கம்போடியாவில் 47 ஆண்டுகளுக்கு பின் ஒன்று சேர்ந்த சகோதரிகள் மற்றும் பிற செய்திகள்

இரு சகோதரிகளும் கம்போடிய தலைநகரம் ப்னோம் பென்னுக்கு பயணம் மேற்கொண்டனர் படத்தின் காப்புரிமை CCF
Image caption பன் சென் (வலது) மற்றும் பன் சியா (இடது) ஆகியோர் சந்தித்த சில நாட்களில் தலைநகர் ப்னோம் பென்னுக்கு ஒன்றாக பயணம் மேற்கொண்டனர்

கம்போடியாவில் 1970களில் 'க்மெய்ர் ரூஷ்' சர்வாதிகார ஆட்சியின்போது இறந்துவிட்டதாக நினைத்து வாழ்ந்து வந்த இரு சகோதரிகள் 47 ஆண்டுகளுக்கு பின் தற்போது இணைந்துள்ளனர். 'க்மெய்ர் ரூஷ்' என்பது போல் பாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு வழங்கப்படும் பெயராகும்.

இதில் ஒருவருக்கு (பன் சென்) 98 வயதும் மற்றொருவருக்கு (பன் சியா) 101 வயதும் ஆகிறது.

அதே போல 98 வயதாகும் மூதாட்டி பன் சென், இறந்துவிட்டதாக நினைத்திருந்த 92 வயதாகும் தனது இளைய சகோதரருடனும் ஒன்று சேர்ந்துள்ளார்.

1979இல் தனது கணவரை இழந்தபின், கம்போடிய தலைநகரில் குப்பைகளை சேகரித்து வாழ்ந்து வந்த பன் சென் கம்போடியா சில்ட்ரன்ஸ் ஃபண்ட் எனும் தொண்டு நிறுவனம் மூலம் அவரது சொந்த கிராமத்தில் உள்ள அந்த மூதாட்டியின் சகோதரர் மற்றும் சகோதரி ஆகியோருடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளார்.

கம்போடியாவில் போல் பாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை பிடிக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1973ல் இரு சகோதரிகளும் கடைசியாக பார்த்துக் கொண்டனர். பிறகு இப்போதுதான் சந்தித்துக் கொள்கிறார்கள்.

க்மெய்ர் ரூஷ் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின்போது சுமார் 20 லட்சம் மக்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டது.

1975 முதல் 1979 வரையிலான 'க்மெய்ர் ரூஷ்' ஆட்சியில் குடும்பங்கள் பிரிக்கப்பட்டு மக்கள் நகரங்களிலும், வேளாண் பண்ணைகளிலும் பணியாற்ற கட்டாயப்படுத்தப்பட்டனர்.

படத்தின் காப்புரிமை CCF
Image caption 1973ல் இந்த சகோதரிகள் கடைசியாக 1973ல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்

குடும்பத்தை பிரிந்த சில ஆண்டுகளில், தனது கணவரை இழந்த பன் சென், கம்போடிய தலைநகரமான ப்னோம் பென்னில் உள்ள பெரும் குப்பை கழிவுகளுக்கு அருகே உள்ள ஒரு சிறு பகுதிக்கு இடம்பெயர்ந்தார்.

குப்பைகள் பொறுக்குவது, கிடைக்கும் பிளாஸ்டிக்கை விற்பது, அப்பகுதியில் இருக்கும் குழந்தைகளை பார்த்துக் கொள்வது என தன் வாழ்க்கையை கழித்தார் பென் சென்.

தலைநகரத்தில் இருந்து 90 மைல்கள் தொலைவில் இருக்கும் தனது சொந்த கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்று நீண்ட காலமாக நினைத்து வந்தார். ஆனால், முதுமை, நடக்க முடியாமல் இருப்பது போன்ற காரணங்களால் அவர் அங்கு செல்ல நீண்ட காலம் ஆனது.

தென்கொரியாவில் கொரோனா வைரஸால் இரண்டாவது உயிரிழப்பு

படத்தின் காப்புரிமை Getty Images

தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தென்கொரியாவில் இரண்டாவது நாளாக அதிகரித்துள்ளதால் இந்த வைரஸ் பரவல் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளை அந்நாடு தீவிரமாக எடுத்து வருகிறது.

தற்போது தென் கொரியாவில் புதிதாக 100 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், சுகாதார ரீதியாக நாட்டில் அவசரநிலை இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் சூங் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை அன்று அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது தென் கொரியாவில் இரண்டாவது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க: தென்கொரியாவில் கொரோனா வைரஸால் இரண்டாவது உயிரிழப்பு - தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபரின் நோக்கம் என்ன?

படத்தின் காப்புரிமை Getty Images

டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து முதல்முறையாக இந்தியா வரும் அவரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் சொந்த மாநிலமான குஜராத்திற்கு வரும் திங்கட்கிழமையன்று டிரம்ப் வருகிறார்.

2020 இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் இருப்பதால், அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இந்த பயணத்தை டிரம்ப் மேற்கொள்கிறார் என்றே பெரிதும் பேசப்படுகிறது.

விரிவாக படிக்க:இந்தியா வரவுள்ள டிரம்பின் நோக்கம் என்ன? அவருக்கு என்ன லாபம்?

வண்ணாரப்பேட்டை போராட்டக்களத்தில் கல்வி பயிலும் மாணவர்கள்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, தமிழக அரசு, சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்றும், மத்திய அரசு இந்த சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் எனக் கோரியும் சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

முதல் முறையாக போராட்டக்களத்தில் இறங்கியுள்ள பெண்கள் பலரும், தங்களது குழந்தைகளுடன் ஒரு வார காலமாக வண்ணாரப்பேட்டை பென்சில் பாக்டரி பகுதியில் முகாமிட்டுள்ளனர். கடந்த வெள்ளியன்று போராட்டத்திற்கு வந்தவர்களில் பலர் வீடு திரும்பவில்லை.

பெண்கள் சிலர் தங்களது குழந்தைகளின் கல்வியில் தொய்வு ஏற்படக்கூடாது என்பதால், போராட்டம் நடக்கும் இடத்தில் குழந்தைகளை படிக்க வைப்பதாக சொல்கிறார்கள்.

விரிவாக படிக்க: CAA Protest: வண்ணாரப்பேட்டை போராட்டக்களத்தில் கல்வி பயிலும் மாணவர்கள்

முதல் இன்னிங்சில் 165 ரன்களில் இந்தியாவை சுருட்டிய நியூசிலாந்து

படத்தின் காப்புரிமை MARTY MELVILLE / GETTY IMAGES

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 165 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

நியூசிலாந்து தரப்பில் இரு பந்து வீச்சாளர்கள் தலா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்த, இந்திய தரப்பில் இருவர் டக் அவுட் ஆகினர்.

இந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியுள்ள 25 வயதாகும் நியூசிலாந்து பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே இந்திய கேப்டன் கோலி உள்பட நால்வரின் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

விரிவாக படிக்க: முதல் இன்னிங்சில் 165 ரன்களில் இந்தியாவை சுருட்டிய நியூசிலாந்து

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: