ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் இருந்து தப்பிக்க கடலை நோக்கி படையெடுக்கும் மக்கள்

ஆஸ்திரேலியா காட்டு தீ படத்தின் காப்புரிமை ABC NEWS

ஆஸ்திரேலியாவின் காட்டுத் தீயில் இருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான மக்கள் விக்டோரியா கடற்கரையில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

காட்டுத் தீயை அணைக்க நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநிலங்களின் கடற்கரையோரப் பகுதிகளுக்கு ராணுவ விமானங்கள் மற்றும் கப்பல்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அந்த நாட்டின் அரசு தெரிவித்துள்ளது.

காட்டுத் தீயினால் மலக்கூட்டாவில் உள்ள மக்கள் கப்பலில் ஏறி கடலுக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. வானம் ரத்தம் போல் சிவந்து காணப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பியது ஒரு பயங்கரமான அனுபவம் என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

அங்குள்ள மக்களை மீட்பதற்கு ராணுவ விமானம் பயன்படுத்தப்படவுள்ளது. இதுவரை நியூ சௌத் வேல்ஸில் காட்டுத் தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது. மேலும் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மலக்கூட்டாவில் காற்றின் திசை மாறியதாலேயே,காட்டுத் தீ மிகவும் மோசமாக பரவியது என உள்ளூர் தீ அணைப்பு சேவை நிறுவனம் ஒன்று விவரிக்கிறது.

நியூ சௌத் வேல்ஸில் உள்ள பேட்ஸ்மேன் பேயில் இருந்து விக்டோரியவரை ஆஸ்திரேலியாவின் இரண்டு மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் காட்டுத் தீயால் டஜன் கணக்கான இடங்களில் அவசர நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

விக்டோரியா மாநிலத்தின் கடற்கரையோரம் உள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கடற்கரையோரம் மற்றும் கப்பலில் தஞ்சம் அடைந்திருக்கும் மக்களுக்கு உணவு, குடிநீர் வசதிகள் செய்து தரப்படும் என விக்டோரியா மாநில முதல்வர் டேனியல் ஆன்ட்ரூ தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை ALASTAIR PRIOR

நாங்கள் தண்ணீரில் குதிக்க தயாரானோம்

அதிகாலை அவசரநிலை அபாய மணி அடித்தவுடன், மல்லக்கோட்டாவில் உள்ள மக்கள் கடற்கரையோரம் உள்ள வீடுகளுக்கு சென்றனர்.

பகல் நேரம் வெளிச்சம் இன்றி, இரவு போல காட்சியளித்தது. தீ பற்றி எரியும் சத்தமும் கேட்டது, என்று உள்ளூரில் வர்த்தகம் செய்யும் டேவிட் தெரிவித்தார். எல்லோரும் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்தை நினைத்து பயந்தனர் என்றும் கூறினார்.

கடல் நீர் வீடுகளுக்குள் வராமல் இருக்க ஒரு தடுப்பு சுவர் கட்டப்பட்டிருந்தது. ஆனால் வெப்பம் அதிகரித்ததால், அந்த சுவரைத் தாண்டி கடலில் குதித்து விடலாம் என்றே நினைத்தோம் என்றும் டேவிட் மேலும் கூறினார்.

பல்வேறு கட்டடங்களை காட்டுத் தீ முழுமையாக அழித்தது. ஆனால் காற்றின் திசை திரும்பியதால் கடற்கரையோரம் தீ பரவவில்லை.

தற்போது விக்டோரியா கடற்கரையில் ஆயிரம் பேர் வசிப்பதாக அதன் அவசரநிலை ஆணையர் ஆண்ட்ரூ கிரிஸ்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆஸ்திரேலியாவின் வெப்ப நிலை அதிகரிக்க இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட காலநிலை மாற்றமே காரணம் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பருவ நிலை மாற்றத்தால், காட்டு தீ மிகவும் எளிதாக பரவுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: