மலேசியாவின் மகாதீர் முகமது மீண்டும் பிரதமராக முயல்கிறாரா? 'ஒற்றுமை அரசாங்கம்' சாத்தியமா?

  • சதீஷ் பார்த்திபன்
  • பிபிசி தமிழுக்காக, மலேசியாவிலிருந்து
மகாதீர்

பட மூலாதாரம், BEHROUZ MEHRI/AFP/GETTY IMAGES

படக்குறிப்பு,

மகாதீர்

மலேசியாவின் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக மகாதீர் முகமது தெரிவித்துள்ளது, மலேசிய அரசியல் களத்தை மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாட்டையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

இதையடுத்துப் புதிய பிரதமர், புதிய ஆட்சி, புதிய அமைச்சரவை என்ற கோணத்தில்தான் மலேசிய அரசியலின் அடுத்தடுத்த நகர்வுகள் இருக்கும் என்பதே பெரும்பாலான அரசியல் நோக்கர்களின் கணிப்பாக இருந்தது. ஆனால், அரசியலைக் கணிப்பவர்களைவிட அதைச் செய்பவர்களின் கணக்கு வேறு மாதிரியாக இருக்கவும் வாய்ப்புண்டு என்பதை தெளிவாக நிரூபித்துள்ளார் மகாதீர்.

கடந்த வெள்ளிக்கிழமை வரை, பிரதமர் பதவியில் இருந்து விலகி பொறுப்புகளை அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகள் அவரை வலியுறுத்தி வந்தன.

ஆனால் இரு தினங்களில் காட்சிகள் மாறின. ஞாயிற்றுக்கிழமை பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் மகாதீர். ஆனால் மறுநாளே அவரைப் பதவி விலகிச் சொன்னவர்கள் மட்டுமல்லாது, எதிர்க்கட்சியினரும் கூட மீண்டும் பிரதமராக வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைக்கும் அளவுக்கு நிலைமை திடீரென மாறியுள்ளது.

இதையடுத்து 'ஒற்றுமை அரசு' அமைப்போம் எனும் யோசனையை மகாதீர் முன்வைத்துள்ளதாகவும், மலேசிய அரசியல் கட்சிகள் அதைப் பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தத் திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம், அடுத்து என்ன நடக்கும், மலேசிய மாமன்னர் என்ன முடிவெடுப்பார் என்பன குறித்து அலசுகிறது இக்கட்டுரை.

பட மூலாதாரம், VLADIMIR SMIRNOV/GETTY IMAGES

அனைத்து கட்சித் தலைவர்களுடனும் ஆலோசனை நடத்திய மகாதீர்

பிரதமர் பதவியிலிருந்து விலகிய கையோடு தாம் சார்ந்திருந்த பெர்சாத்து கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் விலகியுள்ளார் மகாதீர். இதையடுத்து மலேசிய மாமன்னரை அவரது அரண்மனையில் சந்தித்துப் பேசிய மகாதீரிடம், புதிய பிரதமர் நியமிக்கப்படும்வரை இடைக்காலப் பிரதமராகப் பொறுப்பேற்கும்படி மாமன்னர் கேட்டுக் கொண்டார். அதனை ஏற்று தமது பணியை மீண்டும் துவங்கியுள்ளார் மகாதீர்.

இடைக்காலப் பிரதமராகப் பொறுப்பேற்ற கையோடு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களை அவர் அடுத்தடுத்து சந்தித்துப் பேசி வருகிறார். நம்பிக்கை கூட்டணி (பக்காத்தான் ஹராப்பான்) கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சி கூட்டணியான தேசிய முன்னணியின் பாரிசான் நேசனல் தலைவர்கள், இரு கூட்டணிகளிலும் இல்லாத கட்சிகளின் பிரமுகர்கள் என்று அனைவருடனும் ஆலோசனை நடத்தியுள்ளார் மகாதீர்.

பதவியிலிருந்து விலகிய பிறகு எதற்காக அனைவரையும் சத்திக்கிறார் என்ற கேள்விக்கான விடைதான் 'ஒற்றுமை அரசாங்கம்'.

ஒற்றுமை அரசாங்கம் என்பதை மகாதீர் வலியுறுத்த என்ன காரணம்?

தற்போது மலேசிய அரசியல் களத்தில் நம்பிக்கை கூட்டணி (பக்காத்தான் ஹராப்பான்), தேசிய முன்னணி (பாரிசான் நேசனல்) என இரண்டு முக்கிய கூட்டணிகள் உள்ளன. மலாய்க்காரர்களை அதிக உறுப்பினர்களாகக் கொண்ட அரசியல் கட்சியான 'பாஸ்' (PAS) இவ்விரு கூட்டணிகளையும் புறக்கணித்துவிட்டு தனித்துச் செயல்பட்டு வந்தது.

நம்பிக்கை கூட்டணியில் அன்வார் தலைமையிலான பிகேஆர் (PKR), பெர்சாத்து, ஜனநாயக செயல் கட்சி (ஜசெக-DAP), அனாமா ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

அன்வார் இப்ராகிம்

இந்நிலையில், அடுத்த பிரதமராகக் கருதப்பட்ட அன்வாருக்கும், அவரது பிகேஆர் கட்சியின் துணைத் தலைவரான அஸ்மின் அலிக்கும் இடையேயான மோதலே தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு முக்கியக் காரணம் எனக் கருதப்படுகிறது. அன்வார் பிரதமராவதற்கு அஸ்மின் அலி மறைமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை கூட்டணியில் இடம்பெற்றுள்ள நான்கு முக்கிய கட்சிகளில் மூன்று கட்சிகள் அன்வார் பிரதமராவதை ஆதரிக்கின்றன. ஆனால் மகாதீர் தலைமையில் இயங்கிய பெர்சாத்து இதற்கு உடன்படவில்லை. இந்நிலையில் பிகேஆர் கட்சியிலிருந்து அஸ்மின் உட்பட 11 பேர் விலகியுள்ளனர்.

நடப்பு ஆட்சிக் காலம் முழுவதும் மகாதீர்தான் பிரதமராக நீடிக்க வேண்டும் என்கிறது அஸ்மின் அலியின் அணி. பெர்சாத்து வசம் உள்ள 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றி அன்வார் பிரதமராவது சிரமமான விஷயம்.

இந்தத் திடீர் திருப்பங்கள் காரணமாக 37 (26+11) எம்பிக்களின் ஆதரவை இழந்துள்ளார் அன்வார். இப்படியொரு நிலைமை அன்வாருக்கு ஏற்படக்கூடும் என பிரதமர் மகாதீர் அண்மையில் சுட்டிக்காட்டி இருந்தார். ஆனால் அச்சமயம் அன்வாருக்கு இவரும் நெருக்கடி கொடுப்பதாகப் பேசப்பட்டது. ஆனால் மகாதீர் சொன்னதுதான் இப்போது நடந்துள்ளது.

தேசிய முன்னணியின் நிலைப்பாடும், வியூகமும் என்ன?

இந்தத் திடீர் அரசியல் குழப்பங்கள் காரணமாக தேசிய முன்னணி வட்டாரங்களில் உற்சாகம் நிலவுகிறது. அக்கூட்டணியில் மலாய்க்காரர்களைப் பிரதிநிதிக்கும் 'அம்னோ' (UMNO), 'மசீச' எனப்படும் மலேசிய சீன சங்கம் (MCA), மஇகா எனப்படும் மலேசிய இந்தியர் சங்கம் (MIC) ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

நாட்டின் ஸ்திரத்தன்மைக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதால் மகாதீர் பிரதமர் பதவியில் நீடிக்க ஆதரவு அளிப்பதாக அறிவித்தது தேசிய முன்னணி. பிறகு ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மகாதீர் தலைமையில் அமையும் புதிய ஆட்சியில் இம்மூன்று கட்சிகளும் இடம்பெறும் என்றும் கூறப்பட்டது. இதேபோல் முக்கிய எதிர்க்கட்சியான 'பாஸ்' ஆதரவும் மகாதீருக்குக் கிடைத்துள்ளது.

பட மூலாதாரம், படத்தின் காப்புரிமைRAWF8/GETTY IMAGES

அன்வார் பிரதமராகக் கூடாது என்பதை நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாக சொல்வதைப் போலவே இக்கட்சிகளின் நடவடிக்கைகள் உள்ளன. இதை அன்வாரும் உணர்ந்துள்ளார். எனவே குறைந்தபட்சம் பக்காத்தான் கூட்டணியின் ஆட்சி நீடிக்க வேண்டும் என முடிவெடுத்த அவரது தரப்பு, மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.

ஒற்றுமை அரசாங்கம் என்பது சாத்தியமா?

அன்வார் பிரதமராக பல்வேறு முட்டுக்கட்டைகள் உள்ளன. தற்போதைய எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்தால் யார் பிரதமர் ஆவார், எனும் கேள்வி எழுகிறது. இதுவரை இந்த விஷயத்தில் அக்கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

மாமன்னரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரும் முன் இதற்கு தீர்வு கண்டாக வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் தேசிய முன்னணியில் உள்ள அம்னோ கட்சி, பேச்சுவார்த்தை தொடங்கும் முன்பே அமைச்சரவையில் தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய துறைகள், பதவிகள் குறித்து பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்ததாகவும், அதனால் பிற எதிர்க்கட்சிகள் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் மலேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பாக மகாதீரின் பெர்சாத்து கட்சித் தலைவர்கள் இந்த நிபந்தனைகளை ஏற்க இயலாது என தொடக்க நிலையிலேயே மறுத்துவிட்டதாக அந்த ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இப்படி அடுத்தடுத்து குழப்பங்கள், மோதல்கள் எழுவதைக் கண்ட பிறகே 'ஒற்றுமை அரசாங்கம்' என்ற யோசனையை முன்வைத்துள்ளார் மகாதீர்.

தமக்கு ஆதரவு தெரிவித்துள்ள அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து, புதிய அரசை மகாதீர் அமைக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தன்னைச் சந்தித்த அரசியல் கட்சிகள் தலைவர்களிடம் அவர் வலியுறுத்தி உள்ளதாகத் தெரிகிறது.

அதேசமயம் தாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், எடுக்கும் முடிவுகளில் எந்த வகையிலும் தலையிடக் கூடாது, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனும் நிபந்தனையை அவர் முன் வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட மூலாதாரம், MOHD RASFAN/GETTY IMAGES

மேலும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவம் இல்லாத ஓர் அரசாங்கத்தை அமைக்கும் யோசனையையும் மகாதீர் முன் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மாறாக, அரசியலில் ஈடுபடாத வெளி நபர்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வது குறித்தும் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

தமக்கு மாற்றாக இன்னொரு பிரதமர் வேட்பாளர் இல்லாத நிலையிலேயே அவர் இந்த யோசனைகளை முன்வைத்துள்ளார்.

'ஊழல்வாதிகளுடன் மகாதீர் இணையமாட்டார்'

இந்நிலையில், ஊழல்வாதிகளுடன் இணைந்து பிரதமர் மகாதீர் புதிய அரசாங்கத்தை அமைக்க மாட்டார் என அவரது ஊடக ஆலோசகரும், மூத்த பத்திரிகையாளருமான காடிர் ஜாசின் தெரிவித்துள்ளார்.

'ஒற்றுமை அரசாங்கம்' அமைக்க மகாதீர் முயற்சி மேற்கொண்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் கருத்துரைத்த அவர், குற்றவாளிகள், குற்றம் சாட்டப்பட்டவர்களை மகாதீர் தனக்கு துணையாக அழைக்க மாட்டார் என்றார்.

சட்டத்தின் ஆட்சி உறுதி செய்யப்படும், சில தலைவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளின் விசாரணைகள் நீடிக்கும் என்பதில் மகாதீர் உறுதியாக இருப்பார் என்று காடிர் ஜாசின் கூறியுள்ளார்.

கொள்கைகளை கைவிடுமாறும், வாக்குறுதிகளை மீறிச் செயல்படுமாறும் மகாதீருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அன்வாருக்கு அளித்த வாக்குறுதியை மீறுமாறு பெர்சாத்து கட்சி மகாதீரை வற்புறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

'நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும்'

காடிர் ஜாசினின் இந்த அறிக்கை வெளியானதையடுத்து மகாதீருக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக முக்கிய எதிர்க்கட்சிகளான பாஸ் மற்றும் அம்னோ ஆகியவை அறிவித்துள்ளன.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் துணையோடு மகாதீர் ஆட்சி அமைக்கமாட்டார் என்று காடிர் தெரிவித்துள்ளது அம்னோவை மறைமுகமாகக் குறிப்பிடுவதாகக் கருதப்படுகிறது.

ஏனெனில் அக்கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கும், துணைப் பிரதமர் சாகிட் ஹமீடியும் ஊழல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர். அவர்கள் இருவர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றன.

இதனால் காடிர் ஜாசின் தெரிவித்துள்ள கருத்து அம்னோவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனினும் அதை வெளிப்படுத்தாமல், ஒற்றுமை அரசாங்கத்தில் ஜனநாயக செயல் கட்சியை (ஜசெக) சேர்ப்பதை விரும்பவில்லை என அக்கட்சி தெரிவித்துள்ளது. இதே காரணத்தை முன்வைத்து பாஸ் கட்சியும் மகாதீருக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

இதையடுத்து புதிய அரசாங்கத்தை தேர்வு செய்யும் உரிமையை நாட்டு மக்களிடம் அளிக்க வேண்டும் என்றும், யார் புதிய ஆட்சியாளர்கள் என்பதை மக்களே பொதுத் தேர்தல் வழி முடிவு செய்யட்டும் எனவும் இவ்விரு கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன. எனவே நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என மாமன்னரிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளன.

அனைத்து எம்பிக்களுடனும் நேர்காணல் நடத்தும் மாமன்னர்

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், மலேசியாவின் மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி மலேசிய நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களையும் அவர் நேர்காணல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு தினங்களில் அனைத்து உறுப்பினர்களையும் சந்தித்த பிறகு, அதிகமான எம்பிக்களின் ஆதரவைப் பெற்றுள்ள ஒருவரை மாமன்னர் பிரதமராக நியமிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய வரலாற்றில் பிரதமரை தேர்வு செய்ய, மாமன்னர் நேர்காணல் நடத்துவது இதுவே முதன்முறை.

இதையடுத்து சூட்டோடு சூடாக நேற்றே இந்த நேர்காணல் நடைமுறையைத் துவங்கியுள்ளார் மாமன்னர். இன்று இரவுக்குள் அவர் நேர்காணலை முடித்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமராக யாருக்கு ஆதரவு - நாடாளுமன்றம் கலைப்பு: இரு கேள்விகள் மட்டுமே கேட்ட மாமன்னர்

நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான நேர்காணலின்போது மாமன்னர் இரு கேள்விகளை மட்டுமே கேட்டதாகக் கூறப்படுகிறது.

நேர்காணலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கோலா க்ராவ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முகமட் சைட் இத்தகவலை வெளியிட்டார். எனினும், சத்தியப் பிரமாணம் ரகசியமானது என்பதால் மேலதிக தகவல்களை தெரிவிக்க இயலாது என்றார் அவர்.

"யார் பிரதமராக இருக்க வேண்டும், அல்லது நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டுமா? என்று மாமன்னருடனான நேர்காணலில் கேட்கப்பட்டது.

"எனவே எம்பிக்களுக்கு இரண்டு தேர்வுகள் உண்டு. ஒன்று பிரதமரின் பெயரைக் கூறலாம், அல்லது நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு கேட்டுக் கொள்ளலாம்," என்றார் இஸ்மாயில் முகமட் சைட்.

கூட்டணி முறிவால் மாநில அரசுகள் கவிழ வாய்ப்பு

இத்தகைய சூழ்நிலையில், மலேசியாவில் சில மாநில அரசுகளுக்கும் திடீர் சிக்கல் முளைத்துள்ளது. சில மாநிலங்களில் ஆட்சி மாற்றம் நிகழ வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

கடந்த பொதுத்தேர்தலின் போது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சில மாநிலங்களையும் கைப்பற்றியது. தற்போது அக்கூட்டணியில் இருந்து பெர்சாத்து கட்சி விலகியதை அடுத்து, வெற்றி பெற்ற மாநிலங்களில் ஆட்சி கைநழுவிப் போகும் சூழல் நிலவுகிறது.

ஜொகூர், மலாக்கா, பேராக் உள்ளிட்ட மாநிலங்களில் பெர்சாத்து கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்கள், எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில், அங்குள்ள பக்காத்தான் கூட்டணி அரசுகள் கவிழக்கூடும்.

எனினும் பினாங்கு, சிலாங்கூர் மாவட்டங்களில் பக்காத்தான் ஆட்சிக்கு இதுவரை எந்தவித நெருக்கடியும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒரு பிரதமரை நியமிக்கும் அதிகாரம் மாமன்னருக்குத்தான் உண்டு. எனவே எந்த தனி நபருக்கு அல்லது அரசியல் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அவரைப் பிரதமராக நியமிக்க வேண்டும் எனவும் சட்டம் விவரிக்கிறது.

"தற்போது இணைந்துள்ள அரசியல் கட்சிகள் எல்லாம் பொதுத் தேர்தல் களத்திலும் மீண்டும் கரங்கோர்த்து மக்களைச் சந்தித்து வெற்றி பெற்றால், மலேசியர்கள் அனைவருமே அந்த ஜனநாயக முடிவை வரவேற்று ஏற்பார்கள். எனவே இதை மனதிற்கொண்டு மாமன்னர் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கலாம்," என்கிறார் அரசியல் விமர்சகர் இரா. முத்தரசன்.

ஆக, மாமன்னரின் முடிவைப் பொறுத்தே நாட்டின் அடுத்த பிரதமர் யாரென்பது தெரியும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :