சூரியனைவிட பழமையான துகள்கள் புவியில் கண்டுபிடிப்பு: வயது 750 கோடி ஆண்டுகள் மற்றும் பிற செய்திகள்

1969ல் இந்த விண்கல் பூமியில் விழுந்தது படத்தின் காப்புரிமை JAMES ST JOHN
Image caption 1969ல் இந்த முர்ஷிசன் விண்கல் பூமியில் விழுந்தது

விண்கல் ஒன்றை ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள், சூரியக் குடும்பத்தைவிட பழமையான, புவியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப்பழமையான துகள்களைக் கண்டறிந்துள்ளனர்.

1960களில் பூமியில் விழுந்த இந்த விண்கல்லின் உள்ளே தூசித்துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவை சுமார் 750 கோடி ஆண்டுகள் பழமையானவை.

சூரியனுடைய வயது சுமார் 460 கோடி ஆண்டுகள் என்பதையும், புவியின் வயது சுமார் 454 கோடி ஆண்டுகள் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த துகள்கள் நமது சூரியக் குடும்பத்தைவிட எவ்வளவு வயது முதிர்ந்தவை என்பது புரியும்.

இந்த துகள்கள் சூரிய குடும்பம் தோன்றும் முன் இருந்த நட்சத்திரங்களில் உருவானவை.

படத்தின் காப்புரிமை ESA/HUBBLE/NASA/JANAÍNA ÁVILA
Image caption முர்ஷிசன் விண்கல்லில் இருந்த சூரியனை விட பழமையான துகள்களில் சில (உள்படம்). முட்டை நெபுலா (படம்) போன்றதொரு நட்சத்திரத்தில் இருந்து இது வந்திருக்கலாம்.

நட்சத்திரங்கள் இறக்கும்போது, அவற்றின் துகள்கள் விண்ணில் வீசி எறியப்படும். அப்படி எறியப்பட்ட துகள்கள்தான் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 750 கோடி வயதுடைய துகள்கள்.

சரி. இந்த துகள்கள் எவ்வளவு பழமையானவை என்பதை எப்படி கண்டுபிடித்தார்கள்? விண்வெளியில் அண்டக் கதிர்கள் (Cosmic rays) எவ்வளவு காலம் இந்தத் துகள்களில் விழுந்துள்ளன என்பது ஆராயப்பட்டு, அதை பொருத்தே அவை எவ்வளவு பழமையானவை என்று கண்டறியப்பட்டன.

நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சஸ் கல்வி நிறுவனத்தின் சஞ்சிகையில் இந்த ஆய்வின் முடிவுகளை ஓர் ஆய்வாளர் குழு விவரித்துள்ளது.

இவை நட்சத்திரங்களின் உறுதியான மாதிரிகள், உண்மையான நட்சத்திர தூசிகள் என்று கூறியுள்ளார் சிகாகோ ஃபீல்டு மியூசியம் என்ற அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் பிலிப் ஹெக். சிகாகோ பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரான இவர், இந்த ஆய்வின் முன்னோடி ஆசிரியர்.

1969ல் ஆஸ்திரேலியாவில் விழுந்த முர்ஷிசன் விண்கல்லின் ஒரு பாகத்தில் இருந்த சூரியனைவிட பழமையான 40 துகள்களை இந்த ஆய்வுக்குழு ஆராய்ந்தது.

'பர்வேஸ் முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சட்டவிரோதமானது'

படத்தின் காப்புரிமை Reuters

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சட்டவிரோதமானது என பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைக்க பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜ துரோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு மரண தண்டனை விதித்து கடந்தாண்டு டிசம்பர் மாதம் அந்நாட்டின் சிறப்பு நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது. ஆனால் தன் மீதான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அரசியலைப்பு சட்டத்தை பின்பற்றி அமைக்கப்பட்டவில்லை எனக்கோரி முஷாரஃப் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

விரிவாக படிக்க:’முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சட்டவிரோதமானது’: பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு

"வெங்காயம் பற்றி பேசக்கூடாது, உப்பைப் பற்றிப் பேசக் கூடாது" - சு. வெங்கடேசன்

சென்னை புத்தகக் கண்காட்சியில் அரசுக்கு எதிரான புத்தகம் விற்ற பத்திரிகையாளர் ஒருவர் வெளியேற்றப்பட்டு, கைதுசெய்யப்பட்ட விவகாரம் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதனைக் கண்டித்து புத்தகக் கண்காட்சி அரங்கில் பேச மறுத்து வெளியேறினார் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்.

புத்தகக் கண்காட்சி அரங்கிற்கு வெளியில் தினமும் எழுத்தாளர்கள், பேச்சாளர்களின் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. திங்கட்கிழமையன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் 'கீழடியில் ஈரடி' என்ற தலைப்பில் மதுரைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான சு. வெங்கடேசன் பேசுவதாக இருந்தது.

அவர் பேச அழைக்கப்பட்டவுடன், சமீபத்திய நிகழ்வுகளின் காரணமாக, தான் கொடுக்கப்பட்ட தலைப்பில் பேசப்போவதில்லை என்று தெரிவித்தார் வெங்கடேசன்

விரிவாக படிக்க: "வெங்காயம் பற்றி பேசக்கூடாது, உப்பைப் பற்றிப் பேசக் கூடாது" - சு. வெங்கடேசன்

Oscars 2020: ஜோக்கர் திரைப்படம் 11 பிரிவுகளில் பரிந்துரை

படத்தின் காப்புரிமை WARNER BROS

இந்த வருடம் அகாடமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது; அதில் ஜோக்கர் திரைப்படம் 11 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஜோக்கர் திரைப்படம், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த நடிகர் உட்பட எட்டு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஜோக்கர் கதாபாத்திரத்தில் நடித்த ஹாக்கின் ஃபீனிக்ஸ் சிறந்த நடிகருக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

விரிவாக படிக்க: Oscars 2020: ஜோக்கர் திரைப்படம் 11 பிரிவுகளில் பரிந்துரை

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு முறைகேடு

டி.என்.பி.எஸ். சி `குரூப்-4` தேர்வு முறைகேடு தொடர்பான விசாரணையில் கலந்து கொண்ட 40 பேருக்கு மாதிரி தேர்வு ஒன்று நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மையத்தில் தேர்வெழுதிய 13 பேர் மற்றும் ராமேஸ்வரம் மையத்தில் தேர்வெழுதிய 27 பேர் உள்ளிட்ட 40 பேர் இந்த விசாரணையில் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் 9 பேர் பெண்கள்.

முன்னதாக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வுகளில் வெற்றி பெற்ற முதல் 100 பேரில், 35-க்கும் மேற்பட்டவர்கள் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய மையங்களில் தேர்வெழுதியதாக சர்ச்சை எழுந்தது.

விரிவாக படிக்க: குரூப்-4 தேர்வு முறைகேடு: விசாரணைக்கு வந்தவர்களுக்கு மீண்டும் தேர்வு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: