கிறிஸ்துமஸ் பரிசு தேடும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் பிற செய்திகள்

மெலனியா மற்றும் அதிபர் டிரம்ப்

பட மூலாதாரம், Paul Morigi / Getty Images

படக்குறிப்பு,

மெலனியா மற்றும் அதிபர் டிரம்ப்

தனது மனைவி மெலனியாவுக்கு இன்னும் கிறிஸ்துமஸ் பரிசு தேடிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

வெளிநாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் அதிபர் டிரம்ப் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது ஒரு ராணுவ வீரர் டிரம்பிடம் "உங்கள் மனைவிக்கு என்ன பரிசு வாங்கி உள்ளீர்கள்" என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அதிபர், தன் மனைவிக்காக இன்னும் சிறந்த பரிசை தேடிக் கொண்டிருப்பதாகவும், ஆனால், ஓர் அழகான கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை வாங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.

அமித் ஷா: ''ஒவைஸி சூரியன் மேற்கே உதிக்கிறது என்பார்"

பட மூலாதாரம், ANI

தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கும் (NPR), தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் (NRC) எந்த தொடர்பும் இல்லை. இதை நான் இன்று தெளிவாகக் கூறுகிறேன் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் செவ்வாய்க்கிழமை அன்று பேசிய அவர் இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸியின் நிலைப்பாடு குறித்துக் கேட்டபோது, ''சூரியன் கிழக்கே உதிக்கிறது என்று நாங்கள் கூறினால், ஒவைஸி அவர்கள் இல்லை, சூரியன் மேற்கே உதிக்கிறது என்று கூறுவார். ஆனாலும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவருக்கும் நான் உறுதியாகக் கூறுகிறேன்'' என்று அமித் ஷா மேலும் குறிப்பிட்டார்.

பெரியார் குறித்த எங்கள் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை: தமிழக பா.ஜ.க

பெரியாரின் நினைவு தினமான நேற்று (டிசம்பர் 24), அவரைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை ட்விட்டரில் வெளியிட்ட பா.ஜ.க., கடும் எதிர்ப்பின் காரணமாக அந்தப் பதிவை நீக்கியுள்ளது. இருந்தபோதும் அந்தக் கருத்தில் தங்களுக்கு மாற்றமில்லை என தெரிவித்துள்ளது.

பெரியாரின் நினைவு தினமான நேற்று, பாரதீய ஜனதா கட்சியின் தமிழகப் பிரிவின் ட்விட்டர் கணக்கிலிருந்து பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், "மணியம்மையின் தந்தை ஈவே ராமசாமியின் நினைவு தினத்தில் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதை ஆதரித்து போக்ஸோ குற்றவாளிகளே இல்லாத சமூகத்தை உருவாக்க உறுதி கொள்வோம்" எனக் கூறப்பட்டிருந்தது.

பா.ஜ.கவின் இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

சர்ச்சைக்குரிய அந்தப் பதிவு பின்னர் பா.ஜ.கவின் ட்விட்டரிலிருந்து நீக்கப்பட்டது. இதற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. ஐ.டி. பிரிவின் தலைவர் நிர்மல்குமார், "கூட்டணித் தலைவர்களும் எங்கள் தலைவர்களும் கேட்டுக்கொண்டதால் அந்தப் பதிவை நீக்கிவிட்டோம். ஆனால், அதில் தெரிவிக்கப்பட்ட கருத்தில் எங்களுக்கு உடன்பாடுதான்" என்று கூறினார்.

முப்படைகளுக்கும் ஒரே தலைமை தளபதி: இந்திய அரசின் முடிவுக்கு என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images

இந்திய முப்படைகளையும் அதன் பிற துறைகளையும் வழிநடத்தும் ஒரே தலைமைத் தளபதி பதவியை உருவாக்க பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அந்த பதவிக்கு நியமிக்கப்படும் உயரதிகாரி, நான்கு ஸ்டார்களுக்கான தகுதி வாய்ந்த ஜெனரல் ஆக இருப்பார் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

தேச பாதுகாப்பு தொடர்புடைய அனைத்து ஆயுதங்கள் கொள்முதல், முப்படைகளின் கூட்டு நடவடிக்கை, பயிற்சி உத்திகள், கேந்திர நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்தும், அரசை நடத்தும் ஆட்சியாளர்களுக்கு முப்படை சேவை குறித்த ஆலோசனைகளை வழங்குவது, முக்கிய ஒப்புதல்களை பெற்றுத்தருவது ஆகிய பணிகளை ஒருங்கிணைக்கும் ராணுவ ஆலோசகர் பணியையும் புதிய தலைமை தளபதி ஆற்றுவார்.

NRC மற்றும் CAA: காந்தியின் விருப்பத்திற்குரியதா?

பட மூலாதாரம், Getty Images

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோதி, பேசுகையில், இந்த சட்டத்தை எதிர்க்கிறவர்கள் மோதி சொல்வதைக் கேட்கத் தேவையில்லை ஆனால் இது காந்தி விரும்பியது, காந்தியை பின்பற்றுங்கள் என்றார். குடியுரிமை குறித்து மோதி கூறுவதைத் தான் காந்தியும் சொன்னாரா ?

அவர் சொன்னது இதுதான். "இங்கு பிறந்து வளர்ந்த அனைவருக்கும் இந்துஸ்தான் சொந்தமானது, அவர்களால் வேறு எந்த நாட்டிற்கும் செல்லமுடியாது. எனவே பார்சி, பென்னி இஸ்ரேலி, இந்திய கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், ஹிந்துக்கள் அல்லாதவர்கள் என அனைவருக்கும் இந்தியா சொந்தமானது. சுதந்திர இந்தியாவுக்கு ஹிந்து ராஜ் கிடையாது, மாறாக எந்தவொரு பெரும்பான்மை மத அல்லது சமூக வேறுபாடு இன்றி அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாக இந்தியா விளங்கும்" என்று மகாத்மா காந்தி தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :