Coronavirus: கொரோனா தொற்று குறித்து காணொளி, மாயமான சீன செய்தியாளர்கள் - நடந்தது என்ன?

Composite of missing reporters படத்தின் காப்புரிமை Youtube

கொரோனா வைரஸின் மையப்புள்ளியான சீனாவின் வுஹான் நகரத்தில் என்ன நடக்கிறது என்ற உண்மையை வெளியே கொண்டுவர இரு செய்தியாளர்கள் (Citizen journalists) முயற்சி செய்தனர். ஆனால், அவர்களை இப்போது காணவில்லை.

உலகத்தின் தொடர்பை முற்றிலுமாக இழந்திருக்கும் வுஹான் நகரத்திலிருந்து இருவரும் பல காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் செய்திகளை இணையத்தில் பதிவிட்டு வந்தனர்.

ஹூபே மாகாணத்தின் தலைநகரமான வுஹானில் தாங்கள் கண்டறிந்த செய்திகளை ஃபேங் பின் மற்றும் சென் க்யுஷி ஆகியோர் இந்த உலகத்திற்கு சொல்ல முயற்சி செய்தனர்.

அவர்கள் வெளியிட்ட காணொளிகளை ஆயிரக்கணக்கானோர் பார்த்து வந்தனர். ஆனால், தற்போது அவர்களின் சேனலில் எந்த காணொளிகளும் பதிவு செய்யப்படவில்லை. இந்த இருவரையும் பின்தொடரும் மக்கள், இவர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருப்பார்கள் என்று அஞ்சுகின்றனர்.

யார் இந்த ஃபேங் பின்?

வுஹானை சேர்ந்த தொழிலதிபரான ஃபேங் பின், கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து அது தொடர்பாக உண்மையில் என்ன நடந்தது என்று குறிப்பிட்ட பல காணொளிகளை இணையத்தில் வெளியிட்டு வந்தார். "தன்னால் முடிந்த அளவிற்கு" சிறந்த செய்திகளை வழங்குவேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

படத்தின் காப்புரிமை YOUTUBE
Image caption ஃபேங் பின்

கடந்த ஜனவரி 25ஆம் தேதி ஃபேங் தனது முதல் காணொளியை யூ டியூபில் பதிவேற்றி இருந்தார். சீனாவில் யூ டியூப் தடை செய்யப்பட்டுள்ளது என்றாலும், விபிஎன் மூலமாக இதனை பார்க்க முடியும்.

இவரது முதல் காணொளியில் இவர் வுஹான் நகரை சுற்றி அங்கு பல்வேறு இடங்களில் உள்ள சூழலை பதிவிட்டார். இந்தக் காணொளியை சுமார் 1000 பேர் பார்த்தனர்.

ஆனால் பிப்ரவரி ஒன்றாம் தேதி அவர் பதிவேற்றம் செய்த காணொளி லட்சக்கணக்கான மக்களை திரும்பிப் பார்க்க வைத்தது. அதில் வுஹானில் உள்ள ஒரு மருத்துவமனையின் வெளியே இருந்த பேருந்து ஒன்றில் எட்டு சடலங்கள் மலை போல் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

அந்த நாள் இரவு போலீஸார் தனது வீட்டிற்கு வந்து தன்னை கேள்வி கேட்டதாக ஃபேங் கூறுகிறார். அங்கிருந்து கூட்டிச் செல்லப்பட்ட அவர், எச்சரிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

பிப்ரவரி 9ஆம் தேதி 13 வினாடிகள் கொண்ட ஒரு காணொளியை ஃபேங் பதிவேற்றியுள்ளார். அதில் "அனைத்து மக்களும் போராடுவோம் - அரசாங்கத்திடம் இருந்து அதிகாரத்தை மக்களிடம் கொடுங்கள்" என்று கூறப்பட்டிருந்தது.

அதன் பிறகு அவரிடம் இருந்து ஏதும் வரவில்லை.

யார் இந்த சென் க்யுஷி?

மனித உரிமைகள் வழக்கறிஞராக இருந்து காணூடக செய்தியாளராக (Video Journalist) மாறியவர் சென் க்யுஷி. கடந்த ஆகஸ்டில் நிகழ்ந்த ஹாங்காங் போராட்டங்களை இவர் பதிவு செய்தபோதே செயற்பாட்டாளர் என்ற பிம்பம் இவர் மீது உருவானது.

படத்தின் காப்புரிமை YOUTUBE
Image caption சென் க்யுஷி

போராட்டத்தை பதிவு செய்ததை தொடர்ந்து சீன அதிகாரிகள் அவரை துன்புறுத்தியதாக சென் குற்றஞ்சாட்டி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடரும் அவரது சீன சமூக ஊடக பக்கங்கள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், அவர் அமைதியாக இல்லை. கடந்த அக்டோபரில் சென், யூ டியூப் கணக்கை தொடங்கினார். தற்போது யூ டியூபில் அவருக்கு 4 லட்சம் சப்ஸ்க்ரைபர்ஸ் இருக்கிறார்கள். மேலும் ட்விட்டரில் இவரை 2,65,000 பேர் பின்தொடர்கிறார்கள்.

கடந்த ஜனவரி மாதம் வுஹானில் நிலைமை மோசமடைந்ததை தொடர்ந்து சென், அங்கு பயணிக்க முடிவெடுத்தார்.

"என் கேமரா வழியாக அங்கு என்ன நடக்கிறது என்பதை காட்டுவேன். எந்த உண்மையும் மறைக்க மாட்டேன் என்று சத்தியம் செய்கிறேன்". இது அவர் வெளியிட்ட முதல் யூ டியூப் வீடியோ.

வுஹானில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளை சென்று பார்வையிட்ட சென், அங்குள்ள நிலையை ஆராய்ந்து, அங்கிருந்த நோயாளிகளிடம் பேசினார்.

தான் அபாயகரமான சூழலை எதிர்கொள்ள நேரிடும் என்று சென்னுக்கு தெரியும். ஆனால், இதனை எவ்வளவு நாள் செய்ய முடியும் என்று தனக்கு தெரியவில்லை என்ன இந்த மாத தொடக்கத்தில் பிபிசியின் ஜான் சுட்வர்த்திடம் சென் தெரிவித்திருந்தார்.

"இங்கு அனைத்தும் தணிக்கை செய்யப்படும். என்னுடைய காணொளிகளை மக்கள் பகிர்ந்தால், அவர்களது கணக்குகள் முடக்கப்படுகின்றன" என்று அவர் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பின்னர் பிப்ரவரி 7ஆம் தேதி சென்னின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொளி பகிரப்பட்டது. தற்போது அவரது ட்விட்டர் கணக்கை சென்னின் நண்பர் இயக்குகிறார். அந்தக் காணொளியில் சென் க்யுஷியின் தாய், தனது மகனை காணவில்லை என்று கூறுகிறார்.

அதனை தொடர்ந்து தாம் கட்டாயப்படுத்தப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி சென்னின் நண்பர் சு சியோடாங் யூ டியூப் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதிகாரிகள் கூறுவது என்ன?

இது தொடர்பாக எந்த ஒரு சீன அதிகாரியும் வாய் திறக்க தயாராக இல்லை. ஃபேங் பின் மற்றும் சென் க்யுஷி எங்குள்ளனர், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்களா, என்பது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியாகவில்லை.

சென் மற்றும் ஃபேங்கை போலீஸார் அழைத்து செல்லப்பட்டார்களா அல்லது கட்டாயப்படுத்தி தனிமையில் வைக்கப்பட்டுள்ளனரா என்று தெரியவில்லை. எனினும் சீன அதிகாரிகள் குறைந்தது அந்த இரண்டு நபர்களின் குடும்பங்களுக்காவது தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், அவர்களுக்கு சட்ட உதவி பெற வழி செய்ய வேண்டும். இல்லையென்றால் சென் மற்றும் ஃபேங் துன்புறுத்தலுக்கு ஆளாகுகிறார்களா என்ற அச்சம் ஏற்படும்" என அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் ஆய்வாளர் பேட்ரிக் பூன் பிபிசியிடம் தெரிவித்தார்.

இருவரும் காணாமல் போனதற்கான காரணம் என்னவாக இருக்கும்?

குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர்கள் ஒடுக்கப்படுவார்கள் என்ற கருத்துக்குப் பெயர்போனது சீனா. மேலும், கொரோனா தொற்று கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்தவும் சீனா முயற்சிக்கிறது.

"சீன அதிகாரிகள் வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்துவதற்கு சமமாக அல்லது அதற்கும் மேலாக விமர்சனக் குரல்களை ஒடுக்கும் கவலையில் இருக்கிறார்கள்" என்று மனித உரிமைகள் அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் (HRW) அமைப்பின் ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Reuters

கொரோனா வைரஸ் தொற்று குறித்து முன்னரே அறிந்த மருத்துவர் லீ வென்லியாங், "தவறான கருத்துகளைப் பரப்ப வேண்டாம்" என்று சீன அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சமீபத்தில் உயிரிழந்தார்.

"உண்மையை வெளி கொண்டுவரும் குடிமக்கள், அதிகாரிகளை விமர்சிக்கும் பொதுமக்களைத் துன்புறுத்தி, காவலில் எடுத்த வரலாறு எதேச்சாதிகார சீன அரசாங்கத்திற்கு இருக்கிறது. உதாரணமாக 2003ல் சார்ஸ் நெருக்கடியின்போது, 2008 வென்சுவான் நிலநடுக்கத்தின்போது, 2011 ரயில் விபத்தின் போதெல்லாம் இவ்வாறு நடந்திருக்கிறது" என்கிறார் HRWன் யகி வாங் பிபிசியிடம் தெரிவித்தார்.

எனினும், தனது அனுபவத்தில் இருந்து சீனா கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தகவல் சுதந்திரம், வெளிப்படைத்தன்மையோடு செயல்பட்டு நோய் கட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டுமே தவிர அதனை மறைக்கக் கூடாது என்று அவர் கூறுகிறார்.

"'ஃபேங் மற்றும் சென் ஆகியோர் காணாமல் போக வைத்து சீன அதிகாரிகள் தங்களுக்கு கேடு செய்து கொள்கின்றனர்" என்று யகி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :