கொரோனா வைரஸ் மரணங்கள்: தென் கொரிய மதத் தலைவர் மீது கொலை வழக்கு விசாரணை

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

தென்கொரியாவில் நிகழ்ந்த சில கொரோனா வைரஸ் மரணங்கள் தொடர்பாக, அந்நாட்டில் உள்ள மதப்பிரிவு ஒன்றின் தலைவர் கொலை வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

ஷின்சியோன்ஜி திருச்சபையின் நிறுவனர் லீ மான்-ஹீ மற்றும் 11 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுப் பதியும்படி தலைநகர் சோல் நகர அரசு தமது புலனாய்வு அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பாக, யார் யாருக்கு இந்த நோய் பரவியிருக்கக் கூடும் என்று ஒரு பட்டிலைத் தயாரிப்பதற்கு அதிகாரிகள் முயன்றபோது தங்கள் திருச்சபையின் சில உறுப்பினர்களின் பெயர்களை மறைத்ததாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு தென் கொரியா.

இதுவரை தென் கொரியாவில் 3,730 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு, 21 பேர் இறந்துள்ளனர்.

நோய்த் தொற்று ஏற்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், சிறு கிறிஸ்துவ மதக் குழுவான ஷின்சியோன்ஜி திருச்சபையோடு தொடர்புடையவர்கள்தான்.

தெற்கு மாநகரமான தேகுவில் கடந்த மாதம், ஷின்சியோன்ஜி உறுப்பினர்கள், ஒருவர் மூலம் மற்றொருவருக்கு இந்த நோய் கடந்த மாதம் பரவியதாகத் தெரியவந்துள்ளது. இதன் பிறகே, இந்த நோய் நாடு தழுவிய அளவில் பரவியது.

பட மூலாதாரம், Getty Images

சோல் மாநகர அரசு ஞாயிற்றுக்கிழமை இந்த திருச்சபையை சேர்ந்த 12 பேர் மீது சட்டபூர்வமான புகார் அளித்தது. இவர்கள் கொலைக் குற்றத்தில் ஈடுபட்டதாகவும், உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தியதாகவும், தொற்று நோய் மற்றும் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த மதக் குழுவுக்கு எதிராக பொதுமக்கள் மத்தியில் அதிகரிக்கும் கோபத்தின் பிரதிபலிப்பு இது என்கிறார் சோல் நகரில் உள்ள பிபிசியின் லாரா பிக்கர். இந்தக் குழுவின் தலைவர் லீ மான்-ஹீ தாம் இறை தூதர் என்று சொல்லிக்கொள்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: