சீனா: சாலை புதைகுழியில் பேருந்து கவிழ்ந்து 6 பேர் பலி

சீனாவில் புதைகுழிகள் ஏற்படும் சம்பவங்கள் வழக்கமாகி வருகின்றன. படத்தின் காப்புரிமை AFP
Image caption சீனாவில் புதைகுழிகள் ஏற்படும் சம்பவங்கள் வழக்கமாகி வருகின்றன.

சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் புதைகுழியில் பேருந்து கவிழ்ந்த விபத்தில், குறைந்தபட்சம் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேர் காயமடைந்துள்ளனர்.

சீனாவின் சிங்ஷி மாகாண தலைநகரான ஷின்னிங்கில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது திடீரென சாலையில் ஏற்பட்ட பெரிய புதைகுழியில் பேருந்து பின்புறமாக புதைந்துள்ளது. பேருந்து புதைந்த சில நிமிடங்களில், புதைக்குழிக்குள் வெடிவிபத்து ஒன்றும் ஏற்பட்டுள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் அருகிலுள்ள கண்காணிப்பு கேமிரா ஒன்றில் பதிவாகியுள்ளன.

பேருந்துக்குள் இருந்த பயணிகளை காப்பாற்ற அருகிலிருந்தவர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் புதைகுழியின் அளவு பெரிதாகிக் கொண்டே இருந்ததால், யாரும் பேருந்திற்கு அருகே நெருங்க முடியவில்லை.

சாலையில் ஏற்பட்ட புதைகுழியின் விட்டம் 10 மீட்டர் வரை இருந்ததாக உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. விபத்து நடந்த போது பேருந்திற்குள் எத்தனை பயணிகள் இருந்தனர் என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

இதுபோல புதைகுழிகள் ஏற்படும் சம்பவங்கள் சீனாவில் வழக்கமாகி வருகின்றன. கடந்த 2018-ஆம் ஆண்டு, தென்மேற்கு சீனாவில் உள்ள நடைபாதை ஒன்றில் திடீரென ஏற்பட்ட புதைகுழியில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 2013-ஆம் ஆண்டு, இதே போன்ற விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: