அரச குடும்ப கடமைகளில் இருந்து விலகிய இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி மற்றும் பிற செய்திகள்

ஹாரி - மேகன் படத்தின் காப்புரிமை KARWAI TANG

பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதியினர் அரச குடும்ப கடமைகளில் இருந்து விலகுவதாக பக்கிம்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

HRH - His/Her Royal Highness என்று குறிப்பிடப்பட்டு பிரிட்டன் அரச குடும்பத்தின் ஒரு முக்கிய சில உறுப்பினர்கள் அழைக்கப்படுவர். ஹாரி மற்றும் மேகன் இந்த பட்டங்களை குறிப்பிட்டு இனி அழைக்கப்பட மாட்டார்கள் என இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்கள் அரச கடமைகளுக்காக இனி பொதுமக்களின் வரிப்பணத்தையும் பயன்படுத்த மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரிட்டனில் அவர்களுக்கான குடும்ப வீடான ஃப்ரோக்மோர் காட்டேஜ்ஜை புதுப்பிக்க மக்கள் வரிப்பணத்தில் இருந்து பெறப்பட்ட 2.4 மில்லியன் பவுண்டுகள் நிதியை திரும்பிக் கொடுக்க ஹாரி மற்றும் மேகன் முடிவெடுத்துள்ளதாகவும் பக்கிம்ஹாம் அரண்மனை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல மாதங்கள் இதுகுறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, ஹாரி, மேகன் மற்றும் பேரக்குழந்தைக்கு சிறப்பான வகையில் முழு ஆதரவு அளிக்க முடிவெடுக்கப்பட்டதாக பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹாரி, மேகன் மற்றும் ஆர்ச்சி எப்போதும் என் குடும்ப உறுப்பினர்களாகவே இருப்பார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி: ஹாரி - மேகன் புதிய வாழ்க்கை: ஒப்புக் கொண்ட பிரிட்டன் ராணி

சீனாவில் வறுமையால் இறந்த இளம்பெண்

படத்தின் காப்புரிமை FENG VIDEO

ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிருக்கு போராடி கொண்டிருந்த இளம்பெண்ணுக்காக திரட்டப்பட்ட 10 லட்சம் யுவான் (சுமார் ஒரு கோடி இந்திய ரூபாய்) நிதியில் சொற்ப பணமே அவர் உயிரிழப்பதற்கு முன்பு வரை அளிக்கப்பட்ட சம்பவம் சீன மக்களிடையே கோபத்தைத் தூண்டியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் மூச்சுத் திணறலுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வு ஹுயானின் பின்னணி குறித்து தெரிந்த உடன் அவருக்கு அந்நாடு முழுவதுள்ள மக்கள் நிதியுதவி செய்தனர்.

சுமார் ஐந்தாண்டுகளுக்கு தொடர்ச்சியாக தினமும் சொற்ப பணத்தில் வாழ்க்கையை நடத்தி வந்த அவரது உடல் எடை வெறும் 20 கிலோதான்.

விரிவாக படிக்க: சீனாவில் வறுமையால் இறந்த இளம்பெண்: மக்கள் கோபத்தை தூண்டிய மரணம்

உ.பி விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி

படத்தின் காப்புரிமை FACEBOOK

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடைபெற இருந்த கூட்டத்தில் உரையாற்ற சென்ற தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான கண்ணன் கோபிநாதன் அந்நகர விமான நிலையத்திலேயே தடுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கண்ணன், "அலகாபாத் விமான நிலையத்தில் இருந்து நான் வெளியேறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், டெல்லி விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டேன். பேச்சு சுதந்திரம் குறித்து யோகித் ஆதித்யநாத் மிகவும் பயப்படுகிறார்" என்று கருத்துத் தெரிவித்துள்ள அவர், உத்தரப்பிரதேச அரசு தனக்கு டெல்லிக்கு இலவச விமான பயணத்தை அளிப்பதாகவும், தான் விரைவில் மீண்டும் உத்தரப்பிரதேசம் வரவுள்ளதாகவும் அந்த பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்

விரிவாக படிக்க: உ.பி விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி

காஷ்மீரில் முடிவுக்கு வந்த தொலைத்தொடர்பு முடக்கம்

படத்தின் காப்புரிமை NURPHOTO / GETTY IMAGES
Image caption தொலைத்தொடர்பு வசதிகள் முடக்கப்பட்டது காஷ்மீரின் அவசரகால சேவைகள் மற்றும் பொருளாதாரத்துக்கு பின்புலமாக இருந்த சுற்றுலா துறையை பெரிதும் பாதித்தது. (கோப்புப்படம்)

ஜம்மு - காஷ்மீரில் 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு 5ஆம் தேதி முதல் முடக்கி வைக்கப்பட்டிருந்த செல்பேசி சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

இனி ப்ரீபெய்டு செல்பேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசம் முழுவதும் செயல்படும்.

அத்துடன், இன்று, சனிக்கிழமை முதல் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மொத்தம் 10 மாவட்டங்களில் குப்வாரா மற்றும் பந்திபோரா ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் ஜம்மு பிரதேசத்தில் உள்ள 10 மாவட்டங்களிலும் 2ஜி இணையதள சேவைகளும் தொடங்கியுள்ளன.

விரிவாக படிக்க: காஷ்மீரில் முடிவுக்கு வந்த முடக்கம்; செல்பேசி சேவைகள் மீண்டும் தொடக்கம்

சானியா மிர்சா: குழந்தை பிறப்புக்கு பின் முதல் சர்வதேச டென்னிஸ் வெற்றி

படத்தின் காப்புரிமை STEVE BELL / GETTY IMAGES
Image caption உக்ரைன் டென்னிஸ் வீராங்கனை நாடியா கிச்சோனக் (வலது) உடன் சேர்ந்து இரட்டையர் பிரிவில் வென்றுள்ளார் சானியா

குழந்தை பிறப்பு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் டென்னிஸ் போட்டிகளில் விளையாடாமல் இருந்த இந்திய வீராங்கனை சானியா மிர்சா, குழந்தை பிறப்புக்கு பின் தாம் விளையாடிய முதல் சர்வதேச விளையாட்டுப் போட்டியிலேயே சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் மகளிருக்காக நடத்தப்படும் ஹோபர்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் உக்ரேனின் நாடியா கிச்சோனக் உடன் சேர்ந்து விளையாடிய சானியா மிர்சா, தங்களை எதிர்த்து போட்டியிட்ட சீன இணையை 6-4, 6-4 என்ற கணக்கில் வீழ்த்தினர்.

விரிவாக படிக்க: குழந்தை பிறப்புக்கு பின் முதல் பட்டம்: வரலாறு படைத்த சானியா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: