பாகிஸ்தானில் ஹஃபீஸ் சயீதுக்கு சிறைத் தண்டனை: மும்பை தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்

Hafiz Saeed படத்தின் காப்புரிமை AFP

தீவிரவாத அமைப்பு எனும் குற்றச்சாட்டின்கீழ் தடை செய்யப்பட்ட ஜமாத் உத்-தவா அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீதுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

ஜூலை 2019இல் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் தீவிரவாத செயல்பாடுகளுக்காக முறைகேடாக நிதி திரட்டியதாக கைது செய்யப்பட்டார் ஹஃபீஸ் சயீத். அவர் மீதான குற்றம் சென்ற டிசம்பர் மாதம் நிரூபிக்கப்பட்டது.

வெவ்வேறு பெயர்களில் தொண்டு நிறுவனங்களை உருவாக்கி, அவற்றின் மூலம் அவர் முறைகேடாக நிதி திரட்டினார் என்று லாகூரில் உள்ள தீவிரவாத தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

ஜமாத் உத்-தவா அமைப்பின் தொண்டு நிறுவனமான ஃபலா-இ-இன்ஸானியாத் அமைப்பையும் தடை செய்துள்ள இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு, அதன் அவசர ஊர்திகளை பறிமுதல் செய்ததுடன், இலவச மருத்துவ மையங்களையும் இழுத்து மூடியது.

ஃபினான்சியல் ஏக்சன் டாஸ்க் ஃபோர்ஸ் எனும் பன்னாட்டு அமைப்பு பாகிஸ்தான் அரசு மேற்கொள்ளும் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறது. பாகிஸ்தான் போதிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், அந்த நாட்டுக்கு வழங்கப்படும் உதவிகள் நிறுத்தப்படும்.

இன்று தீவிரவாதம் தொடர்பான வேறு ஒரு வழக்கிலும் அவருக்கு ஐந்தரை ஆண்டு சிறை தண்டனை மற்றும் 15,000 பாகிஸ்தான் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு சிறை தண்டனைகளையும் அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். அதாவது முதல் வழக்கின் சிறை தண்டனைக்கான ஐந்தரை ஆண்டுகளும் இரண்டாவது வழக்கின் தண்டனைக்கான காலமாகவும் கருதப்படும்.

யார் இந்த ஹஃபீஸ் சயீத்?

பயங்கரவாதி என அமெரிக்காவால் கூறப்படும் சயீத், லஷ்கர் - ஈ -தய்பா அமைப்பின் நிறுவனர் ஆவார். 2008ஆம் ஆண்டு மும்பையில் 160 பேரை பலிவாங்கிய தாக்குதலுக்கு அவரது தீவிரவாத அமைப்புதான் காரணம் என இந்தியாவும், அமெரிக்காவும் குற்றம் சாட்டுகின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

2006 முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஹஃபீஸ் சயீத், மும்பை தாக்குதல் தொடர்பாக டிசம்பர் 2008இல் கைது செய்யப்பட்டார்.

ஆனால் இதில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என சயீத் மறுத்து வருகிறார். மேலும், தங்களின் 300 மத நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், மற்றும் அவசர ஊர்தி சேவைகளுக்கு தீவிரவாத அமைப்புடன் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்து வருகிறார்.

சயீத் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என 2014இல் அமெரிக்க அரசு அறிவித்திருந்தது.

பின்னர் ஜனவரி 2015இல் ஜமாத் உத் தாவா உள்பட அனைத்து தீவிரவாத அமைப்புகளின் சொத்துகளும் ஐ.நாவால் முடக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அறிவித்தது.

ஹஃபீஸ் சயீத் பலமுறை கைது செய்யப்பட்டும், வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டும் இருக்கிறார்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக ஜனவரி 2017இல் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட அவர், 10 மாதங்கள் கழித்து நவம்பர் 2017இல் விடுவிக்கப்பட்டார்.

அவரை வீட்டுக் காவலில் வைப்பதற்கான காலக்கெடுவை லாகூர் உயர் நீதிமன்றம் நீட்டிக்க மறுத்ததை தொடர்ந்து அப்போது அவர் விடுதலையானார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்