னை பொறுத்தவரை இந்த சட்டத்திருத்தம் மிகச் சரியான, சிறப்பான நடவடிக்கை என்பேன். இதனால் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பில்லை. பிறகு ஏன் இதை சிலர் பெரிதுபடுத்துகிறார்கள் என்பது புரியவில்லை.

குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் கூட சில ஆண்டுகளுக்கு முன்பு வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பான காணொளி கூட தற்போது வெளியாகி இருக்கிறது. பாரதிய ஜனதா அரசு கொண்டு வந்ததால் நான் இதை ஆதரிக்கவில்லை. ஒருவேளை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து இதை செய்திருந்தாலும் கூட நிச்சயம் ஆதரித்திருப்பேன்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்றுமே இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகள். அங்கெல்லாம் இஸ்லாமியர்களிடம்தான் அதிகாரம் உள்ளது. நிலைமை இப்படி இருக்கும்போது, அங்கு பாதிப்புக்குள்ளாகும் சிறுபான்மையினருக்கு தானே இந்தியா ஆதரவாக இருக்க முடியும்?

இந்த சட்டத்திருத்தமானது இந்தியாவை இந்துத்துவ நாடாக மாற்றிவிடும் என்று சிலர் சொல்வதெல்லாம் வெற்று பயமுறுத்தல்கள். இந்த வகையில்தான் அரசியல் சாசனத்தை நாசமாக்கிவிட்டனர் என்ற விமர்சனமும் தேவையின்றி எழுந்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்தில் எந்தவித குறைபாடுமே உங்களுக்கு தென்படவில்லையா? இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை கேட்பது தவறா?

இந்த திருத்த சட்டமானது நூறு விழுக்காடு ஏற்புடையது என்று நான் கூறவில்லை. இதில் சில குறைபாடுகள் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கும் குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுத்திருக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images

அகதிகளாக வந்தவர்கள் பல ஆண்டுகளாக இந்தியாவிலேயே உள்ளனர். இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்த அகதிகளும் உள்ளனர். பொதுவாகவே இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்திய அரசு எப்போதும் கூடுதல் அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை நான் பலமுறை வலியுறுத்தி உள்ளேன்.

அதே சமயம் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டால் வருங்காலத்தில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு பிரச்சினை ஏற்படும் பட்சத்தில், அவர்களை இந்தியாவுக்கு செல்லுங்கள் என்று அந்நாட்டு அரசு நிர்பந்திக்க வாய்ப்புண்டு.

இத்தகைய அம்சங்களை கருத்தில் கொண்டுதான் இந்திய அரசு தற்போது அவர்களுக்கு குடியுரிமை வாய்ப்பை வழங்கவில்லை என கருதுகிறேன். அதே போல் ரோஹிஞ்சா முஸ்லீம்களையும் இந்திய அரசு கவனத்தில் கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இவற்றை எல்லாம் நான் குடியுரிமை திருத்த சட்டத்தின் குறைபாடுகளாகப் பார்க்கிறேன்.

அதே சமயம் காலத்தின் போக்கில் இந்த குடியுரிமை சட்டத்தில் வேறு சில திருத்தங்களையும் செய்யும் வாய்ப்புண்டு. அப்படி நடக்கும் பட்சத்தில் தற்போது சுட்டிக்காட்டப்படும் குறைபாடுகளை இந்திய அரசு களையும் என எதிர்பார்க்கிறேன்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்த போதும் போராட்டங்கள் வெடித்தன. அது குறித்து?

இந்திய அரசு தற்போது எடுத்திருக்கக் கூடிய குடியுரிமை தொடர்பான நடவடிக்கை வரலாற்றுப்பூர்வமான, வெற்றிகரமான ஒரு நடவடிக்கை. இதே போன்று காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதும் மிகச் சரியான நடவடிக்கைதான்.

சுதந்திரம் பெற்றது முதல் இந்நாள் வரை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளாலும், ஆட்சிகளாலும் சாதிக்க முடியாததை தற்போது இந்திய அரசு சாதித்துக் காட்டியுள்ளது. அதிலும் நாடாளுமன்றத்தில் விவாதித்து அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் தானே அந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். பிறகு எப்படி அரசை குறைகூற முடியும்? காங்கிரஸ் செய்யாததை பாஜக செய்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

இந்தியா எனும் நாட்டை உடைத்ததில் காங்கிரசுக்கும் பங்கு உண்டு. காங்கிரஸ் கட்சியினர் தாங்கள் செய்த வரலாற்றுத் தவறுகளை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆனால் நாடுமுழுவதும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு இருந்தது என்பதே உண்மை நிலவரம்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் உங்களுடன் இணைந்து செயல்படும் நீண்ட கால நண்பர் வைகோ குடியுரிமை திருத்த சட்டத்தை 'கடலில் வீசி எறியுங்கள்' என்று ஆவேசப்பட்டுள்ளாரே?

வைகோ இன்றளவும் எனது நல்ல நண்பர்தான். இலங்கை பிரச்சினையில் நான் அவர் பக்கம் நின்றேன். அதற்காக அனைத்து விஷயங்களிலும் அவரது நிலைப்பாட்டை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்குள் கருத்து வேறுபாடுகளும் உண்டு.

தமிழக, இந்திய அரசியல் கள நிலவரம், வைகோ சார்ந்துள்ள கட்சி, திராவிடக் கோட்பாடு என பல்வேறு விஷயங்களின் அடிப்படையில் அவர் சில முடிவுகளை எடுத்து செயல்படக் கூடும். சில விஷயங்களில் அரசியல் செய்ய வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கலாம். அதற்காக எல்லாம் அவரை ஆதரிக்க முடியாது.

மலேசியப் பிரதமர் மகாதீர் கூட தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளாரே?

மலேசியப் பிரதமர் இந்தச் சட்டத்திருத்தம் குறித்து முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் பேசி இருப்பதாகவே கருதுகிறேன். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு வரும் என்பதாக அவர் புரிந்து கொண்டுள்ளார். மேலும் மலேசியாவில் இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் தகுதி இல்லாத போதும் குடியுரிமை வழங்கியதாக அவர் தெரிவித்திருப்பது தேவையற்ற கருத்து.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மலேசியப் பிரதமர் மகாதீர்

மலேசியப் பிரதமர் எல்லாவற்றையுமே இஸ்லாம், இஸ்லாமியர்கள் என்ற கோணத்திலேயே பார்க்கிறார். இந்தியா ஒரு வல்லரசு. பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ள கருத்து இந்தியாவை பொறுத்தவரை சிறு சலசலப்பு தான். அதையெல்லாம் பொருட்படுத்த மாட்டார்கள்.

இறுதியாக ஒன்று சொல்கிறேன். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களிடம் வேறு ஏதேனும் இஸ்லாமிய நாடுகளுக்கு செல்ல விருப்பமா என்று கேட்டுப் பாருங்கள். நிச்சயமாக இந்தியாவில்தான் இருப்போம் என்று திட்டவட்டமாகச் சொல்வார்கள்," என்றார் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: