'இன்ஃபோசிஸ்' நாராயணமூர்த்தி மருமகன் ரிஷி சுனாக் பிரிட்டன் நிதியமைச்சராக நியமனம்

ரிஷி சுனாக் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ரிஷி சுனாக்.

இன்ஃபோசிஸ் கம்பெனி நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகனும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனாக் பிரிட்டனின் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேன்சலர் ஆஃப் எக்ஸ்செக்கர் என்ற பதவி, பிற நாடுகளில் நிதியமைச்சர் என்று சொல்லப்படும் பதவிக்கு இணையானது. இந்தப் பதவியில் இருந்து வந்த சஜித் ஜாவித் தனது பதவியை ராஜினாமா செய்து அதிர்வலைகளை உருவாக்கினார். அவருடைய உதவியாளர் குழுவை பதவி நீக்கும்படி பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டார். இதையடுத்து, "சுயமரியாதையுள்ள எந்த அமைச்சரும் இந்த நிபந்தனையை ஏற்க முடியாது" என்று கூறி தாம் பதவி விலகுவதாக அறிவித்தார்.

நான்கு வாரத்தில் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருந்த நிலையில் இந்த முடிவை அவர் அறிவித்தார்.

இதையடுத்து கருவூலத்துக்கான தலைமைச் செயலாளர் (சீஃப் செக்ரட்டரி டூ எக்ஸ்செக்கர்) பதவியில் இருந்த 39 வயது ரிஷி சுனாக் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

படத்தின் காப்புரிமை PM Media
Image caption பிரதமர் போரிஸ் ஜான்சன் - பதவி விலகிய நிதியமைச்சர் சஜித் ஜாவித்

வின்செஸ்டர் கல்லூரியிலும், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலும் படித்த ரிஷி சுனாக், பிறகு ஒரு முதலீட்டு நிறுவனம் தொடங்கினார். 2015ல் வடக்கு யார்க் ஷயரில் உள்ள ரிச்மாண்ட் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். பிறகு 2018ல் வீட்டுவசதித் துறை அமைச்சரானார். அதன் பிறகு அவர் கருவூலத் தலைமைச் செயலாளர் ஆனார்.

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனரான நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியை திருமணம் செய்துகொண்டவர் ரிஷி சுனாக்.

நியமித்த உடனே தமது அலுவலகத்துக்கு வந்த ரிஷி சுனாக், இந்த நியமனத்தால் பெருமகிழ்ச்சி அடைந்ததாகவும் செய்யவேண்டியது நிறைய உள்ளது என்றும் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: