ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒரே இரானிய வீராங்கனை, நாட்டை விட்டு வெளியேறினார் மற்றும் பிற செய்திகள்

கிமியா அலிசாதே படத்தின் காப்புரிமை EPA
Image caption கிமியா அலிசாதே

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இரானின் ஒரே பெண் வீராங்கனையான கிமியா அலிசாதே தன் நாட்டை விட்டு வெளியேறியதாக அறிவித்துள்ளார்.

"போலித்தனம், பொய், அநீதி, முகஸ்துதி" ஆகியவை நிறைந்த இரானின் ஓர் அங்கமாக இருக்க தான் விரும்பவில்லை என்பதால் நாட்டை விட்டு வெளியேறியதாக 21 வயதாகும் அலிசாதே தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இரானில் ஒடுக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான பெண்களில் தானும் ஒருவர் என்றும் தனது வெற்றியை இரான் அரசு அதிகாரிகள் பிரசார கருவியாக பயன்படுத்தியதாகவும் அவர் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தாம் தற்போது எந்த நாட்டில் இருக்கிறார் என்பதை அலிசாதே தெரிவிக்கவில்லை என்றாலும், அவர் சமீப காலமாக நெதர்லாந்தில் பயிற்சி மேற்கொண்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2016ம் ஆண்டு ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் டேக்வாண்டோ-வில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இரானிய பெண் வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்திருந்தார்.

இரான் தலைநகர் டெஹ்ரானிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வை நோக்கி புறப்பட்ட விமானம் அடுத்த சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 176 பேரும் உயிரிழந்து மூன்று நாட்களுக்கு பிறகு, கடந்த சனிக்கிழமையன்று, தாங்கள் "தவறுதலாக" அந்த விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டதாக இரான் ராணுவம் அறிவித்தது.

இரானிய அரசின் முன்னுக்குப்பின் முரணான பேச்சை எதிர்த்து அந்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழல் கிமியா அலிசாதே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தியா விதித்த தடையை சமாளிக்குமா மலேசியா?

படத்தின் காப்புரிமை Getty Images

சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை இறக்குமதி செய்ய இந்திய அரசு திடீர் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இது காஷ்மீர் விவகாரம் குறித்து மலேசிய பிரதமர் மகாதீர் மொஹம்மத் தெரிவித்த கருத்துக்கு இந்திய அரசு கொடுத்துள்ள பதிலடி எனக் கூறப்படுகிறது.

முன்பே நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஒரு நடவடிக்கைதான். ஆனால் இப்போதுதான் அந்த நடவடிக்கையின் முதல் நகர்வை மேற்கொண்டுள்ளது இந்திய அரசு.

"காஷ்மீரை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ளது இந்தியா," என்று மலேசியப் பிரதமர் மகாதீர் தெரிவித்த கருத்து தான் இருதரப்பு உறவில் உரசலுக்கு வித்திட்டது.

விரிவாக படிக்க:பாமாயில் இறக்குமதிக்கு இந்தியா திடீர் கட்டுப்பாடு: சமாளிக்குமா மலேசியா?

"மிகப்பெரிய ராமர் கோயில் அயோத்தியில் கட்டப்படும்" - அமித் ஷா

படத்தின் காப்புரிமை Getty Images

மிகப் பெரிய ராமர் கோயில் ஒன்று, நான்கு மாதங்களுக்குள் அயோத்தியில் கட்டி முடிக்கப்படும் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அன்று ஜபல்பூரில் பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா இவ்வாறு பேசினார்.

"காங்கிரஸ் வழக்கறிஞர் கபில் சிபல் ராமர் கோயில் கட்டக்கூடாது என்று கூறியுள்ளார். சிபிலை சகோதரர் என்று குறிப்பிட்ட அமித் ஷா 'நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் எதிர்ப்பு தெரிவியுங்கள்'. நான்கு மாதங்களில் மிகப்பெரிய ராமர் கோயில் அயோத்தியில் கட்டப்படும்" என்று கூறினார்.

விரிவாக படிக்க:"உங்கள் எதிர்ப்பையும் மீறி 4 மாதங்களில் மிகப்பெரிய ராமர் கோயில் கட்டப்படும்"

மூத்த பத்திரிகையாளர் கைதின் பின்னணி

படத்தின் காப்புரிமை Facebook
Image caption அன்பழகன்

சென்னையில் நடைபெற்று வரும் புத்தக் கண்காட்சியில் அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்றதாக ஏற்பட்ட சர்ச்சையில் மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆண்டுதோறும் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சி ஜனவரி 9ஆம் தேதி தொடங்கியது.

இதில் மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் மக்கள் செய்தி மையம் என்ற அவரது அரங்கத்தில் தனது புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தார்.

விரிவாக படிக்க:அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்றதாக சர்ச்சை: மூத்த பத்திரிகையாளர் கைது

அமெரிக்கா - இரான் மோதலால் சௌதி அரேபியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?

படத்தின் காப்புரிமை Getty Images

நீண்டகாலமாக அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையில் இருந்து வந்த பதற்றம், கடந்த வாரம் மேலும் அதிகமானது. இரான் ராணுவ ஜெனரல் காசெம் சுலேமானீயை ஆளில்லா விமானத் தாக்குதல் மூலம் அமெரிக்கா கொலை செய்தது. இதற்குப் பதிலடியாக இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது இரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இருந்தாலும், அதில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ளதால், மத்திய கிழக்குப் பகுதி பெரிய நெருக்கடியின் விளிம்பில் சிக்கிக் கொண்டுள்ளது. அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையில் போர் ஏற்பட்டால் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள மற்ற பல நாடுகளிலும் குழப்பம் ஏற்படும். அது ஒட்டுமொத்த உலகின் மீதே தாக்கத்தை ஏற்படுத்தும்.

விரிவாக படிக்க:அமெரிக்கா - இரான் மோதலால் சௌதி அரேபியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்