ஜாகிர் நாயக் மலேசியாவில் எப்படி வாழ்கிறார்? ஒரு நேரடி ரிப்போர்ட்

  • ஸூபைர் அகமது
  • பிபிசி
ஜாகிர் நாயக்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஜாகிர் நாயக்

இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமிய மதப் பிரசாரகர் ஜாகிர் நாயக் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தானாகவே இந்தியாவிலிருந்து வெளியேறி மலேசியாவில் குடியேறியதில் இருந்து, இந்துக்கள் மற்றும் நரேந்திர மோதி அரசாங்கம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை எப்போதாவது கூறுவதைத் தவிர அவரைப் பற்றி அதிகம் தகவல்கள் வெளியாவதில்லை.

மலேசியாவில் அவர் எங்கு வசிக்கிறார், அவருடைய அன்றாட வாழ்க்கை முறை என்ன, முக்கியமாக அவரை மலேசிய சமுதாயம் ஏற்றுக் கொண்டிருக்கிறதா என்பதைக் கண்டறிய பிபிசியின் டெல்லி செய்தியாளர் ஜுபேர் அகமது மலேசியாவுக்குப் பயணம் மேற்கொண்டார்.

மலேசியாவுக்குப் புறப்படுவதற்கு முன்னதாக, மும்பையில் உள்ள அவருடைய செய்தித் தொடர்பாளருக்கு மின்னஞ்சல் அனுப்பி அவரை சந்தித்து பேட்டி எடுக்க அனுமதி கேட்டோம். அது நிராகரிக்கப்பட்டுவிட்டது.

இதனால் மனம் தளர்ந்துவிடாமல், கடந்த வாரம் நாங்கள் கோலாலம்பூர் சென்றதும் அவரைச் சந்திக்கச் சென்றோம். கோலாலம்பூரில் இருந்து 40 நிமிட பயண தூரத்தில் உள்ள புத்ரஜெயா-வில் அவர் வசிப்பதாக எங்களிடம் சொன்னார்கள்.

மலேசிய அரசாங்க அலுவல்கள் நடைபெறும் நகரம்தான் புத்ரஜெயா. இரு புறங்களிலும் மரங்கள் நிறைந்த அகலமான சாலைகள், பளபளக்கும் அடுக்குமாடி வீடுகள், அரசு அலுவலகங்களுக்காக கட்டப்பட்டுள்ள மிக உயரமான நவீன வடிவமைப்பிலான கட்டடங்கள் நிறைந்த நகரம் அது.

மையப் பகுதியில் பெரிய நவீன மசூதி உள்ளது. மனித முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்த நகரம் ஈர்ப்புத்தன்மை கொண்டிருப்பதில் ஆச்சர்யம் இல்லை. ஒரு காலத்தில் ரப்பர் தோட்டங்கள் நிறைந்த பகுதியாக இருந்த புத்ரஜெயா, இப்போது மலேசியாவின் முன்னேற்றம் மற்றும் வளமையின் சான்றாக இருக்கிறது.

அது ஒரு வெள்ளிக்கிழமை நாள். வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்காக அடிக்கடி ஜாகிர் நாயக் வருவார் என்று சொல்லப்பட்ட புத்ரஜெயா மசூதிக்கு நாங்கள் வாடகைக் காரில் சென்றோம். நாங்கள் மசூதிக்குச் சென்றபோது,தொழுகை செய்ய வந்தவர்களைவிட சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஜாகிர் நாயக் பிற்பகல் 1 மணி வாக்கில் வருவார் என்று பாதுகாப்பு அலுவலர் எங்களிடம் தெரிவித்தார்.

ஆனால் எங்களுக்கு நிறைய நேர அவகாசம் இருந்தது. எனவே, அவர் வாழ்வதாகச் சொல்லப்பட்ட, குடியிருப்பு வளாகப் பகுதிக்குச் செல்ல நாங்கள் முடிவு செய்தோம். ஐந்து நிமிடங்களில், ஒரு வளாகத்தில் வானுயர்ந்த கட்டடங்களுக்கு மத்தியில் டமாரா குடியிருப்பு வளாகத்தின் வாயிலை அடைந்தோம்.

பாதுகாப்பு அலுவலர் மூலமாக நாங்கள் தகவல் அனுப்பினோம். எங்களுடைய பாஸ்போர்ட்களின் நகல்களை அவர் எடுத்துக் கொண்டார். ஜாகிர் நாயக்கின் பதிலுக்காக நாங்கள் காத்திருந்தோம். அவர் மாலை 5 மணிக்கு எங்களைப் பார்ப்பார் என்று ஒருவர் தொலைபேசியில் என்னிடம் தெரிவித்தார்.

இதற்கிடையில், நாங்கள் மசூதிக்குத் திரும்பிச் சென்றோம். 1 மணியானதும் ஜாகிர் நாயக் வழக்கமான பாதுகாப்பு அலுவலர்கள் சூழ, மசூதியின் முன்வாசல் வழியாக உள்ளே நுழைந்தார். வித்தியாசம் ஏதுமின்றி அனைவருமே அவருக்கு வணக்கம் தெரிவித்து, கைகுலுக்கினர். அந்த நெரிசலில் அவரை சந்திப்பது சாத்தியமற்றதாகிப் போனது. ''கவலைப்பட வேண்டாம். எப்படியும் அவர் மாலை 5 மணிக்கு நம்மை பார்க்கப் போகிறார்'' என்று எனது நண்பர் தீபக் சிங்கிடம் நான் கூறினேன்.

குடியிருப்பு வளாகத்துக்கு நாங்கள் சரியாக 5 மணிக்குச் சென்றோம். இந்த முறை உள்ளே செல்லுமாறு பாதுகாப்பு அலுவலர் எங்களுக்கு கை காட்டினார். பரந்து கிடந்த நிலத்தில் வானுயர்ந்த குடியிருப்பு அடுக்குமாடிக் கட்டடங்களை நான் பார்த்தேன்.

எல்லா கட்டடங்களும் ஒரே மாதிரியாக இருந்ததால், எந்தக் கட்டடத்துக்குள் செல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு ஆண் எங்களை அணுகி, ஜாகிர் நாயக்கின் அலுவலர் என்று தம்மை அறிமுகம் செய்து கொண்டார். உயரமான இரு கட்டடங்களுக்கு இடையில் இருந்த சிறிய மசூதிக்குள் செல்லுமாறு என்னை அவர் கேட்டுக்கொண்டார்.

தினசரி வழிபாட்டுக்காக அந்த மசூதி கட்டப்பட்டுள்ளது. ''மதியத்துக்குப் பிந்தைய வழிபாட்டை உள்ளே டாக்டர் ஜாகிர் நாயக் நடத்தி வைத்துக் கொண்டிருக்கிறார்'' என்று அவர் என்னிடம் தெரிவித்தார். நான் உள்ளே சென்றேன். 50 பேருக்கும் மிகாத ஒரு சிறிய கூட்டத்தின் முன்னால் அவர் இருந்தார். இந்தியாவிலும், மற்ற நாடுகளிலும் ஆயிரக்கணக்கானவர்கள் அவருடைய உரையை கேட்க காத்திருக்கும் நிலையுடன் ஒப்பிடும்போது இது சிறிய கூட்டமாக இருந்தது.

தொழுகை முடிந்த பிறகு, அவர் மசூதியில் இருந்து வெளியே நடந்து வந்தபோது, என்னை அவரிடம் அறிமுகப்படுத்தினார்கள். எங்களுக்கு நேர்காணல் அளிப்பதற்கு அவர் எங்களை உள்ளே அழைத்தார் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் நேரடியாக விஷயத்துக்கு வந்தார். ''உங்களுக்கு நேர்காணல் அளிக்க நான் எதற்காக மறுத்தேன் என்று ஆரிப் (மும்பையில் உள்ள அவருடைய செய்தித் தொடர்பாளர்) உங்களிடம் சொல்லவில்லையா? பிபிசி நம்பகத்தன்மையற்றது. உங்களை நம்ப முடியாது. நீங்கள் எனக்கு எதிராக பாரபட்சம் காட்டுபவர்கள்,'' என்று கூறினார்.

படக்குறிப்பு,

ஜாகிர் நாயக்

அதைக் கேட்டதும் நான் அதிர்ச்சியடைந்தேன். பொறுப்பான நிலையில் இருப்பவர்கள், உங்களை பாரபட்சமானவர்கள் என்று சொல்வது வழக்கமில்லை. நான் அதை ஆட்சேபித்தேன். ''பிபிசி பாரபட்சமானது கிடையாது. என்னுடைய 30 ஆண்டு கால பணியில், முதன்முறையாக எங்களை பாரபட்சமானவர் என்று சொல்வதை இப்போதுதான் முதல்முறையாகக் கேட்கிறேன்'' என்று கூறினார். இடைமறித்த அவர், ''உண்மையை சொல்லக் கூடிய ஒருவரை முதல் முறையாக நீங்கள் சந்தித்திருப்பதால் அப்படி இருக்கலாம்'' என்று கூறினார்.

சந்திக்க அனுமதி மறுத்த பிறகும், பிரச்சனைகளை மீறி அவரை சந்திக்க வந்திருப்பதே, அவருக்கு எதிரான புகார்கள் பற்றி பதில் அளிக்கும் வாய்ப்பைத் தர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் என்ற உண்மையை நான் அவரிடம் கூறினேன். எனக்கு நேர்காணல் தருவதைவிட முஸ்லிம் அல்லாத ஒருவருக்கு நான் நேர்காணல் தருவேன் என்று அவர் கூறினார். 2016ஆம் ஆண்டில் மும்பையில் அவருடைய பள்ளிக்கூடம் பற்றி நான் அளித்த ஒரு செய்தியை அவர் குறிப்பிட்டார். அவருடைய பள்ளிக்கூடம் பற்றி நான் அளித்த செய்தி பாரபட்சமானது என்று அவர் கருதினார். ''நீங்கள் முஸ்லிம் என்பதால் நல்லபடியாக புரிந்து கொள்வீர்கள் என்று நினைத்த காரணத்தால் பள்ளிக்கூடத்துக்குள் உங்களை அனுமதித்தேன்'' என்று அவர் கூறினார். அவர் வருத்தப்பட்டிருப்பதாகத் தெரிந்தது. பாதிக்கப்பட்டவராக தன்னை அவர் உணர்ந்தார்.

உயரமான பீடத்தின் மீது நின்று கொண்டு, மதிப்புக்குரிய ஒருவர், கீழே இருக்கும் என்னிடம் பேசுவதைப் போல நாயக் நடந்து கொள்வதாக நான் உணர்ந்தேன். ''நீங்கள் பிபிசியில் இருந்து விலகி வந்தால், உங்களுக்கு நேர்காணல் தருகிறேன்'' என்பதுதான் அவருடைய கடைசி வார்த்தைகளாக இருந்தது.

எங்கள் சந்திப்பு ஒரு நிமிடத்துக்கும் மேல் நீடிக்கவில்லை. என்னைக் குறித்தோ அல்லது பிபிசி குறித்தோ அவர் மிகவும் அதிருப்தியில் இருக்கிறாரா என நினைத்தேன். அவர் பிரிட்டனுக்குள் நுழைய கடந்த காலத்தில் பிரிட்டன் அரசாங்கம் தடை விதித்திருந்தது. ஆனால், அதற்காக பிபிசி மீது ஏன் கோபம் கொள்ள வேண்டும்?

படக்குறிப்பு,

ஜாகிர் நாயக்

நானும், பிபிசியும் நம்பகத்தன்மை அற்றவர்கள், பாரபட்சமாக நடந்து கொள்கிறோம் என நினைத்திருந்தால், துபாயில் அவர் வாழ்ந்த காலத்தில் 2016ல் எங்களுக்கு நேர்காணல் அளிக்க ஏன் அவர் ஒப்புக்கொண்டார் என்பதும் ஆச்சர்யமாக இருந்தது. நான் விமான நிலையத்துக்கு புறப்படும்போது அவர் அதை ரத்து செய்துவிட்டார் என்பது வேறு விஷயம்.

அவர் எங்களுடன் பேச விரும்பி இருந்தாலும், ஊடகங்களுக்கு அவர் நேர்காணல் அளிப்பதை மலேசிய அரசாங்கம் அனுமதிக்கிறதா என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. கடந்த ஆண்டு மலேசிய இந்துக்கள் பற்றி அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டபோது, இந்துக்கள் மகாதீர் முகமதுவைவிட நரேந்திர மோதிக்கு அதிக விசுவாசமாக இருப்பதாகக் கூறியபோது, அவர் வாய் திறக்காமல் இருக்க வேண்டும் என்றும், இஸ்லாத்தை போதிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.

நாங்கள் மலேசியாவில் ஒரு வாரத்துக்கும் சற்று அதிகமாக இருந்தோம். மலேசியாவில் ஒரு வழிபாட்டு மரபை உருவாக்கியவரைப் போல ஜாகிர் நாயக் கருதப்படுவதை நாங்கள் அப்போது உணர்ந்தோம். ''தெய்வத்தன்மை பொருந்தியவர்'' என்று அந்த மக்கள் நினைப்பதாக மலேசியாவில் பினாங்கு மாகாண துணைமுதல்வர் ஒய்.பி. ராமசாமி தெரிவித்தார்.

பெரும்பான்மையாக உள்ள மலாய் சமூகத்தின் இளம் முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அவர் மீது பயபக்தியாக இருக்கின்றனர். கோலாலம்பூரில் காஃபி கடை ஒன்றில் முஸ்லிம் இளைஞர்கள் சிலரை நாங்கள் சந்தித்தோம். அவர்கள் அறிந்துள்ள அல்லது கேள்விப்பட்டுள்ள பிரபலமான இந்தியர்களின் பெயர்கள் சிலவற்றைக் கூறுமாறு அவர்களிடம் நாங்கள் கேட்டோம். ஒரு இளைஞர் ``எனக்கு ஜாகிர் நாயக் மற்றும் காந்தியை மட்டுமே தெரியும்'' என்று கூறினார். இன்னொருவர் தனக்கு ஷாரூக் கான் மற்றும் ஜாகிர் நாயக்கை தெரியும் என்றார். ஜாகிர் நாயக் என்ற ஒரே இந்தியரை மட்டுமே தனக்குத் தெரியும் என்று மூன்றாமவர் கூறினார்.

அனைத்து வயதினரிடமும் ஜாகிர் நாயக்கின் தாக்கம் உள்ளது. ஹஜ்வான் சியாபிக் என்பவர் மகிழ்வாக உள்ள ஓர் இளைஞர். அவரைப் பொருத்த வரையில் ஜாகிர் நாயக், ''இஸ்லாமிய அறிஞர், அவருடைய ஆழ்ந்த அறிவும், நியாயமான வாதங்களும் இஸ்லாம் பற்றிய தவறான கருத்துகளை தெளிவுபடுத்துவதாக உள்ளன'' என்கிறார். ஜாகிர் நாயக்கை அவர் மிகவும் மதிக்கிறார். ''இஸ்லாம் பற்றிய அறிவை மட்டுமின்றி, புத்தம், இந்து மற்றும் கிறிஸ்தவம் பற்றிய அறிவையும் அவர் அளிக்கிறார்'' என்பதால் அப்படி வணங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஜாகிர் நாயக்

ஆனால், தங்களுடைய மதங்களை இஸ்லாத்துடன் ஒப்பிட்டு தங்கள் நம்பிக்கையைக் குறைத்துக் காட்டுவதால் ஜாகிர் நாயக்கை பலரும், குறிப்பாக இந்துக்கள் மற்றும் புத்த மதத்தவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று ஜாகிர் நாயக்கின் தீவிர ஆதரவாளர்கள் உள்ள சமூக வலைதளத்தைக் கவனித்து வரும் ஏ.கே. அருண் கூறுகிறார். மலேசிய சமூகத்தின் பன்முக கலாசார நெறிகளை சிதைக்கும் வகையில் ஜாகிர் நாயக்கின் போதனைகள் உள்ளதாக அவர் நம்புகிறார். ``மற்ற மதங்களை தாழ்த்தி அவர் பேசுகிறார். அது எல்லா இனத்தவர்கள் மீதும் மனிதாபிமானம் காட்டுதல் மற்றும் ஒற்றுமையாக வாழ்தலில் நம்பிக்கை கொண்ட எங்களைப் போன்றவர்களுக்கு அது பிடிக்கவில்லை'' என்று அவர் கூறினார்.

ஜாகிர் நாயக் அல்லது அவரது ஆதரவாளர்களால் அவதூறு வழக்கு தொடரப்பட்ட இந்திய வம்சாவளியினர் பலரில் ஒருவராக ஏ.கே. அருண் இருக்கிறார். மூன்று ஆண்டு கால நீதிமன்ற போராட்டத்துக்குப் பிறகு அருண் களைத்துவிட்டதாக உணர்கிறார். ''மன ரீதியிலான தீவிரவாதம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. மன ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாக நான் உணர்கிறேன். மற்றவர்களுக்கும் அதே மனநிலைதான் உள்ளது. சுருக்கமாகச் சொன்னால், நீங்கள் வலுவானவராக இல்லாவிட்டால் வாழ்க்கை மோசமாகிவிடும்'' என்று அவர் கூறினார்.

பினாங்கு மாகாணத்தின் துணை முதல்வர் ஒய்.பி. ராமசாமி மீதும் அவதூறு வழக்கு உள்ளது. ஜாகிர் நாயக் இஸ்லாத்தை போதிப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், ``இந்து மதத்தை விமர்சிக்க அவருக்கு என்ன உரிமை இருக்கிறது'' என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

ஜாகிர் நாயக்கிற்கு தீவிர ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ''மாணவர்கள்'' எனப்படுகிறார்கள். இந்திய தமிழரில் ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்த 35 வயதான ஜம்ரி வினோத் அவர்களில் ஒருவர். தன்னுடைய 16 வயதில் முஸ்லிம் மதத்துக்கு மாறிய அவர், இஸ்லாம் பற்றி கற்பதற்கு மும்பையில் ஜாகிர் நாயக்குடன் தங்கினார்.

''நான் ஜாகிர் நாயக்கின் மாணவன்'' என்கிறார். மற்ற மதங்களைத் தாழ்த்திப் பேசுவதாகக் கூறுவதை அவர் மறுத்தார். `அவரோ அல்லது நானோ அல்லது அவருடைய மாணவர்கள் யாருமோ இந்துக்கள் அல்லது இந்தியர்கள் அல்லது மற்ற மதங்களை ஒருபோதும் தாழ்த்திப் பேசுவதில்லை. நம் அனைவரையும் நெருக்கமாகக் கொண்டு வருவதற்காக, எல்லா மதங்களிலும் உள்ள பொதுவான விஷயங்களைக் கண்டறிவதற்காக நாங்கள் ஒப்பீடு செய்கிறோம்'' என்று அவர் கூறினார்.

ஜம்ரி வினோத் சமூக ஊடகங்களில் தீவிரமாக செயல்படுகிறார். மிக தீவிரமாக ஜாகிர் நாயக்கை அவர் ஆதரிக்கிறார். மலேசியாவில் ஒரு சிலரைத் தவிர, பெரும்பான்மையானவர்கள் ஜாகிர் நாயக்கை வரவேற்கிறார்கள் என்று அவர் நம்புகிறார். ``அவரை எதிர்க்கும் சிலர் இங்குள்ள இந்து சமூகத்தினர், ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்டவர்கள்'' என்கிறார் அவர். அவருடைய குடும்பம் இன்னும் இந்துக் குடும்பமாகவே இருக்கிறது என்றும், மற்ற மதங்களை இஸ்லாம் மதத்துடன் ஒப்பிடுவதை தன்னுடைய இந்து நண்பர்கள் ஆட்சேபிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

மலாய் மக்களில் பெரும்பான்மையானவர்கள் அவரை ஆதரிக்கிறார்கள் என்பது உண்மை. மலேசிய மக்கள் தொகை 33 மில்லியன் பேரில், 65 சதவீதம் பேர் மலாய் மக்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். 20 சதவீத சீனர்கள் உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் புத்த மதத்தைப் பின்பற்றுகிறார்கள். இந்திய வம்சாவளியினர் ஏழு சதவீதம் பேர் உள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் தமிழ் இந்துக்கள். உண்மையில் ஜாகிர் நாயக் காரணமாக அச்சுறுத்தல் இருப்பதாக சிறுபான்மையினர் கருதுகின்றனர். இந்தியாவில் விசாரணையை எதிர்கொள்ள ஜாகிரை அரசாங்கம் நாடு கடத்த வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.

ஆனால் அது பிரதமர் மகாதீர் முகமதுவுக்கு எளிதாக இருக்காது. அவருடைய தாத்தா இந்தியாவில் இருந்து சென்றவர். இந்திய மூதாதையர்கள் என்று சொல்லிக் கொள்வதில் இருந்து அவர் விலகி இருக்கிறார். மலாய் மக்களுடன் தன்னை அவர் அடையாளப்படுத்திக் கொள்கிறார். மலாய் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படுவது பிரதமருக்கு எளிதாக இருக்காது என்று ராமசாமி கூறினார்.

ஜாகிர் நாயக்கை நாடு கடத்தி அனுப்ப வேண்டும் என்று கோரி இந்திய அரசாங்கம் கொடுத்துள்ள ஆதாரங்கள், வலுவற்றவை என்றும், ``போலியாக தயாரிக்கப்பட்டவை'' என்றும் மலேசிய அரசாங்கம் நம்புகிறது. இந்தியாவுக்கு சென்றால் திரு. நாயக்கிற்கு நீதி கிடைக்காது என்று மலேசிய பிரதமர் நம்புகிறார். மத அடிப்படையில் பாகுபாட்டை உருவாக்கி, தன் உரைகள் மூலம் இளைஞர்களை தூண்டிவிடும் வகையில் ஜாகிர் நாயக் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள நிலையில், இந்தியாவில் தேடப்படும் நபராக அவர் உளளார். அவரை நாடு கடத்தி அனுப்பி வைக்க வேண்டும் என மலேசிய அரசை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

மகாதீர் முகமதுவுக்கு அடுத்து பிரதமராக யார் வரப் போகிறார் என்பதைப் பொருத்து, ஜாகிர் நாயக் நாடு கடத்துவது தொடர்பான முடிவு அமையும். அடுத்து பிரதமர் பவிக்கு அன்வர் இப்ரஹிம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இந்தியாவுக்கு நெருக்கமானவர் என அறியப்பட்டவர். ஆனாலும், அந்த பெரிய நடவடிக்கையை எடுப்பதற்கு அவருக்கு அரசியல் உறுதிப்பாடு தேவைப்படும்.

அரசின் திட்டமிடுதல் குழுவில் பணியாற்றும் எஸ். அருள் இதுபற்றி கூறும்போது, ஜாகிர் நாயக்கை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றார். ``அவர் இதுவரையில் இந்த நாட்டின் சட்டங்களை மீறவில்லை. பணம் மோசடி செயல்களில் ஈடுபட்டதாகவும் ஆதாரம் இல்லை. ஆனால் 24 மணி நேரமும் அவர் கண்காணிக்கப்படுகிறார்'' என்று அவர் தெரிவித்தார்.

நாயக்கின் பயணம் உலகில் மிகவும் சர்ச்சைக்குரிய போதகர்களின் பயணமாக மாறி வருகிறது - Peace TV என்ற பிரபமான தொலைக்காட்சி சேனலை அவர் வைத்திருக்கிறார். இப்போது அது இந்தியாவிலும் வங்கதேசத்திலும் தடை செய்யப்பட்டுள்ளது. இது அசாதாரணமான நடவடிக்கை. அவர் 1965ல் மும்பையில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் டோங்கிரி பகுதியில் பிறந்தார். அவருடைய தந்தையும், சகோதரர்களும் டாக்டர்கள்.

நாயக் மும்பையில் புனிதமேரி உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் படித்தார். குடும்பத்தின் தொழில் என்ற முறையில் மும்பையில் டோப்பிவாலா தேசிய மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார்.

மருத்துவத் தொழிலைக் கைவிட்டு 1991ல் டோங்கிரியில் இஸ்லாமிய ஆராய்ச்சி பவுன்டேசனை அவர் உருவாக்கினார். அந்த அமைப்புக்கும், அவருடைய பள்ளிக்கூடத்துக்கும் அரசு இப்போது சீல் வைத்துள்ளது.

அவருடைய Peace TV-க்கு உலகெங்கும் 20 மில்லியன் நேயர்கள் உள்ளதாகக் கருதப்படுகிறது. சமூக வலைதளங்களிலும் அவர் தீவிரமாக செயல்படுகிறார். இந்திய அரசாங்கம் அவரை சிக்க வைத்துள்ளது என்றும், இந்தியாவில் எந்தச் சட்டத்தையும் அவர் மீறவில்லை என்றும் அவருடைய தீவிர ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.

மலேசியாவில் ஜாகிர் நாயக் பெரியதொரு சர்ச்சைக்குரியவராக இருக்கிறார். தேவையில்லாத எந்த சர்ச்சையும் வந்துவிடக் கூடாது என்பதற்காக பொது களங்களில் அண்மைக்காலமாக அவர் மௌனம் காக்கிறார் என்று கருதப்படுகிறது.

அவர் மலேசியாவில் தங்கியிருப்பதற்கு உடனடியாக எந்தப் பாதிப்பும் இருப்பதாகத் தோன்றவில்லை. இருந்தபோதிலும், அவர் மலேசியாவில் இருப்பது அந்த நாட்டில் உள்ள பல்வேறு மதத்தினரிடையே நிலவும் நல்லிணக்கத்தைப் பாதிப்பதாகக் கருதப்படுகிறது. அவர் இங்கே எவ்வளவு காலம் இருக்கிறாரோ அந்த அளவுக்கு மலேசிய சமுதாயத்தில் அதிகமாக பிரிவினை உருவாகும் என்று அந்த மக்கள் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :