ஹாரி, மேகன் மெர்கல் - பிரிட்டன் அரச குடும்ப பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவிப்பு

அரச குடும்ப பொறுப்பிலிருந்து விலகும் இளவரசர் ஹாரி படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அரச குடும்ப பொறுப்பிலிருந்து விலகும் இளவரசர் ஹாரி

பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மெர்கல் அறிவித்துள்ளனர்.

இந்த முடிவை எடுப்பதற்கு முன்னதாக, அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் யாரையும் அவர்கள் கலந்தோசிக்கவில்லை என கூறப்படுகிறது. இருவரின் இந்த முடிவு, பிரிட்டன் அரச குடும்பத்தினருக்கு வருத்தத்தை அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த புதன்கிழமையன்று, இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மெர்கல் இணைந்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில்,`இது பல மாத விவாதங்களுக்கு பிறகு எடுத்த முடிவு` என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பதவியிலிருந்து விலகவும், பொருளாதார சுதந்திரத்தை பெறும் வகையில் முழு நேர பணிக்கு செல்லவும் இருவரும் திட்டமிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை PA Media
Image caption அரச குடும்ப வாழ்க்கையில் ஹாரி, மேகல் தம்பதிகளுக்கு மகிழ்ச்சி இல்லை என கூறப்படுகிறது.

தங்களுடைய நேரத்தை வட அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு இடைப்பட்ட ஒரு இடத்தில் செலவிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர்கள், அரசி, காமன்வெல்த் மற்றும் தங்களுடைய ஆதரவாளர்களுக்கு மதிப்பளிக்கும் கடமையை தொடருவோம் எனவும் கூறியுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் சஸ்செக்ஸ் ராயல் சாரிட்டி என்ற தொண்டு அமைப்பை சொந்தமாக தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளை ஏற்கனவே ஹாரி-மேகல் தம்பதியினர் தொடங்கிவிட்டனர்.

இந்த தொண்டு நிறுவனம் உள்ளூரை விட ஆப்ரிக்கா மற்றும் அமெரிக்காவுடன் தொடர்புடைய ஒரு உலகளாவிய அமைப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு அதிகாரமளிப்பதை நோக்கமாக கொண்டு இந்த அமைப்பு செயல்பட உள்ளது.

அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் நிலையிலிருந்து விலகியதும், லண்டன் அரச குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் இறையாண்மை மானியத்தை இனி பெறப்போவது இல்லை என ஹாரியும், மேகனும் அறிவித்துள்ளனர். இந்த முடிவு, அரச குடும்பத்தின் பொருளாதார சுதந்திரம் கொண்ட உறுப்பினர்களாக தங்களை மாற்றும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரப்பூர்வ அரச கடமைகளை செய்வதற்கான செலவுகளை ஈடு, செய்ய அரச குடும்பத்தினருக்கு இறையாண்மை மானியம் என்ற பெயரில் பிரிட்டன் அரசு ஆண்டுதோறும் அளித்து வருகிறது. அரச குடும்பத்திற்கு சொந்தமான பல்வேறு சொத்துகள் மூலம் பிரிட்டன் அரசுக்கு கிடைக்கும் இலாபத்திற்கு கைமாறாக இந்த மானியம் அளிக்கப்படுகிறது.

கடந்த 2018-19 காலகட்டத்தில் பிரிட்டன் கருவூலத்திலிருந்து அரச குடும்பத்திற்கு 82 மில்லியன் பவுண்டுகள் அளிக்கப்பட்டுள்ளன.

அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் என்பதால், தாங்கள் எந்த வடிவத்திலும் சம்பாதிப்பதற்கு தடை உள்ளதாகவும், தங்களுடைய புதிய பணிகள், முழு நேர வேலைக்கு செல்லும் அரச குடும்ப உறிப்பினர்களாக தங்களை மாற்றும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :