விமான நிலையத்தில் 'சட்டை திருடிய' மெக்சிகோ தூதர் பதவி விலகல் மற்றும் பிற செய்திகள்

விமானம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புப் படம்

விமான நிலையத்தில் உள்ள கடையில் சட்டையை திருடியதாக குற்றம்சாட்டப்பட்ட அர்ஜென்டினாவுக்கான மெக்சிகோ தூதர் பதவி விலகியுள்ளார்.

77 வயதாகவும் பிக்கார்டோ வலெரோ உடல் நலப் பிரச்சனைகளுக்காக பதவி விலகியுள்ளதாக மெக்சிகோவின் வெளியுறவு துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே பியூனஸ் ஏர்ஸ் விமான நிலையத்தில் உள்ள கடையில், செய்தித்தாளுக்கு நடுவே மறைத்து வைத்து புத்தகம் ஒன்றை அவர் திருடுவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியானது.

தற்போது ஒரு விமான நிலைய கடை ஒன்றில் சட்டை ஒன்றை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மெக்சிகோவுக்கு செல்ல விமானம் ஏறுவதற்கு முன்பு விமான நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் கட்டணம் எதுவும் செலுத்தாமல் சட்டையை திருடி செல்ல முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

2013ம் ஆண்டு அவருக்கு மூளையில் கட்டி வந்து பாதிப்பு ஏற்பட்ட பிறகு அவரது நடவடிக்கைகளை மருத்துவர்கள் கண்காணித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ஜமால் கஷோக்ஜி கொலை வழக்கு: 5 பேருக்கு மரண தண்டனை - விரிவான தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஆண்டில் சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேருக்கு சௌதி அரேபிய நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை வழங்கியுள்ளதாக அந்நாட்டின் அரசு வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சௌதிக்கு கஷோக்ஜியை திருப்பி வர வைப்பதற்காக அனுப்பப்பட்ட ஊழியர்கள் மேற்கொண்ட ஒரு முரட்டுத்தனமான நடவடிக்கையில் கஷோக்ஜி கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சௌதி தலைநகரான ரியாத்தில் 11 பேர் மீது வழக்கு விசாரணை நடந்தது.

இந்த தீர்ப்பு குறித்து கருத்து வெளியிட்ட ஐ .நா. அமைப்பைச் சேர்ந்த சட்ட நிபுணர் ஒருவர், ''இது ஒரு சட்டவிரோத மரணதண்டனை'' என்று தெரிவித்துள்ளார்.

ராம்நாத் கோவிந்த்: புதுவை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பதக்கம் வாங்க மறுத்த மாணவி - காரணம் என்ன?

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கு பெற்ற பட்டமளிப்பு விழாவில் திடீரென வெளியேற்றப்பட்ட இஸ்லாமிய மாணவி, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தனது தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்தார்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 27வது பட்டமளிப்பு விழா இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கினார். இவ்விழாவில் மொத்தம் 19,289 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது, இதில் 205 பேருக்கு முனைவர் பட்டமும், 17 பேருக்கு தங்கப் பதக்கமும் குடியரசு தலைவர் வழங்குவதாக இருந்தது.

இந்நிலையில் புதுவை பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் மூவர் இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தனர்.

ஜார்கண்ட்: பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைய இவைதான் காரணம்

ஜார்கண்டில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியைத் தழுவி இருக்கிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவை தொடர்ந்து ஜார்கண்டிலும் ஆட்சியை இழக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

இதுவரை 80 தொகுதிகளின் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், இதில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 30 தொகுதிகளில் வென்றுள்ளது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 16 தொகுதிகளில் வென்றுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் 1 தொகுதியில் வென்றுள்ளது. இதனால் 47 தொகுதிகளை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி பெற்றுள்ளது.

அதேவேளையில் மாநில ஆளுங்கட்சியான பாஜக 25 தொகுதிகளில் வென்றுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டு பா.ஜ.க ஆட்சி பரவலாக அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக மாநில முதல்வர் ரகுபர் தாஸ் மோசமாகப் பெயரெடுத்திருந்தார். இதுதான் பா.ஜ.க தோல்விக்கு முதன்மையான காரணம். கட்சிக்கு உள்ளேயே அவர் மீது அதிருப்தி நிலவியது. ஈகோ பார்க்கிறார், நியாயமான ஆலோசனைகளுக்கு செவிமடுக்க மறுக்கிறார் என கட்சிக்காரர்களே அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர்.

இலங்கை கனமழை: ஐந்து பேர் உயிரிழப்பு; பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட கோட்டாபய ராஜபக்ஷ

இலங்கையில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

13 மாவட்டங்கள் மழையுடனான வானிலையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

19,095 குடும்பங்களைச் சேர்ந்த 65,294 பேர் மழையுடனான வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் 125 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை வழங்கும் போது, சுற்று நிரூபங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளை தடையாகக் கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அநுராதபுரத்தில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களை கோட்டாபய ராஜபக்ஷ இன்று நேரில் சந்தித்து விடயங்களை ஆராய்ந்திருந்தார்.

மக்களின் சுகாதார வசதிகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவிடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: