மாயன் நாகரிகத்தைச் சேர்ந்த 1000 ஆண்டுகள் பழமையான மாளிகை மற்றும் பிற செய்திகள்

ஆராய்ச்சியாளர்கள்

பட மூலாதாரம், Reuters

மெக்சிகோவில் 1000 ஆண்டுகள் பழமையான, மாயன் நாகரிகத்தை சேர்ந்த பழம்பெரும் மாளிகை ஒன்றின் இடிபாடுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

யுகாடன் மாகாணத்தில் உள்ள குலுபா என்ற பழமையான நகரத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில்தான் இது கண்டுபிடிக்கப்பட்டது. மாளிகை என்று கருதப்படும் அக்கட்டடம் 20 அடி உயரமும், 55 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும் கொண்டிருந்தது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

மாயன் நாகரீகத்தை சேர்ந்த மாளிகை ஒன்றின் இடிபாடுகள்

ஸ்பெயின் இப்பிராந்தியத்தை கைப்பற்றும் முன்புவரை அங்கு மாயன் நாகரிகமே இருந்து வந்தது.

அந்த காலத்தில் மாயன்கள் தற்போது இருக்கும் குவாடமாலா, தென் மெக்சிகோ, பெலிஸ் மற்றும் ஹோண்டூரஸ் ஆகியவற்றின் பெரும் பகுதிகளை ஆண்டுவந்தனர்.

சென்னையில் இந்த ஆண்டும் மழை குறைவு

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஆண்டில் பெரும் வறட்சியை எதிர்கொண்ட சென்னையில் வட கிழக்குப் பருவமழை இந்த ஆண்டும் குறைவாகவே பெய்துள்ளது. கடந்த ஆண்டைப் போல குடிநீர் சிக்கலை எதிர்கொள்ளுமா சென்னை?

சென்னையில் இயல்பாகப் வேண்டிய சராசரி மழையின் அளவு 747.1 மி.மீட்டர். ஆனால், இந்த ஆண்டு, 613.3 மில்லி மீட்டர் அளவுக்கே மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழை அளவைவிட 18 சதவீதம் குறைவு.

"பொதுவாக இயல்பாக பெய்ய வேண்டிய அளவைவிட 18 சதவீதத்திற்கும் குறைவாக பெய்தால்தான் பற்றாக்குறை என கருதப்படும். இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை ஜனவரி முதல் வாரம் வரை நீடிக்கும் என கருதுகிறோம். அப்படியிருந்தபோதும், இனிமேல் சென்னைக்கு பெரிதாக மழை கிடைக்க வாய்ப்பில்லை. அப்படி மழை பெய்யாவிட்டால் பற்றாக்குறையாக மாறிவிடும்" என்கிறார் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் உள்ள புயல் எச்சரிக்கை மையத்தின் இயக்குனர் என். புவியரசன்.

கோலி Vs தோனி, அஜித் Vs விஜய்

பட மூலாதாரம், Getty Images

ஃபோர்ப்ஸ் இந்தியா நிறுவனம் 2019-ம் ஆண்டுக்கான இந்தியாவின் டாப் 100 பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

முதலிடத்தில் இருப்பவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. இவரது ஆண்டு வருமானம் 252 கோடி ருபாய்.

மகேந்திர சிங் தோனி 2018-ம் ஆண்டை போலவே 2019-ம் ஆண்டிலும் பிரபலங்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறார். விளம்பரங்களில் நடிப்பது அவருக்கு கை கொடுத்திருக்கிறது. இவர் சுமார் 136 கோடி ரூபாய் சம்பாதித்துளார்.

நடிகர் விஜய் 2018-ம் ஆண்டு 26-வது இடத்தில் இருந்தார். அவர் 2019-ம் ஆண்டில் 47-வது இடத்துக்கு சரிந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பின் தமிழ் திரைத்துறையில் அதிக வருமானம் ஈட்டும் நபராக விஜய் இருக்கிறார். அதில் எந்த சந்தேகமுமில்லை என ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது. அவரது வருமானம் 30 கோடி என்றும் குறிப்பிட்டுள்ளது.நடிகர் அஜீத்துக்கு 2018-ம் ஆண்டு பிரபலங்கள் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை இம்முறை அவருக்கு 52-வது இடம் கொடுத்திருக்கிறது ஃபோர்ப்ஸ்.

'ஏழைத்தாயின் மகன் ஒன்றரை லட்ச ரூபாய் கண்ணாடி அணியலாமா?'

வியாழக்கிழமை அன்று அரிதாக நிகழ்ந்த சூரிய கிரகணத்தை தன்னால் காண முடியவில்லையே என்று வருத்தப்பட்டு புகைப்படம் ஒன்றை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் நரேந்திர மோதி பதிவிட்டிருந்தார். தற்போது, அந்த புகைப்படம்தான் இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

ட்வீட்டில் கூலர்ஸ் அணிந்தபடி கையில் கிரகணத்தை பார்க்கும் கண்ணாடி ஒன்றை அவர் வைத்திருந்தார். இந்த குறிப்பிட்ட புகைப்படத்தால் இப்போது நரேந்திர மோதி தேவையில்லாத சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

காரணம், அவர் அணிந்திருந்த கண்ணாடியின் விலை சுமார் ஒரு லட்சத்து நாற்பத்து இரண்டாயிரம் ரூபாய்.

கைகளால் பிரத்யேகமாக தயாரிக்கப்படும் இந்த விலை உயர்ந்த கண்ணாடியை மேபெக் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இதன் விலை அமெரிக்க டாலர் மதிப்பில் சுமார் 1,995 டாலருக்கும் அதிகம்.

பிலிப்பைன்ஸை திணறடித்த சூறாவளி

பட மூலாதாரம், Getty Images

பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் சூறாவளி பேன்ஃபோன் ஏற்படுத்திய தாக்கத்தால் குறைந்தபட்சம் பதிமூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

மணிக்கு நூற்று தொண்ணூறு கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் பெய்த கன மழையால், அங்கு விமானங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட சக்திவாய்ந்த சூறாவளியான ஹையெனின் வழியில் சமீபத்திய சூறாவளி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: