Fastag: ஃபாஸ்டேக் பாதையில் சென்றவர்களுக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது தெரியுமா?

உங்கள் வாகனத்திற்கு இன்னும் 'ஃபாஸ்ட்டேக்' வாங்கவில்லையா? - இந்தக் கட்டுரையை படியுங்கள்

பட மூலாதாரம், Getty Images

தினமணி: உங்கள் வாகனத்திற்கு இன்னும் 'ஃபாஸ்ட்டேக்' வாங்கவில்லையா?

சுங்கச்சாவடிகளில் 'ஃபாஸ்டேக்' பாதையில் 'ஃபாஸ்டேக்' அட்டை இல்லாமல் சென்ற 18 லட்சம் பேரிடமிருந்து ரூ.20 கோடியை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்ஹெச்ஏஐ) அபராதம் வசூலித்துள்ளது.

ஃபாஸ்டேக் திட்டத்தில் இணைவதன் மூலம் சுங்கச் சாவடிகளில் வாகனங்களை நிறுத்தாமல் செல்லலாம். அங்கு செலுத்த வேண்டிய தொகை ஏற்கெனவே பணம் செலுத்தி நாம் பெற்றுள்ள ஃபாஸ்டேக் அட்டையிலிருந்து தானாகச் செலுத்தப்படும். இந்தத் திட்டம் தற்போது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் 350 சுங்கச் சாவடிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஃபாஸ்டேக் வழியில் டேக் இல்லாமல் வாகனங்கள் சென்றால் சுங்கக் கட்டணம் இரட்டிப்பாக வசூலிக்கப்படும். இவ்வாறு ரூ.20 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

ஆா்எஃப்ஐடி தொழில்நுட்பத்தில் இயங்கும் ஃபாஸ்டேக் அட்டை இதுவரை 1.55 கோடி விநியோகிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், டிஜிட்டல் பணப் பரிவா்த்தனை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமும் ஃபாஸ்டேக் மூலம் ரூ.40 லட்சம் மதிப்பில் பரிவா்த்தனை நடைபெறுகிறது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பரிவா்த்தனையை ஊக்குவிப்பதற்காக ஃபாஸ்டேக் அட்டை வாங்குவதற்கான கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த 15-ஆம் தேதி முதல் வரும் 29-ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளது.

வாகனப் பதிவு சான்றிதழை காண்பித்து இலவசமாக ஃபாஸ்டேக் அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.

இந்து தமிழ் திசை: எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு ஆவணங்கள் என்ஐஏ.விடம் ஒப்படைப்பு

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகளிடம் கன்னியாகுமரி மாவட்ட தனிப்படை போலீஸார் ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த ஜனவரி 8-ம் தேதி பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் அதே மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ஷமீம், தவுபீக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, கத்தி போன்றவை கைப்பற்றப்பட்டன. தவுபீக், அப்துல் ஷமீம் இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, டெல்லி, மகா ராஸ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த வர்களுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனால் இவ்வழக்கு ஏற்கெனவே என்ஐஏவு-க்கு மாற்றப்பட்டிருந்தது. இந்நிலையில், எஸ்.ஐ. வில்சன் கொலை தொடர்பான ஆவணங்கள், ஆதாரங்கள் அனைத்தையும் கன்னியாகுமரி மாவட்ட தனிப் படை போலீஸார், என்ஐஏ அதி காரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். என்ஐஏ அதிகாரிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு வாரம் முகா மிட்டு விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தினத்தந்தி: "கொரோனா வைரஸ் பீதியால் கோழி விலை அதிரடி சரிவு"

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸ் பீதியால் கோழி விலை அதிரடியாக சரிந்து வருகிறது. ஒரு கிலோ கோழி (உயிருடன்) ரூ.49-க்கு தற்போது விற்பனை ஆகிறது. இதனால் சிக்கன் பிரியாணி விலை குறையும் என்று அசைவ பிரியர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சீனாவில் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் பீதி உலகம் முழுவதும் பரவி கிடக்கிறது. இந்த வைரஸ் கோழி போன்ற பறவைகள் மூலம் பரவுவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. இதுதொடர்பாக வெளியான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

'கொரோனா வைரஸ் பீதியால் கோழி விலை கடந்த சில நாட்களாக குறைந்துகொண்டே வருகிறது. கடந்த மாதங்களில் ரூ.200 வரை விற்பனையான ஒரு கிலோ கோழி(உயிருடன்) படிப்படியாக விலை சரிந்து நேற்று மொத்த மார்க்கெட்டில் ரூ.49-க்கு விற்பனை ஆனது. அதேவேளையில் நாட்டுக்கோழி விலையில் எந்த மாற்றமும் இல்லை. நாட்டுக்கோழி (உயிருடன்) ரூ.380 முதல் ரூ.400 வரை விற்பனை ஆனது.

அசைவ பிரியர்களின் முதன்மையான விருப்ப உணவு சிக்கன் தான். சிக்கன் தந்தூரி, சிக்கன் 65, டிராகன் சிக்கன், சிக்கன் லாலிபாப், கிரில் சிக்கன், பெப்பர் சிக்கன், சில்லி சிக்கன், சிக்கன் டிக்கா, சிக்கன் மஞ்சூரியன் போன்ற பல்வேறு வகைகளில் சிக்கன் ருசித்து சாப்பிடப்பட்டு வருகிறது.

தற்போது கோழி விலை குறைந்துகொண்டு வருவதால் சிக்கன் வகைகளின் விலையும் குறைய வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது. குறிப்பாக சிக்கன் பிரியாணி விலை குறையும் என்றே அசைவ பிரியர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதுகுறித்து அசைவ பிரியர்கள் சிலர் கூறுகையில், "கோழி விலை உயரும்போதெல்லாம் சிக்கன் வகைகள் விலை உயரும். இப்போது கோழி விலை குறைந்து வருவதால், சிக்கன் வகைகள் மற்றும் சிக்கன் பிரியாணி விலை குறையும் என்று எதிர்பார்க்கிறோம்' என்றனர்.

இதுகுறித்து சென்னை இறைச்சி சில்லரை வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் எம்.அன்வர் பாஷா குரோஷி கூறுகையில், 'சென்னையில் ஒரு நாளைக்கு சுமார் 10 ஆயிரம் கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஒரு கிலோ கோழி (உயிருடன்) ரூ.70 முதல் ரூ.75 வரையிலும், கறியாக ஒரு கிலோ ரூ.180 வரையிலும் விற்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பீதியால் கடந்த சில நாட்களாக கடைகளில் கோழிக்கறி வாங்குபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து இருக்கிறது. ஆனால், 'பாஸ்ட் புட்' மற்றும் ஓட்டல்களில் சிக்கன் உணவு வகைகள் வழக்கம்போலவே விற்பனை ஆகிறது' என்றார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "நாசா செல்லும் பள்ளி மாணவிக்கு ரூபாய் 2 லட்சம் நிதி"

அமெரிக்காவின் தேசிய விண்வெளி ஆய்வு மையத்துக்குச் செல்லும் நாமக்கல் பள்ளி மாணவிக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 2 லட்சம் நிதியுதவியை வழங்க முதல்வா் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாணவி அபிநயா நாசா செல்லவும், சா்வதேச விண்வெளி அறிவியல் மாநாட்டில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததும், அவருடைய திறமைக்குக் கிடைத்த வெற்றியாகும்.விண்வெளித்துறையில் அதிக ஆா்வம் கொண்ட இவா், கல்வியில் சிறந்து விளங்கவும், விண்வெளித் துறையில் சாதனைகள் படைத்து, தமிழகத்துக்கும், இந்தியாவிற்கும் பெருமை சோ்த்திட வேண்டும் என வாழ்த்துகிறேன்.மாணவியை ஊக்குவிக்கும் வகையில் அவருக்கு ரூ. 2 லட்சம் நிதியை முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்," என்கிறது அந்நாளிதழ்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: