பாலியல் தொழிலுக்கான தண்டனையில் மாற்றம் கொண்டு வந்த சீனா மற்றும் பிற செய்திகள்

பாலியல் தொழிலுக்கான தண்டனையில் மாற்றம் கொண்டு வந்த சீனா

பட மூலாதாரம், Getty Images

பாலியல் தொழிலுக்கான தண்டனையில் மாற்றம் கொண்டு வந்த சீனா

பாலியல் தொழிலுக்கான தண்டனையில் மாற்றம் கொண்டு வந்துள்ளது சீனா. இந்த மாற்றமானது இன்று (டிசம்பர் 29) முதல் அமலுக்கு வரும். இதுநாள் வரை பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் மற்றும் அவர்களது வாடிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டால், இருதரப்பையும் கட்டாய வேலையில் ஈடுபடுத்தி வந்தது சீனா.

அதாவது, இவர்கள் பொம்மைகள், வீட்டு உபகரணங்கள் உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தார்கள். இதனைக் கல்வி மையங்கள் என அழைத்து வந்தது சீனா. இனி இந்த வழக்குகளில் கைது செய்யப்படுபவர்கள் கட்டாய வேலையில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்.

பட மூலாதாரம், Getty Images

அதுபோல, கைது செய்யப்பட்டு இதுபோன்ற மையங்களில் இருப்பவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள். ஆனால், அதே நேரம் சீனாவில் பாலியல் தொழிலானது சட்ட விரோதமானதுதான். இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட இதுபோன்ற மையங்கள் சிறந்த பலன்களைக் கொடுத்ததாகக் கூறும் சீனா, தற்போதைய கால சூழலில் அவை பொருத்தமற்றதாக ஆகிவிட்டதாகக் கூறுகிறது.

"உத்தர பிரதேச காவலர்கள் என் கழுத்தைப் பிடித்து திருகினர்"

பட மூலாதாரம், Getty Images

லக்னோவில் பெண் காவல்துறை அதிகாரி, தன்னுடைய கழுத்தைப் பிடித்துத் திருகியதாகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகப் போராடிய ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியைக் கைது செய்ததற்காக அவரை சந்திக்க அவர் வீட்டுக்குச் சென்ற போது இவ்வாறு நடந்ததாகக் கூறினார் பிரியங்கா காந்தி. 76 வயதாகும் ஓய்வுபெற்ற அதிகாரி எஸ். ஆர். தாராபுரி இந்த வாரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராடியதால் கைது செய்யப்பட்டார். அவரை சந்திக்க அவர் வீட்டுக்குச் செல்வதற்காக முதலில் இருசக்கர மோட்டார் வாகனத்தின் பின்னே அமர்ந்தும் பின்னர் நடந்தும் சென்றார் பிரியங்கா காந்தி. அவருடன் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களும் இருந்தனர்.

இலங்கை பாமாயில்: மலையக தமிழர்களை அழிக்கும் முயற்சியா? என்ன நடக்கிறது அங்கே?

பட மூலாதாரம், Getty Images

இலங்கையில் பெருந்தோட்ட பயிர் செய்கைகளை இல்லாது செய்து, முள் தேங்காய் (கட்டுப்பொல்) என்று அழைக்கப்படும் பாம் ஆயில் சாகுபடியை பெருந்தோட்ட நிறுவனங்கள் தற்போது செய்து வருகின்றன என செயல்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

முள் தேங்காய் செய்கை, இலங்கை அரசாங்கத்தின் பூரண அனுமதியுடனேயே முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிறுவனங்கள் தரப்பில் கூறினாலும் முள் தேங்காய் செய்கையை இடை நிறுத்தி வைக்க அரசு முன்பு முடிவெடுத்துள்ளதாக அரசு தரப்பு தெரிவிக்கிறது.

கைது செய்யப்பட்ட பெற்றோரின் வருகைக்காக காத்திருக்கும் 14 மாதக் குழந்தை

பட மூலாதாரம், SAMEERATMAJ MISHRA / BBC

படக்குறிப்பு,

ரவி சேகர், மனைவி ஏக்தா மற்றும் அவர்களது 14 மாதக்குழந்தை

உத்தர பிரதேசத்தில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான வன்முறை தொடர்பாக இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் வாரணசியைச் சேர்ந்த ரவி சேகர் மற்றும் அவரது மனைவி ஏக்தா ஆகியோர் அடங்குவர்.

இருவரும் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர், ஆனால் அவர்களது பதினான்கு மாத குழந்தை தனது பெற்றோர் சாக்லேட் கொண்டு வருவார்கள் என்று காத்திருக்கிறார்.

டிசம்பர் 19 அன்று குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் வாரணசியில் ஏராளமான வன்முறைகள் நடந்தன.

CAA - NRC: உத்தர பிரதேச வன்முறைக்கு காரணம் யார்?

பட மூலாதாரம், Getty Images

உத்தர பிரதேசத்தில் டிசம்பர் 20 அன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர், பல நகரங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இது குறித்த செய்தி சேகரிக்க பிபிசி செய்தியாளர் ஜுபைர் அகமது உத்தர பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றார்.

அவர், "உயிர் மற்றும் சொத்து இழப்புகள் சந்தித்த அனைவருமே ஏழை மக்கள். அரசு நிர்வாகத்தையோ, கிராமத் தலைவர்களையோ அணுகும் இடத்தில்கூட அவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது" என்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: