சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம் - ஐரோப்பிய நாடாளுமன்றம் திட்டம்

சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம் - ஐரோப்பிய நாடாளுமன்றம் நடவடிக்கை

பட மூலாதாரம், Getty Images

இந்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய தீர்மானங்களில் இந்த வாரம் விவாதமும், அதைத்தொடர்ந்து வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது.

'ஆறு தீர்மானங்கள்'

கடந்த டிசம்பர் மாதம் பாஜக தலைமையிலான இந்திய அரசு அறிமுகப்படுத்திய குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதை கண்டித்து இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மக்கள் போராட்டங்கள் மட்டுமின்றி, மலேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளின் தலைவர்களும், ஐக்கிய நாடுகள் சபையும் இந்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சர்வதேச அளவில் முதல் முறையாக, குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றிய இந்திய அரசின் செயல்பாட்டை எதிர்த்து ஐரோப்பிய நாடாளுமன்றம் இந்த வாரம் விவாதம் நடத்துவதுடன், மொத்தம் ஆறு தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images

இதுதொடர்பாக, ஐரோப்பிய நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள இந்த வாரத்திற்கான அவை நடவடிக்கை குறிப்பில், வரும் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் இந்தியாவின் குடியுரிமை திருத்த சட்டம், 2019 தொடர்பாக விவாதமும், அதைத்தொடர்ந்து வாக்கெடுப்பும் நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்ட ஆறு முக்கிய நாடாளுமன்ற குழுக்கள் இந்த தீர்மானங்களை முன்மொழிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் இந்த நடவடிக்கை குறித்து இந்திய அரசின் தரப்பில் இருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

பெல்ஜியம் நாட்டின் தலைநகரும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம் அமைந்துள்ள நகரமுமான புரூசெல்ஸில், வரும் மார்ச் மாதம் இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நடவடிக்கை எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: