ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் - இருவர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் - இருவர் உயிரிழப்பு

பட மூலாதாரம், Getty Images

கிழக்கு ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

"எங்களுக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஆப்கன் ராணுவ சீருடையில் இருந்தவரே அமெரிக்கா - ஆப்கானிஸ்தான் கூட்டுப் படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்" என அமெரிக்க ராணுவத்தின் படைத்தளபதி சோனி லெகெட் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் நாங்கர்ஹார் மாகாணத்தில் நேற்று (சனிக்கிழமை) இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக அவர் மேலும் கூறினார்.

2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலுள்ள இரட்டை கோபுரம் மீது தாலிபன்கள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு, சுமார் 13,000 அமெரிக்க ராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தானில் தாலிபன்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்ற தகவல் இதுவரை தெரியவில்லை என்றும் அதனைப் பற்றிய தகவல்களை சேகரித்து வருவதாகவும் அமெரிக்க ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் ஆப்கானிஸ்தான் சென்றிருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்கப் படைகள் படிப்படியாக அங்கிருந்து திரும்பப்படும் என உறுதியளித்திருந்தார்.

இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு, ஆப்கானிஸ்தானிலிருந்து தாலிபன்களை விரட்டியடிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டது. ஆனால், அப்போதிருந்ததை விட இப்போது ஆப்கானிஸ்தானில் அதிகளவிலான மாகாணங்களை தாலிபன்கள் கட்டுக்குள் வைத்துள்ளனர்.

அமெரிக்கா - தாலிபன்கள் இடையே அவ்வப்போது நடைபெற்று வரும் அமைதி பேச்சுவார்த்தைகள் கடந்த சில மாதங்களாக முடங்கியுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: