வட கொரிய அகதிகள் 14,000 பேரை காப்பாற்றிய அற்புத அமெரிக்க கப்பல்

  • லாரா பிக்கர்
  • பிபிசி
லீ கியாங்-பில்

பட மூலாதாரம், LEE GYONG-PIL

படக்குறிப்பு,

லீ கியாங்-பில்

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு வடகொரிய துறைமுகத்தில் இருந்து 14,000-க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றிக் கொண்டு அமெரிக்க பயணிகள் கப்பல் புறப்பட்டது. அந்தக் கப்பலில் இருந்த சிலரைப் பற்றியும், அந்தக் கப்பலின் பயணம் பற்றியுமான கதை இது.

அது 1950 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாள்.

முன்னேறி வரும் சீன ராணுவத்தினரின் துப்பாக்கிக் குண்டுகளில் இருந்து தப்பித்து வந்து அமெரிக்க கப்பலில் பயணித்த 14,000 வடகொரிய அகதிகளில் ஒருவர் அந்தத் தாய்.

கப்பலில் நிற்பதற்குக் கூட போதிய இடம் இல்லாத அளவுக்கு நெரிசல். மருத்துவ உபகரணங்களும் எதுவும் இல்லை.

``பிரசவம் பார்த்த பெண்மணி, தொப்புள் கொடியை தன் பற்களால் கடித்து துண்டித்தார்'' என்று லீ கியாங்-பில், 69 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார். ``நான் சாகவில்லை என்பதும், கிறிஸ்துமஸ் நாளில் நான் பிறந்தேன் என்ற உண்மையும் அதிசயம் என்று மக்கள் கூறினர்'' என்று அவர் தெரிவித்தார்.

கொரியா போரின் கருப்பு நாட்களில், அந்த குளிர்பருவத்தில் எஸ்.எஸ். மெரெடித் விக்டரி கப்பலில் பிறந்த ஐந்து குழந்தைகளில் திரு. லீ -யும் ஒருவர்.

பட மூலாதாரம், LEE GYONG-PIL

மெரெடித் விக்டரியின் மூன்று நாள் பயணத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் காப்பாற்றப்பட்டனர். தென்கொரியாவின் இப்போதைய அதிபர் மூன் -ஜே-இன் உடைய பெற்றோரும் அதில் அடங்குவர்.

அந்தக் கப்பலுக்கு - அதிசயங்களின் கப்பல் - என்ற புனைப்பெயரும் கிடைத்தது.

கிம் ஜோங் உன் குறித்து வட கொரிய மக்கள் நினைப்பதென்ன?

வெளியேற்றம்

டிசம்பர் 1950. வடகொரியாவின் ஹங்னம் துறைமுகத்தில் 100,000 ஐ.நா. படையினர் சிக்கியிருந்தனர். அவர்களை சீன படையினர் வெற்றி கொண்டனர். அது சோசின் போர் என கூறப்பட்டது. மலைகளில் ஏறி அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர்.

தங்களைவிட நான்கு மடங்கு அதிகமான ராணுவத்தினரை அவர்கள் எதிர்கொண்டனர். ஆனால் அப்போது பாதுகாப்பு பெறுவதற்கு அவர்களுக்கு ஒரே வழிதான் இருந்தது. கடல்வழியாகச் செல்ல வேண்டும். அதற்கும் குறுகிய அவகாசமே இருந்தது: சீன படையினர் நெருங்கிக் கொண்டிருந்தனர்.

ஆனால் படையினர் தனியாக இல்லை. குளிரால் உறைய வைக்கும் கடற்கரையில் ஆயிரக்கணக்கான வடகொரிய அகதிகளும் குவிந்துவிட்டனர். காப்பாற்றப் படுவோம் என்ற நம்பிக்கையில் ஏராளமானவர்கள், குழந்தைகளுடன் அடர்ந்த பனிகளுக்கு நடுவே பல மைல்கள் நடந்து வந்து கடற்கரையை அடைந்திருந்தனர்.

பட மூலாதாரம், NATIONAL ARCHIVES US

களைப்பில் சோர்வாகி, எப்படியும் தப்பியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உதவியை எதிர்பார்த்திருந்தனர்.

படை வீரர்களை அழைத்து வரவும், பொருள்கள், ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு தென் கொரியாவில் புசன் துறைமுகம் மற்றும் ஜியோஜே தீவுக்கும் அழைத்துச் செல்லவும் சுமார் 100 அமெரிக்க கப்பல்கள் அங்கு சென்றன. அவற்றில் எஸ்.எஸ். மெரெடித் விக்டரி கப்பலும் ஒன்று.

அகதிகளை மீட்பது என்பது அவர்களுக்கான முதன்மையான திட்டத்தில் இல்லை.

அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, அகதிகளை மீட்பதையும் சேர்க்க அமெரிக்க கப்பல் படையைச் சேர்ந்த கர்னல் எட்வர்டு போர்னே ஒரு திட்டம் வகுத்தார். அவருடைய பேரன் நெட் இப்போது சியோலில் வாழ்கிறார்.

``போரில் வெற்றி பெற வேண்டுமானால், மக்களை மீட்பது உங்கள் வேலையாக இருக்கக் கூடாது'' என்று முன்னாள் கடற்படை வீரரான நெட் என்னிடம் தெரிவித்தார். ``அது நல்ல விஷயம் தான். ஆனால் ராணுவம் தான் முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டும்'' என்று அவர் குறிப்பிட்டார்.

``எப்படியோ, அது நடந்துவிட்டது'' என்று அவர் விவரித்தார். ``ஹங்னமில் இருந்த அவர்கள் நல்லதொரு தேவதையின் சொல்லைக் கேட்டு அவர்கள் நல்ல விஷயத்தை செய்தார்கள் என்று நான் சொல்ல வேண்டும். சரியான காரணத்துக்காக, மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் அவர்கள் செய்தார்கள் என்றும் சொல்ல வேண்டும்.''

தங்களுக்கான வாய்ப்பு வரும் என்று அகதிகள் ஒன்றாகக் கூடி கடலோரம் அமர்ந்திருந்தனர். அவர்கள் அனைவரையும் கப்பலில் ஏற்றிச் செல்ல பல நாட்கள் ஆனது.

17 வயதான ஹன் போ-பே என்பவர் தனது தாயுடன் வந்திருந்தார்.

பட மூலாதாரம், AL FRANZON

``அது வாழ்வா, சாவா என்ற சூழ்நிலையாக இருந்தது'' என்று அந்தப் பெண் தெரிவித்தார். ``இந்தக் கப்பலில் ஏறியாக வேண்டும் என்பதைத் தவிர நாங்கள் வேறு எதையும் சிந்திக்கவில்லை. இல்லாவிட்டால் நாங்கள் சாக வேண்டியிருக்கும்.''

``கப்பல் எங்கே போகிறது என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் அதுபற்றி கவலைப்படவில்லை. கப்பலில் ஏறிவிட்டால் உயிர் வாழலாம் என்று மட்டும் எங்களுக்குத் தெரிந்திருந்தது.''

ஆனால் வாழ்ந்த நகரை விட்டுப் பிரிவது கஷ்டமாக இருந்தது.

``கடற்கரை எங்களை விட்டு விலகி விலகிச் செல்வதைப் பார்த்த போது, என் இதயம் சோகத்தில் மூழ்கியது. நாம் இப்போது வெளியேறுகிறோம், என்று நினைத்துக் கொண்டேன்.''

ஒவ்வொரு கப்பலிலும் இருந்த நிலைமையை எளிதாகச் சொல்லிவிட முடியாது. வாகனங்கள், ஆயுதங்கள் மற்றும் பொருட்கள் வைத்திருந்த பெட்டிகளுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் அகதிகள் நெருக்கிக் கொண்டிருந்தனர்.

சாப்பாடோ, தண்ணீரோ கிடையாது. மிகப் பெரியதான எஸ்.எஸ். மெரெடித் விக்டரி கப்பல் அதிகபட்சம் 60 பேரை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப் பட்டிருந்தது. இப்போது அதில் 14,000 அகதிகள் இருந்தனர் - அத்துடன் சரக்குப் பெட்டிகளும் இருந்தன.

ஹன் போ-பே ஒரு சிறிய கப்பலின் மேல்தளத்தில் வைக்கப்பட்டார். அவருடைய தாயார் எங்கிருந்தோ ஒரு போர்வையைக் கொண்டு வந்தார். ஆனால் அதுவும் சிறியதாகத்தான் இருந்தது.

``என் தாயார், தங்கையும், நானும் ஒன்றாக நெருக்கிக் கொண்டிருந்தோம். கப்பலில் நிறைய பேர் நெருக்கியடித்துக் கொண்டிருந்தனர்.''

``அலைகள் என் மீது தண்ணீரை வாரி இறைக்கும். நாமெல்லாம் கடலில் மூழ்கிவிடப் போகிறோம், கடல் பூதங்களாகிவிடப் போகிறோம் என்று என் தாயார் மிகுந்த கவலையாக இருந்தார்.''

கப்பல்களில் பயணித்தபோது யாரும் சாகவில்லை. ஆபத்துகள் நிறைந்த, அந்தப் பயணம் மேற்கொண்ட 200,000 பேரும் - பாதி பேர் அகதிகள், மீதி பேர் படை வீரர்கள் - அனைவரும் உயிருடன் தென் கொரியப் பகுதியை அடைந்தோம்.

போர் சூழலில் அதிக எண்ணிக்கையில் படை வீரர்கள் மற்றும் பொது மக்களை பத்திரமாக வெளியேற்றியது, அமெரிக்க வரலாற்றில் அதுதான் மிகப் பெரிய நடவடிக்கையாக இருந்தது.

பட மூலாதாரம், US MARINE CORPS ARCHIVES

எஸ்.எஸ். மெரெடித் விக்டரி கப்பல் ஜியோஜே தீவு துறைமுகத்தை நோக்கி பயணித்த போது, கப்பலில் ஐந்து புதிய குழந்தைகள் சேர்ந்து கொண்டன.

அமெரிக்க கப்பல் குழுவினருக்கு கொரிய பெயர்கள் தெரியாது. எனவே குழந்தைகளை அவர்கள் கிம்ச்சி என்று குறிப்பிட்டனர். திரு. லீ இதில் கிம்ச்சி நம்பர் 5 ஆக இருந்தார்.

``உண்மையில் முதலில் அது எனக்குப் பிடிக்கவில்லை. அதென்ன கிம்ச்சி 5? எனக்கென ஒரு பெயர் உள்ளது. ஆனால், அதுபற்றி நான் ஆழமாக யோசித்தபோது, அதற்காக கவலைப்படவில்லை. எனக்கு அந்தப் பெயர் வைத்தவர்களுக்கு இப்போது நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.''

திரு லீ இப்போது 70 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.எஸ். மெரெடித் விக்டரி கப்பல் சென்று சேர்ந்த ஜியோஜே தீவில் வசிக்கிறார். அவர் கால்நடை மருத்துவராகி சேவை செய்தார். இப்போதும் தன்னுடைய பிசினஸ் கார்டில் தன் பெயரை கிம்ச்சி 5 என்றே அச்சிட்டுள்ளார்.

ஹங்னம் நகரை காலி செய்த நிகழ்வை உயிரோட்டமாக விவரிக்க அவர் உதவினார். மெரெடித் விக்டரி கப்பலில் இருந்த பணியாளர்கள் சிலரை சந்திக்கவும் உதவினார். தன் தாயாருக்குப் பிரசவம் பார்த்த பெண்ணும் அதில் ஒருவர்.

ஜியோஜே தீவு துறைமுகத்தில் ஒரு காலத்தில் கப்பல்களுக்கு நினைவுச் சின்னம் உருவாக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

விட்டுப் பிரிதல்

கிம்ச்சி நம்பர் 2, 3 அல்லது 4 ஆகியோர் என்னவானார்கள் என யாருக்கும் தெரியவில்லை.

ஆனால் கப்பலில் பிறந்த முதலாவது குழந்தையின் - சோஹ்ன் யாங்-யங் என அறியப்பட்ட கிம்ச்சி 1- பெற்றோர் தங்கள் வாழ்நாள் முழுக்க சோகத்தில் விழுந்துவிடும் ஒரு முடிவை ஹங்னம் துறைமுகத்தில் எடுத்தனர்.

சில நாட்கள் மட்டுமே வெளியில் இருப்போம் - அதிகபட்சம் சில வாரங்கள் இருப்போம் என்று பெரும்பாலான அகதிகள் நினைத்திருந்தனர். திரும்பிச் சென்றுவிடுவது என்பது தான் திட்டமாக இருந்தது. ஆனால், ஒருவரும் திரும்பிச் செல்லவில்லை.

சோஹ்ன் யாங்-யங் -கின் பெற்றோருக்கு அப்போது வேறு இரண்டு குழந்தைகளும் இருந்தனர். 9 வயதான டேயியங், 5 வயதான யங்கோக் ஆகியோர் இருந்தனர். கடுமையான குளிராக இருந்தது. துறைமுகத்தில் குழப்பமாக இருந்தது.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மனைவியை சோஹ்னின் தந்தை பார்த்தார். மனைவியை எப்படியாவது கப்பலில் ஏற்றியாக வேண்டும் என அவர் அறிந்திருந்தார். தனது இரண்டு குழந்தைகளையும், அவர்களின் உறவினரிடம் ஒப்படைத்துவிட்டு, வடகொரியாவுக்கு சீக்கிரம் திரும்பி வருவேன் என்று கூறிவிட்டு புறப்பட்டார்.

அதன் பிறகு அவர்கள் சந்திக்கவே இல்லை. போர் முடிந்து, தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான போதும், தீபகற்பப் பகுதி பிரிக்கப்பட்ட போது, இரு கொரிய பகுதிகளுக்கும் இடையில் போர் நீடித்துக் கொண்டிருந்தது.

சோஹ்னின் தாயார், மற்ற இரு குழந்தைகளுக்காக வடகொரியாவுக்கு திரும்பிச் சென்றுவிடுவோம் என்று கெஞ்சிக் கொண்டிருந்தார். அது சாத்தியமற்றது என தெரிந்தும், அதற்காக மன்றாடினார்.

தினமும் காலையில் அவர் ஒரு பாத்திரத்தில் புனித நீரும் அரிசியும் எடுத்து, அவர்கள் எதிரே பிரார்த்தனை செய்வார். கைவிட்டு வந்த குழந்தைகளுக்காக அந்தப் பிரார்த்தனையை செய்வார்.

``பிரிந்து போன குடும்பத்தினரின் வலி எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதற்கு, வாழும் உதாரணமாக நான் இருக்கிறேன்'' என்று திரு. சோஹ்ன் கூறினார்.

``என் குடும்பம் சின்னாபின்னமாகிவிட்டது. எனக்கு இப்போது குழந்தைகள், பேரக் குழந்தைகள் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாள் அவர்கள் வீடு திரும்பும் போதும், அவர்கள் நன்றாக இருக்கிறார்களா என்று பார்ப்பது வழக்கமாகிவிட்டது.''

``ஒரே கருவறையில் உருவான ஒரு குழந்தை மட்டும் பெற்றோருடன் இருக்கும் அதிர்ஷ்டத்தையும், மற்ற இரு குழந்தைகளும் பிரிந்து போய் இவ்வளவு துன்பத்தை சந்திக்கும் நிலையும் எப்படி ஏற்பட்டது என்பதை இன்னும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.''

``தங்கள் அம்மாவும், அப்பாவும் திரும்பி வருவார்கள் என்று அவர்கள் காத்திருந்திருப்பார்கள்.''

பிரிந்து போன குடும்பத்தினரின் சந்திப்புகளுக்கு வடகொரியா அரிதாக அனுமதி அளிக்கும்போது, தன் சகோதரன் மற்றும் சகோதரியை சந்திக்க சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலம் திரு. சோஹ்ன் விண்ணப்பம் கொடுத்துள்ளார்.

அவர்கள் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதற்காக, இரு நாடுகளும் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்று விரும்புவதாக அவர் கூறியபோது, கண்களில் கண்ணீர் வடிந்ததை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

``அவர்கள் இன்னும் உயிருடன் இருந்தால், அவர்களை நான் கண்டுபிடித்துவிடுவேன்'' என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார்.

தாம் குழந்தையாக இருந்தபோது எடுத்த ஒரு புகைப்படத்தை அவர் காட்டினார். அதில் ஒரு குறிப்பு எழுதப்பட்டிருந்தது. ``உன் அண்ணன் டேயியங்கை சந்திக்கும் வகையில் இந்த புகைப்படத்தை பத்திரமாக வைத்துக் கொள்'' என்று அவருடைய தந்தை அதில் எழுதியிருக்கிறார்.

ஹங்னமை காலி செய்து விட்டு வந்தவர்களின் வாரிசுகள் பல லட்சம் பேர் தென் கொரியாவிலும், உலகின் மற்ற பகுதிகளிலும் வாழ்வதாகக் கருதப்படுகிறது. உயிர் தப்பியவர்களின் கதை இது. ஆனால், அங்கே விட்டுவிட்டு வந்தவர்களின் சோகம் இன்னும் ஆழமானது.

கிறிஸ்துமஸ் சமயத்தில் ஹங்னமை விட்டு அமெரிக்காவின் கடைசி கப்பல் புறப்பட்டபோது, ரியர் அட்மிரல் ஜேம்ஸ் டாயல் தன் பைனாகுலர்கள் மூலம் அந்த நகரைப் பார்த்தார்.

பட மூலாதாரம், US NAVAL HISTORICAL CENTER

``அமெரிக்க கப்பல்களில் மீட்டவர்களைப் போன்ற அளவுக்கு அதே எண்ணிக்கையிலானவர்கள் கரையில் காத்திருந்ததை அவர் பார்த்துள்ளார்'' என்று நெட் போர்னே கூறினார். நகரை காலி செய்துவிட்டு வெளியேறிய நிகழ்வுகளை ஆவணப்படுத்த தாம் எழுதி வரும் புத்தகத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் வேறு வழியில்லை என்று அமெரிக்கா கூறியது. அங்கே விட்டுச் செல்லும் பொருட்கள் அல்லது சொத்துகளை சீன ராணுவம் கைப்பற்றுவதைத் தடுக்க துறைமுகத்தைத் தகர்க்க வேண்டியதாயிற்று என அமெரிக்கா கூறியது.

ஹன் போ-பே தன் கப்பலின் மேல் தளத்தில் இருந்து துறைமுகத்தைப் பார்த்திருக்கிறார். அந்தக் காட்சியை ``நெருப்புக் கடல்'' என்று வர்ணித்தார். வெடிகுண்டுகள் வெடித்த பிறகு, நகருக்குள் சீன ராணுவம் புகுந்தது.

``அப்போதும் கப்பலுக்காக ஏராளமானோர் கரையில் காத்துக் கொண்டிருந்தனர். ஏராளமானவர்கள் கப்பலில் ஏற முடியவில்லை'' என்று அந்தப் பெண் தெரிவித்தார்.

காத்திருந்தவர்களில் பலர் இறந்திருப்பார்கள். அது என் இருதயத்தில் வலியை ஏற்படுத்துகிறது. போர்க் கருவிகள், வெடிகுண்டுகள், போர் நடக்கக் கூடாது, போர் நடக்கவே கூடாது'' என்றார் அவர்.

தன் குடும்பத்தினர் இன்னும் உயிருடன் இருப்பார்கள் என்று திரு. சோஹ்ன் நம்புகிறார். தாமே அற்புதங்களின் கப்பலில் இருந்து வந்தவன் தான் என்கிறார். இப்போது இன்னொரு அற்புதம் நடக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். தனது அண்ணன் மற்றும் அக்காவுக்கு அவர் இந்தத் தகவலை அனுப்ப விரும்புகிறார்:

``நம் பெற்றோர் உயிருடன் இருந்த வரையில், ஒவ்வொரு நாளும் உங்களுக்காக கவலைப்பட்டனர். அவர்கள் இப்போது சொர்க்கத்தில் இருப்பார்கள் என்றாலும், இன்னும் உங்களைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.''

``வெகு சீக்கிரத்தில் நம் கனவுகள் நனவாகும் என்று நம்புகிறேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது.''

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: