அமெரிக்காவை காப்பாற்ற டிரம்ப் பதவி விலக வேண்டும்: மகாதீர் வலியுறுத்தல்

மகாதீர் படத்தின் காப்புரிமை VLADIMIR SMIRNOV/getty images

அமெரிக்காவைக் காப்பாற்ற வேண்டுமானால் அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி விலகவேண்டும் என மலேசிய பிரதமர் மகாதீர் மொஹம்மத் தெரிவித்துள்ளார்.

தாம் அமெரிக்கர்கள் குறித்து எதுவும் சொல்லவில்லை என்றும், அதிபர் டிரம்ப் குறித்து மட்டுமே பேசுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இஸ்ரேல் பாலத்தீன விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார். மேலும் 'மத்திய கிழக்கு அமைதித் திட்டம்' ஒன்றையும் அவர் முன்வைத்திருந்தார்.

'இந்த நூற்றாண்டின் ஒப்பந்தம்' என்று அதிபர் டிரம்ப் வர்ணித்த அந்தத் திட்டத்தை மலேசியப் பிரதமர் மகாதீர் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவைக் காப்பாற்ற டிரம்ப் பதவி விலகவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

"அமெரிக்க மக்கள் குறித்து நான் ஏதும் சொல்லவில்லை. அமெரிக்க குடிமக்கள் மிகவும் நல்லவர்கள். ஆனால் அதிபர் டிரம்ப் அப்படியல்ல. எனவேதான் அமெரிக்காவைக் காப்பாற்ற அவர் பதவி விலகவேண்டும் என வலியுறுத்தினேன்," என்று இன்று (திங்கள்கிழமை) சைபர் ஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை SAUL LOEB/getty images

"டிரம்ப் தன்னையும் தன் கொள்கைகளையும் தாமே இழிவுபடுத்திக் கொண்டுள்ளார். மேலும் வெளிநாட்டு அழுத்தங்கள் மூலம் தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கிறார்," என்றார் மகாதீர்.

அமெரிக்க தூதரகம்: மகாதீர் கருத்து ஏமாற்றம் அளிக்கிறது

இந்நிலையில் இன்றைய அமெரிக்க அதிபர் குறித்து மகாதீரின் கருத்துக்கள் மிகுந்த ஏமாற்றமளிப்பதாக மலேசியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. மலேசியா- அமெரிக்கா இடையேயான நீண்ட நாள் உறவுக்கு அடித்தளமாக அமைந்துள்ள ஆக்கப்பூர்வமான உரையாடல்களுக்கு ஏற்ப மகாதீரின் கருத்துக்கள் அமையவில்லை என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவானது பிராந்திய ரீதியிலும் உலகளாவிய நிலையிலும் மிக முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது என்றும் அமெரிக்க தூதரகம் அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டி உள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்தாண்டு காஷ்மீர் விவகாரம் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வந்த மகாதீர் தற்போது பாலத்தீன- இஸ்ரேல் விவகாரத்தில் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளார். குறிப்பாக, பாலத்தீன பிரச்சனையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டையும் செயல்பாட்டையும் அவர் தொடர்ந்து கண்டித்து வருகிறார்.

அமெரிக்கா முன்வைத்துள்ள மத்திய கிழக்கு அமைதித் திட்டத்தைப் புறக்கணிக்க பாலத்தீனத்துக்கு முழு உரிமை உண்டு என்றும், பாலத்தீனத்தை இஸ்ரேல் அரசு தொடர்ந்து ஒடுக்க நினைத்தால் மலேசியா அமைதி காக்காது என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாலத்தீனிய விவகாரம் தொடர்பாக சீனா உள்ளிட்ட நாடுகளுடன் தாம் பேச இருப்பதாகவும் மகாதீர் கூறியுள்ளார். சீனா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட இஸ்லாமிய தேசமல்லாத உலகின் மற்ற வல்லாதிக்க நாடுகளும் பாலத்தீனம், இஸ்ரேல் இடையேயான பிரச்சனையில் தலையிட வேண்டும். ஏனெனில் இது மனித உரிமை சம்பந்தப்பட்ட விஷயம் என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: