உலக பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்தும் 'டாலர்' உருவான சின்னஞ்சிறு நகரின் கதை

  • 19 ஜனவரி 2020
அமெரிக்க டாலரை வடிவமைத்த சிறிய நகரத்தின் நீண்ட வரலாறு படத்தின் காப்புரிமை Eliot Stein

உலகம் முழுக்க பரவலாக பயன்படுத்தப்படும் பணமாக அமெரிக்க டாலர் உள்ளது. உலக அளவில் இயல்பாக மாற்றத்தக்கதாகவும், அதிகாரப்பூர்வமற்ற முறையில் உலக தர பயன்பாட்டைக் குறிப்பதாகவும் டாலர் உள்ளது. உலகின் 62 சதவீத நிதி கையிருப்புகள் அமெரிக்க டாலர்களில் வைக்கப்பட்டிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

இது யூரோ, யென், ரென்மின்பி (சீன யுவான்) ஆகியவற்றின் ஒட்டுமொத்த கையிருப்பைவிட இரண்டு மடங்கிற்கும் அதிகம். 31 நாடுகள் இதை தங்கள் அதிகாரப்பூர்வ நாணயமாக ஏற்றுக் கொண்டுள்ளன அல்லது இந்தப் பெயரை தங்கள் நாட்டு நாணயத்துக்கு வைத்துக் கொண்டுள்ளன.

66க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் நாணய மதிப்பை அமெரிக்க டாலருடன் ஒப்பிட்டு மதிப்பிடுகின்றன. வட கொரியா, சைபீரியா மற்றும் வடதுருவத்தில் உள்ள ஆராய்ச்சி நிலையங்கள் போன்ற தொலைதூரப் பகுதிகளிலும் இது ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

ஆனால், ஓர் இடத்தில் மட்டும் அமெரிக்க டாலர் ஏற்றுக் கொள்ளப்படாமல் இருக்கிறது. செக்கோஸ்லோவேகியாவில் உள்ள யாஹிமோஃப் என்ற சிறிய நகரில் அதை ஏற்பதில்லை என்பது முரணாக இருக்கிறது. ஏனெனில் இங்குதான் 500 ஆண்டுகளுக்கு முன்பு 1520 ஜனவரியில் முதலாவது டாலர் தயாரிக்கப்பட்டது.

ஆனால், யாஹிமோஃப் நகரில் உள்ள 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராயல் மின்ட் ஹவுஸ் அருங்காட்சியகத்தில் ஒரு டாலர் மதிப்புக்கான ஜார்ஜ் வாஷிங்டன் டாலர் நோட்டை நான் வெளியில் எடுத்தபோது, அதாவது டாலர்களின் மூதாதையர்கள் அச்சிடப்பட்ட இடத்தில் நான் அதை எடுத்தபோது, ஆசிரியர் ஜன் பிரான்கோவிக் புன்னகைத்தபடி என்னை தடுத்தார்.

''நீண்டகாலமாக இது மாதிரி பணத்தாளை நான் பார்த்தது இல்லை'' என்று கூறினார். இரு சகாக்களை அழைத்துக் காட்டினார். ''யாஹிமோஃபில் நாங்கள் கொருனா, யூரோ அல்லது சில சமயங்களில் ரஷிய ரூபிள்களைத்தான் ஏற்றுக் கொள்கிறோம். மூன்று ஆண்டுகளுக்கு மேலான காலத்துக்குப் பிறகு இங்கே வந்துள்ள முதலாவது அமெரிக்கர் நீங்கள்,'' என்று அவர் தெரிவித்தார்.

செக்கோஸ்லோவேகியா - ஜெர்மன் எல்லையின் அருகே 2,700 பேர் வாழும் பரபரப்பு இல்லாத யாஹிமோஃப் நகருக்கு வாருங்கள். டாலர்கள் மற்றும் டாலர் அல்லாதவற்றுக்கும் தாயகம் இது. இந்த இடத்தைப் பற்றி நீங்கள் கேள்விப்படாமல் போயிருக்க வாய்ப்பு உண்டு. யுனெஸ்கோவின் புதிய உலக பாரம்பரிய தளங்களின் நினைவாக இந்த நகருக்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியாத விஷயமாக இருக்கலாம்.

தாராளமய பொருளாதார உலகில் ஆதிக்கம் செலுத்தும் பணம், ஒரே சாலை மட்டுமே உள்ள இந்த நகரில்தான் உருவானது என்பதை நீங்கள் ஒருபோதும் அறிந்திருக்க மாட்டீர்கள். வங்கிகளைவிட விலைமாதர் விடுதிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ள இந்த நகரம் கம்யூனிச பொருளாதாரம் பின்பற்றுவந்தபோது உண்டான வீழ்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது.

படத்தின் காப்புரிமை Eliot Stein

உண்மையில், இந்த நகரின் மேலும் கீழுமாக ஒரே நாளில் நீங்கள் நடந்து முடிக்கலாம். மலையில் பழமையான மற்றும் நவீன கால கட்டட இடிபாடுகள், பள்ளத்தாக்கின் அடிவாரத்தில் பகல்நேர அழகுநிலையங்கள், 16ஆம் நூற்றாண்டு கோட்டை வரையில் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் அதுதான் டாலரின் பிறப்பிடம் என்பதை ஒருபோதும் உணர மாட்டீர்கள்.

''அதெப்படி முடியும்? அதுபற்றிய அறிவிப்புப் பலகை எதுவும் அங்கு கிடையாது - இங்கே வாழ்வோரில் பலருக்கும் அது பற்றி தெரியாது!'' என்று தொண்டு நிறுவனமான மலைப்பகுதி குருஸ்னே ஹோரி- எர்ஜெபிரிஜேவின் இயக்குநர் மைக்கேல் அர்பன் கூறினார். இருளடைந்த படிக்கட்டுகள் வழியாக, நாணயங்கள் அச்சிடப்பட்ட நாணய சாலையின் தரை தளத்துக்கு என்னை அவர் அழைத்துச் சென்றார்.

'யாஹிமோஃப் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் நாணய தயாரிப்பு நகரம் எதுவும் உலகில் கிடையாது. ஆனால் நாங்கள் எங்கள் வரலாற்றை மறந்துவிட்டோம்'' என்றார் அவர்.

யாஹிமோஃப் நகரம் உருவானதற்கு நீண்ட காலத்துக்கு முன்பு வரையில், நவீன கால பொஹிமியா மற்றும் சாக்சோனி பகுதிகளைப் பிரித்த மலைச் சிகரங்களில் நரிகளும், கரடிகளும்தான் காட்டுக்குள் சுற்றித் திரிந்து கொண்டிருந்தன. அங்கு 1516ல் ஏராளமான வெள்ளி கண்டுபிடிக்கப்பட்டபோது, அந்தப் பகுதியைச் சேர்ந்த மதிப்புக்குரிய கவுன்ட் ஹியரோனிமஸ் ஸ்ச்சிலிக், ஜோவாச்சிம்ஸ்தல் (`ஜோவச்சிம் பள்ளத்தாக்கு') என்று அதற்குப் பெயரிட்டார். இயேசுவின் தாத்தா நினைவாக அந்தப் பெயர் வைத்தார். சுரங்கத் தொழில் செய்தவர்களுக்கு உள்ளூரில் ஆதரவு அளிப்பவராக அவர் இருந்தார்.

``அந்த காலத்தில், சிறிய நகரங்கள் அளவிலான நாடுகளாக ஐரோப்பா இருந்தது. ஆட்சியாளர்கள் அதிகாரப் போட்டியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலம்'' என்று உள்ளூர் வரலாற்றாளர் ஜரோஸ்லவ் ஓச்செக் தெரிவித்தார். ``பொதுவான ஒரு நாணய முறை எதுவும் இல்லாத சூழ்நிலையில், அரசர்கள் தங்களுக்கான கரன்சியை அச்சிட்டுக் கொள்வதன் மூலம் கட்டுப்பாடு செலுத்த முடியும் என்று கருதினர். அதைத்தான் ஸ்ச்சிலிக் செய்தார்,'' என்று அவர் விவரித்தார்.

ஸ்ச்சிலிக் வெள்ளி நாணயங்கள் அச்சிடுவதற்கு 1520 ஜனவரி 9ஆம் தேதி பொஹிமியா நாடாளுமன்றம் அனுமதி அளித்தது. ஜோவாச்சிம் உருவத்தை ஒரு புறமும், பொஹிமிய சிங்கத்தின் உருவத்தை மறுபுறமும் வைத்து அவர் நாணயம் தயாரித்தார். புதிய கரன்சிக்கு ''ஜோவாச்சிம்ஸ்தாலர்ஸ்'' என்று பெயரிட்டார். அது சீக்கிரத்தில் ''தாலர்ஸ்'' என சுருங்கிவிட்டது.

படத்தின் காப்புரிமை Eliot Stein

உலோகத்தாலான நாணயங்கள், ஒரு பொருளின் மதிப்பை நிர்ணயிக்கும் காலத்தில், தங்கள் ''ரைக்தாலர்'' வெள்ளி நாணயம் பரவுவதற்கும், நீடித்திருப்பதற்கும் ஸ்ச்சிலிக் புத்திசாலித்தனமாக இரண்டு விஷயங்களைச் செய்தார். மத்திய ஐரோப்பாவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட குல்டன்குரோஸ்சென் நாணயம் போலவே 29.2 கிராம் எடை மற்றும் அதே அளவு விட்டத்தில் வெள்ளி நாணயங்களை உருவாக்கினார். இது முதலாவது விஷயம். அதனால் பக்கத்தில் உள்ள மன்னராட்சி நாடுகள் அதை எளிதில் ஏற்றுக்கொண்டன. மிக முக்கியமாக உலகம் பார்த்திராக அளவுக்கு அதிகமான நாணயங்களை அவர் அச்சிட்டார்.

1,050 பேர் வாழ்ந்த சிறிய பகுதியை, வெறும் 10 ஆண்டுகளில் ஐரோப்பாவில் மிகப் பெரிய நாணய மையமாக மாற்றினார். 18,000 பேர் வரை அங்கு வாழ்ந்தனர். 8,000 சுரங்கத் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்திய 1,000 வெள்ளிச் சுரங்கங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தன. 1533 வாக்கில்,ஜோவச்சிம்ஸ்தல்தான் பொஹிமியாவில் இரண்டாவது பெரிய நகரமாக இருந்தது.

முதலாவதாக பராக் நகரம் இருந்தது. 16ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்தில், இந்த மலைப் பகுதிகளில் தயாரிக்கப்பட்ட சுமார் 12 மில்லியன் தாலர்ஸ்கள் ஐரோப்பா முழுக்க பரவலாகப் புழக்கத்தில் இருந்தன என்று அர்பன் கூறுகிறார். அது அந்த கண்டத்தில் வேறெந்த கரன்சியை விடவும் அதிகமானதாக இருந்தது.

ஜோவச்சிஸ்தலின் வெள்ளி படிமங்கள் சீக்கிரமே காலியாகிவிட்டன. 1566 வாக்கில் ஐரோப்பா முழுக்க அறியப்பட்ட கரன்சியாக தாலர்ஸ் இருந்தது. ரோம சாம்ராஜ்யத்திற்கு உள்பட்ட நாடுகளில் ஒரே மாதிரி, ஒரே அளவிலான வெள்ளி நாணயம் தயாரிக்க வேண்டும் என திட்டமிட்டபோது, தாலர்ஸ் தான் தேர்வு செய்யப்பட்டது. ''ரைக்தாலர்'' வெள்ளி நாணயங்கள் எல்லா பகுதிகளிலும் ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

''அடுத்த 300 ஆண்டுகள், உலகில் பல நாடுகள் தங்கள் கரன்சிகளை ரைக்தாலர் போல வடிவமைத்துக் கொண்டன'' என்று அர்பன் தெரிவித்தார். ஐரோப்பாவில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்த மிகப் பழமையான ஜாச்சிமோ சுரங்கத்தின் துருப்பிடித்துள்ள உலோகக் கூரையையும், ஸ்ச்சிலிக் கோட்டையையும் பார்த்தபடி அவர் பேசினார். அவை அனைத்தும் இப்போது நகரில் பாழடைந்த பகுதிகளாகிவிட்டன. '' சீக்கிரத்தில், தாலர்ஸ் இங்கிருந்து வெகு தொலைவுக்குச் சென்றுவிட்டது'' என்றார் அவர்.

ஐரோப்பா முழுவதிலும் இருந்த ஆட்சியாளர்கள் தாலர்ஸ் அடிப்படையில் தங்கள் நாணயங்களை உருவாக்கியபோது, தங்கள் மொழிகளில் பெயர் வைத்துக் கொண்டனர். டென்மார்க், நார்வே, ஸ்வீடன் நாடுகளில் ஸ்தல் என்பது ''டேலர்'' என்றானது. ஐஸ்லாந்தில் அது ''டேலுர்'' என்று பெயர் பெற்றது.

இத்தாலியில் ''டேல்லரோ'' என்று குறிப்பிடப்பட்டது. போலந்தின் ''டலர்'', கிரீஸின் ''டேலிரோ'' அல்லது ஹங்கேரியின் ''டேல்லர்'' ஆகிய பெயர்களுடன் குழப்பம் வராமல் இப்படி பெயரிடப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் இது ''ஜோக்கன்டலே'' என பெயர் பெற்றது. ''அதற்கு முன்பு ரோம சாம்ராஜ்யத்தில் சிறு சிறு நாடுகளில் சுமார் 1,500 வகையான நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன'' என்று Greenback: The Almighty Dollar and the Invention of America என்ற தனது புத்தகத்தில் ஜாசன் குட்வின் எழுதியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Eliot Stein

''தாலர்'' விரைவில் ஆப்பிரிக்காவுக்கும் பரவியது. அங்கு எத்தியோப்பியா, கென்யா, மொசாம்பிக் மற்றும் தான்சானியாவில் 1940கள் வரை பயன்பாட்டில் இருந்தது. அரபு நாடுகள் பலவற்றிலும் இந்தியாவிலும் பரவியது.

20ஆம் நூற்றாண்டிலும் அது புழக்கத்தில் இருந்தது. ஸ்லோவேனியாவில் 2007 வரையில் அதிகாரப்பூர்வ பணமாக ''ட்டோலர்'' இருந்து வந்தது. சமோவாவில் கரன்சி இப்போதும் ''ட்டாலா'' என்று அழைக்கப்படுகிறது. ரோமானியா (''லெவு''), பல்கேரியா (''லெய்'') மற்றும் மால்டோவியா (''லெவு'') நாடுகளின் இன்றைய கரன்சிகள் 500 ஆண்டுகளுக்கு முன்பு முதலாவது தாலரில் முத்திரையில் இடம் பெற்ற சிங்கத்தின் பெயர்களில்தான் உள்ளன.

ஆனால் டச்சு கரன்சி லீயுவென்டேலர் (''லயன் டாலர்'' அல்லது சுருக்கமாக ''டேலர்''- ஆங்கிலத்தில் ''டாலர்'' என்பது போன்ற உச்சரிப்பு) தான் அமெரிக்க கரன்சிக்கான பெயரைக் கொடுத்தது. 17ஆம் நூற்றாண்டில் டச்சு காலனியினருடன் நியூ ஆம்ஸ்டர்டாம் வந்து சேர்ந்த டேலர்கள், வெகு சீக்கிரத்தில் 13 காலனி நாடுகளுக்கும், ஆங்கிலம் பேசும் பகுதிகளுக்கும் பரவியது. பரவலாக புழக்கத்தில் இருந்த ஸ்பானிய ரியல் டி ஏ ஒச்சோ (''எட்டில் ஒரு துண்டு'') நாணயம் - ''டாலர்ஸ்'' என்பது உள்பட, எல்லாமே ஒரே மாதிரியான எடையுள்ள வெள்ளி நாணயங்களாக இருந்தன. அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ கரன்சியாக 1792ல் டாலர் அறிவிக்கப்பட்டது. அப்போதிருந்து, தாலர் என்பதில் இருந்து உருவான இந்த டாலர் ஆஸ்திரேலியா, நமீபியா, சிங்கப்பூர், பிஜி உள்ளிட்ட பகுதிகளுக்குப் பரவியது.

அர்பன் மற்றும் ஓச்செக் ஆகியோர் என்னை நாணயசாலைக்கு வெளியே, கம்பி வேலியைத் தாண்டி, ராணுவ கண்காணிப்பு கோபுரம் போன்ற அமைப்பு இருந்த, அருகில் உள்ள மலைக்குன்று பகுதிக்கு அழைத்துச் சென்றனர். யாஹிமோஃப் பகுதியைச் சேர்ந்த சுரங்கத் தொழிலாளர்கள் தங்கள் பெருமைகள் என சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை என்பதையும் அறிந்து கொண்டேன்.

நகரின் பளபளக்கும் வெள்ளிப் படிமங்கள் குறையத் தொடங்கியதும், புதிரான மிகவும் கருப்பான ஒரு பொருளை தொழிலாளர்கள் எடுக்கத் தொடங்கினர். அது உயிரைப் பறிக்கும் நுரையீரல் நோய்களை உருவாக்குவதாக இருந்தது. அந்த தாதுப் பொருளை அவர்கள் ''பெச்பிளன்டே'' என்று (''பெச்'' என்றால் ஜெர்மன் மொழியில் ''துரதிருஷ்டம்'' என அர்த்தம்) கூறினர். இந்த நகரின் சுரங்கங்கள் உள்ள பகுதியில் 1898ல் வாழ்ந்த இயற்பியல் விஞ்ஞானி மேரி கியூரி, முதலாவது டாலர்களை உருவாக்கிய அதே தாதுப் பொருளில்தான் ரேடியம் மற்றும் பொலேனியம் என்ற கதிரியக்கப் பொருள்களும் உள்ளன என்பதைக் கண்டுபிடித்தார்.

படத்தின் காப்புரிமை Eliot Stein

அந்தக் கண்டுபிடிப்பு கியூரியின் கைகளை உருச்சிதைவு செய்துவிட்டது. இறுதியில் அவரைக் கொன்றுவிட்டது. நோபல் பரிசு பெற்ற முதலாவது பெண்மணி என்ற பெருமையையும் அவருக்குப் பெற்றுத் தந்தது. ஆனால், அது அந்த நகருக்கு இரண்டாவது சுற்று பிரபலத்தை உருவாக்கியது. உலகின் கரன்சிகளைத் தயாரிக்கக் காரணமாக இருந்த அந்த நகரம் இப்போது, அணு ஆயுதப் போட்டிக்கு அடிப்படைப் பொருளை தரும் பகுதியாக மாறிவிட்டது.

அடுத்த பல தசாப்தங்களுக்கு, நகரில் மீண்டும் செயல்படத் தொடங்கிய வெள்ளி சுரங்கங்கள், உலகின் அதிமுக்கியமான ரேடியம் பொருள்களுக்கான ஆதாரமாக மாறின. இங்குள்ள அணு உலையில் நாஜிக்கள் பரிசோதனை செய்து பார்த்தனர்.

''அணு குண்டின் தந்தை'' ஜே. ராபர்ட் ஆப்பென் ஹெய்மர், யாஹிமோஃப் நகரின் யுரேனிய செறிவுமிக்க சுரங்கங்கள் என்ற தலைப்பில் ஆய்வறிக்கை எழுதினார். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியிடம் இருந்து ஜோவச்சிம்ஸ்தல் நகரை செக்கோஸ்லோவேகியா மீட்ட பிறகு - யாஹிமோஃப் என பெயர் மாற்றி, சில நூறாண்டுகளாக அங்கு வாழ்ந்து வந்த ஜெர்மன் மொழி பேசும் மக்களை வெளியேற்றியது. ஸ்டாலினுடன் அரசு செய்து கொண்ட ரகசிய ஒப்பந்தத்தின்படி அந்த நகரம் ரஷ்யாவின் அரசியல் கைதிகளுக்கான முகாம் இடமாக மாற்றப்பட்டது.

ஆப்பென்ஹெய்மர் தயாரித்த அணுகுண்டு இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த பிறகு, 1949க்கும் 1964க்கும் இடைப்பட்ட காலத்தில் சுமார் 50,000 சோவியத் அரசியல் கைதிகள் யாஹிமோஃப் நகருக்கு அனுப்பப்பட்டனர். சோவியத் ரஷ்யாவில் அணு ஆயுதத் தொகுப்புக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு, சுரங்கம் தோண்டி, யுரேனியம் எடுத்து அனுப்பி வைப்பது அவர்களுக்கான வேலையாக இருந்தது. உண்மையில், நவீன உலகின், வலிமை மிக்க இரண்டு விஷயங்களான - டாலர் மற்றும் அணு ஆயுதங்கள் - ஆகியவற்றுக்கான மூலப் பொருள்கள் பொஹிமிய மலைகளின் சுரங்கங்களில் இருந்து தான் எடுக்கப்பட்டுள்ளன.

இன்றைக்கு யாஹிமோஃப் நகரம் சீரற்றதாக இருந்த தன் கடந்த காலத்தின் நினைவுகளை சுமந்து கொண்டிருக்கிறது. சுரங்கத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட கழிவுப் பொருட்கள் இப்போது பள்ளத்தாக்கின் பசுமையான மரங்களால் மூடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.19 ஆம் நூற்றாண்டில், யுரேனியம் கழிவுகளின் நச்சுப் பொருட்களுடன் சேர்த்து வரிசைகளாக கட்டப்பட்ட வீடுகள் மெல்ல சிதிலமடைந்து, பழைய பொலிவுக்கு உருவாக்கப்படுகின்றன. முதலாவது டாலர்களை உருவாக்க வெள்ளி எடுக்கப்பட்ட ஸ்வோர்னோஸ்ட் என்ற, யாஹிமோஃப் நகரின் கடைசி சுரங்கம் இப்போது கதிரியக்கத் தன்மை உள்ள நீரை ஆடம்பர சுற்றுலா விடுதிகளுக்கு பம்ப் செய்து அனுப்புகிறது. ''ரேடான் தண்ணீர் தெரபி'' என விளம்பரப்படுத்தி அந்த விடுதிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

டாலரின் பிறப்பிடம் என்பதை கூறிக்கொள்ளும் வகையில் இந்த நகரில் எந்த அறிவிப்புப் பலகையும் இன்னும் வைக்கப்படவில்லை. ஆனால், நகரின் ராயல் மின்ட் ஹவுஸ் அருங்காட்சியகத்துக்கு உள்ளே சென்று, ஐநூறாவது ஆண்டுக்கான பெருமை என்ன என்று கேட்டால், ஒரு டேபிளுக்குப் பின்னால் இருக்கும், நியூ ஜார்ஜ் வாஷிங்டன் உருவம் பொறித்த சிறிய பிரேம் ஒன்றை காட்டுவார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்