ரஷ்ய அதிபர் புதின் ஆட்சியில் நீடிக்க பதவி விலகிய பிரதமர் மற்றும் பிற செய்திகள்

புதின் படத்தின் காப்புரிமை Getty Images

ரஷ்ய அதிபர் புதின் தனது ஆட்சிக்காலத்தை நீட்டிக்கும் வகையில் அரசமைப்பில் சில மாற்றங்களை முன்மொழிந்த சிறிது நேரத்தில் அந்நாட்டின் பிரதமரும், அமைச்சர்களும் தங்கள் பதவியிலிருந்து விலகியுள்ளனர்.

இந்த அரசியலமைப்பு மாற்றங்கள் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டால், அதிபரின் அதிகாரங்கள் அனைத்தும் நாடாளுமன்றத்திற்கு மாற்றப்படும்.

2024ம் ஆண்டு புதினின் நான்காவது பதவிக் காலம் முடிவடைகிறது. இந்த அரசியலமைப்பு மாற்றத்தால் புதின் வேறொரு புதிய பொறுப்பு ஏற்கலாம் அல்லது மறைமுகமாக அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளலாம் என கூறப்படுகிறது.

வருடாந்திர உரையில், புதின் தனது திட்டங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் விளக்கி கூறினார். பிறகு எதிர்பாராதவிதமாக இந்த மாற்றங்களை முன்னெடுக்க பிரதமர் டிமிட்ரி மெட்வெடேவ் தனது அரசாங்கத்தை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளிவரும்வரை பிரதமர் பதவி விலகுவது குறித்து அமைச்சர்களுக்கு தெரியாது என ரஷ்ய அரசாங்க செய்தி வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன.

புதின் தனது உரையில் கூறியது என்ன ?

அதிபரின் அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்கு மாற்றுவது குறித்து நாடு முழுவதும் வாக்கெடுப்பு நடத்தவுள்ளதாக இரு நாடாளுமன்ற அமர்வு உறுப்பினர்களின் முன்னிலையிலும் அதிபர் விளக்கி கூறினார்.

தற்போதைய நடைமுறைப்படி அதிபர், பிரதமரை நியமிப்பார். அந்த முடிவை நாடாளுமன்றத்தின் கீழவை உறுதி செய்யும்.

ஆனால் புதின் அறிவித்த மாற்றத்தின்படி பிரதமர் மற்றும் அமைச்சர்களை நியமிக்க, நாடாளுமன்ற கீழவைக்கு அதிக அதிகாரம் வழங்கப்படவுள்ளதாகவும் புதின் தெரிவித்தார்.

மாநில கவுன்சில் என்று அழைக்கப்படும் ஒரு ஆலோசனைக் குழுவிற்கு அதிக பொறுப்புகளை வழங்கவும் புதின் பரிந்துரைத்துள்ளார்.

சர்வதேச சட்டத்தின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துதல், வெளிநாட்டு குடியுரிமை அல்லது வெளிநாட்டில் இருந்து வந்து ரஷ்யாவில் வாழ அனுமதி பெற்றவர்கள் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை தடைசெய்யும் சட்டங்களை வலிமைப்படுத்துதல் உள்ளிட்ட சாராம்சங்களும் அரசியலமைப்பு மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மேலும் ரஷ்யாவில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான திட்டங்களையும் அதிபர் வெளியிட்டார். 1990களில் ரஷ்யாவின் மக்கள் தொகையில் வியக்கத்தக்க அளவு சரிவு இருந்தது குறிப்பிடத்தக்கது.

நரேந்திர மோதியிடம் மறுப்பு அல்லது மன்னிப்பை கேட்கும் இந்திய மருத்துவர் சங்கம்

படத்தின் காப்புரிமை Getty Images

பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு லஞ்சமாக பெண்களை அனுப்பி வைத்தனர் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கூறியதாக வெளியாகியுள்ள செய்திகளைத் தொடர்ந்து, மோதி மறுப்பு தெரிவிக்க வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்திய மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் மருத்துவ நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நரேந்திர மோதி நடத்திய சந்திப்பின்போது, அந்தத் துறையில் நடக்கும் சந்தைப் படுத்துதல் உத்திகள் குறித்து பேசியபோதே நரேந்திர மோதி அவ்வாறு பேசியதாக செய்திகள் வெளியாகின.

விரிவாக படிக்க: நரேந்திர மோதியிடம் மறுப்பு அல்லது மன்னிப்பை கேட்கும் மருத்துவர் சங்கம்

இஸ்லாமிய மாணவர்கள் பொங்கலை கொண்டாட கூடாது' - மலேசிய அரசு அறிக்கை

படத்தின் காப்புரிமை Getty Images

பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களில் இஸ்லாமிய மாணவர்கள் பங்கேற்கக் கூடாது என்று அறிவுறுத்தி மலேசிய கல்வித்துறை சார்பில் அந்நாட்டில் இயங்கும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படுவது என்றும், அதற்கும் இஸ்லாத்துக்கும் எந்தவகையிலும் தொடர்பில்லை என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகங்ககள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனவரி 13ஆம் தேதியிட்ட இந்தச் சுற்றறிக்கை மலேசியக் கல்வி அமைச்சகத்தின் சார்பாக அனைத்து மாநில கல்வித்துறை இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இஸ்லாமிய வளர்ச்சித் துறை சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் பொங்கல் பண்டிகையானது ஒரு சமயப் பண்டிகை என்றும், அதில் இஸ்லாமியர்கள் பங்கேற்கக் கூடாது என்றும் முடிவெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க:'இஸ்லாமிய மாணவர்கள் பொங்கல் கொண்டாட கூடாது'- மலேசிய அரசின் சுற்றறிக்கையால் சர்ச்சை

பெரியார் பேரணியில் ராமர் படம் அவமதிக்கப்பட்டதா?

படத்தின் காப்புரிமை Getty Images

துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், 1971ல் பெரியார் கலந்து கொண்ட ஊர்வலத்தில் ராமர் படங்களை செருப்பால் அடித்ததாகவும் இதனால் தி.மு.கவுக்குப் பின்னடைவு ஏற்பட்டதாகவும் சொல்லியிருக்கிறார். அந்த ஊர்வலத்தில் என்ன நடந்தது?

துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு விழா ஜனவரி 14ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, 1971ஆம் ஆண்டில் நடந்ததாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார்.

"1971ல் சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித் தாளில் போடவில்லை. அதை சோ துக்ளக் அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார்.

விரிவாக படிக்க:பெரியார் குறித்து துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசியது உண்மையா?

அமேசான் நிறுவனரின் இந்திய வருகை: போராட்டங்கள் நடப்பது ஏன்?

படத்தின் காப்புரிமை Reuters

இந்தியாவில் தங்கள் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகத்தை டிஜிட்டல் மயமாக்க 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 7,000 கோடி ரூபாய்) இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமேசான் நிறுவனத்தின் விழா ஒன்றில் பங்கேற்க அதன் நிறுவனர் மற்றும் தலைவர் ஜெஃப் பெசோஸ் இந்திய தலைநகர் டெல்லிக்கு வருகை தந்துள்ளார்.

அந்த விழாவில் பேசிய பெசோஸ், இந்தியாவின் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகத்தை டிஜிட்டல் மயமாக்க 1 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்போவதாக, ஆயிரக்கணக்கான வர்த்தகர்கள் முன்னிலையில் அறிவித்தார்.

அது மட்டுமின்றி 2025ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 10 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்களை ஆன்லைன் வர்த்தகம் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் கூறினார்.

விரிவாக படிக்க:அமேசான் நிறுவனரின் இந்திய வருகை: போராட்டங்கள் நடப்பது ஏன்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்