மலேசியா அரசியல்: ‘’அன்வாரின் பதவி ஆசையே குழப்பங்களுக்கு காரணம்’’- மகாதீர் திடீர் குற்றச்சாட்டு

மகாதீர்

பட மூலாதாரம், Getty Images

அண்மையில் மலேசிய அரசியல் களத்தில் ஏற்பட்ட குழப்பங்களுக்கும் திடீர் திருப்பங்களுக்கும் அன்வார் இப்ராகிமும், தற்போது பிரதமராக பொறுப்பேற்றுள்ள மொகிதின் யாசினும் தான் காரணம் என மகாதீர் மொஹம்மத் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மலேசியாவின் முன்னாள் பிரதமரான அவர், நாட்டின் பிரதமர் பதவியை அடைவதற்கு அன்வார் இப்ராகிம் மிகவும் அவசரப்பட்டதாகச் சாடினார்.

"அன்வார் பிரதமர் பதவியைப் பிடித்துவிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார். ஆனால் அவரால் பிரதமராக முடியாது. கடந்த காலத்தில் அவருக்கு மிக அதிகமான ஆதரவு இருந்தது. ஆனால் தற்போது மக்கள் என்னை ஆதரிக்கின்றனர்," என்றார் மகாதீர்.

மலேசியாவின் எட்டாவது பிரதமராக மொகிதின் யாசின் பதவியேற்ற சில மணி நேரங்களில் மகாதீர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images

மகாதீர் மீண்டும் பிரதமராக தமது முழு ஆதரவையும் வழங்கியுள்ளார் அன்வார். அவரும் இதர பக்காத்தான் கூட்டணித் தலைவர்களும் இணைந்து மகாதீருக்கு ஆதரவு திரட்டுவதில் தீவிர களப்பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் அன்வார் குறித்து மகாதீர் விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'அன்வாரின் திட்டத்தைக் கேள்விப்பட்டு கோபமடைந்தேன்'

தாம் பதவி விலகிய பிறகு அன்வார் தமக்குள்ள ஆதரவை நிரூபித்து பிரதமராகட்டும் என்று நினைத்தே பதவி விலகல் முடிவை எடுத்ததாக குறிப்பிட்ட அவர், தாம் நினைத்ததற்கு மாறாக சில விஷயங்கள் நடந்ததாக தெரிவித்தார்.

"நான் இந்தக் காரணத்தை முன்வைத்து தான் பிரதமர் பதவியில் இருந்து விலகினேன். இதன் மூலம் அன்வாருக்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும். ஒருவேளை மக்கள் நான் போட்டியிட விரும்பினால் அதைச் செய்திருப்பேன். மேலும் எனக்கு அதிக ஆதரவு கிடைத்திருந்தால் மீண்டும் பிரதமராகி இருப்பேன். எனினும் அன்வார் தமக்கு வெற்றி கிடைக்கும் என நினைத்தார்," என்று மகாதீர் கூறியுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் வேட்பாளராக அன்வார் தன்னை முன்னிறுத்த வேண்டும் என வலியுறுத்தியதாக குறிப்பிட்ட அவர், இதன் காரணமாகவே தாம் மீண்டும் பிரதமராக அதிகமான எம்பிக்களின் ஆதரவைப் பெற முடியாமல் போனது என்றார். இல்லையெனில் தற்போதுள்ளதை விட குறைந்தபட்சம் மேலும் 60 எம்பிக்களின் ஆதரவை தம்மால் கூடுதலாகப் பெற்றிருக்க முடியும் என்றும் மகாதீர் சுட்டிக்காட்டினார்.

பட மூலாதாரம், MOHD RASFAN / GETTY IMAGES

படக்குறிப்பு,

மொகிதின் யாசின், அன்வார் இப்ராகிம் மற்றும் மகாதீர் முகமது (இடமிருந்து வலமாக)

"அன்வார் வசம் 92 எம்பிக்கள் இருந்தனர். எனக்கு 60க்கும் மேற்பட்ட எம்பிக்கள் ஆதரவு தெரிவித்தனர். பக்காத்தான் ஹராப்பான் என்னை ஆதரித்திருந்தால் மீண்டும் பிரதமராகி இருப்பேன். ஆனால் தமக்கு பெரும்பான்மை கிடைக்காது என்பது தெரிந்திருந்தும், அன்வார் பிரதமர் வேட்பாளராக தன் பெயரை அறிவிக்கச் செய்தார்.

"கடந்த மாதம் 21ஆம் தேதி பக்காத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அச்சமயம் தம்மை துணைப் பிரதமராக நியமிக்க வேண்டும் அல்லது என்னை பதவியில் இருந்து விலகச் சொல்ல வேண்டும் என்பதை வலியுறுத்த அன்வார் இப்ராகிம் திட்டமிட்டிருந்தது எனது அரசியல் செயலாளர் மூலம் தெரிய வந்தது.

"இதனால் நான் கோபப்பட்டது உண்மை தான். ஆனால் அவ்வாறு ஏதும் நடக்கவில்லை. பக்காத்தான் கூட்டணித் தலைவர்கள் நான் பிரதமராக நீடிக்க வேண்டும் என்பதையே விரும்பினர். தனக்கு ஏதேனும் ஒரு காரணம் வேண்டும், அது அன்வார் மூலம் கிடைக்கும் என்று மொகிதின் யாசின் எதிர்பார்த்திருந்தார். அவ்வாறு நடக்காமல் போகவே பெர்சாத்து கட்சி பக்காத்தான் கூட்டணியை விட்டு வெளியேறுவதாக அவர் அறிவித்தார்.

"உண்மையில் அவர் அந்த முடிவை எடுத்த பிறகே அரசியல் குழப்பங்கள் தலைதூக்கின," என்று மகாதீர் மேலும் தெரிவித்துள்ளார்.

'நடந்திருப்பது திட்டமிட்ட ஆட்சிக்கவிழ்ப்பு என்பது உலகத்துக்கே தெரியும்'

இதற்கிடையே, கடந்த ஒரு வார கால அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் நடந்திருப்பது சந்தேகத்துக்கு இடமின்றி ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு தான் என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

மலேசியர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகமும் ஆட்சிக்கவிழ்ப்பு நடந்திருக்கிறது என்பதை நம்புவதாக ஞாயிற்றுக்கிழமை தமது இல்லத்தில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் பிறகு அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

அன்வார் இப்ராகிம்

"அவர்கள் உரிய நடைமுறைகளை பின்பற்றினார்களோ, அல்லது வாக்கெடுப்பின்படி செயல்பட்டார்களோ, மொத்தத்தில் பழைய அரசாங்கத்தை அவர்கள் கடத்திவிட்டனர். சில தலைவர்கள் கொள்கையைக் கடைபிடிக்கவில்லை என்பதுடன் வாக்குறுதிகளையும் மீறியது தான் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசு கவிழ காரணமானது.

"நேற்று ஒப்புக்கொண்ட நீங்கள் இன்று திடீரென மாறுகிறீர்கள் எனில் அதற்கு என்ன காரணம் இருக்க முடியும்... பணம் தான்," என்றார் அன்வார் இப்ராகிம்.

தமது ஆதரவாளர்கள் பொறுமை காக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அவசர அமர்வுக்கு சபாநாயகர் ஏற்பாடு செய்ய வேண்டும்

இதற்கிடையே நாடாளுமன்றத்தின் அவசர அமர்வுக்கு சபாநாயகர் ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக செயல்பாட்டாளரும் வழக்கறிஞருமான அம்பிகா சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்களும் இக்கோரிக்கையை வலியுறுத்த வேண்டும் என்றும், நாடாளுமன்ற அவசர அமர்வு இந்த வாரமே நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

"நாடாளுமன்றத்தில் யாருக்கு பெரும்பான்மை உள்ளது என்பதைக் கண்டறிய இந்தச் சிறப்பு அமர்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மலேசியர்கள் தங்கள் போராட்டத்தை எந்தத் தருணத்திலும் கைவிடக் கூடாது," என்றார் அம்பிகா சீனிவாசன்.

பட மூலாதாரம், Getty Images

கொல்லைப்புறம் வழியாக புதிய ஆட்சி அமைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுப்பியுள்ள ஒருதரப்பினர், ஞாயிற்றுக்கிழமை மாலை 'மக்களுக்கு சக்தி' என்ற முழக்கத்துடன் கோலாலம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கருத்துரைக்கும் போதே அம்பிகா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

"நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்மையிலேயே தங்களின் ஆதரவு யாருக்கு என்பதை வெளிப்படுத்தட்டும். உண்மையில் யார் யாரை ஆதரிக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. எனவே நாடாளுமன்றத்தின் அவசர அமர்வுக்கு ஏற்பாடு செய்வதே சரியான நடைமுறையாக இருக்கும்," என்றார் அம்பிகா.

இதற்கிடையே, சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் மகாதீர் மொஹம்மத்தின் மகள் மரினா மகாதீரும் கலந்து கொண்டார். அப்போது இளையர்கள் நம்பிக்கை இழந்துவிடாமல் போராட வேண்டும் என்றார்.

மீண்டும் பிரதமராக முடியாமல் போனது குறித்து மகாதீர் என்ன நினைக்கிறார்? என்று செய்தியாளர்கள் கேட்ட போது, அவர் வழக்கம் போல் பணிகளை கவனிப்பதாக மரினா குறிப்பிட்டார்.

"அவர் மிகுந்த அனுபவசாலி. அவர் தனது உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டார். இங்கு உணர்வுகளைக் காட்ட நேரமில்லை. மலேசியாவில் உள்ள நல்ல குடிமக்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. எனவே நாம் மீண்டும் எழுச்சி பெறுவோம் என நம்புகிறேன்," என்றார் மரினா.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படலாம்

இதற்கிடையே, இம்மாதம் 9ஆம் தேதி நடைபெற இருந்த நாடாளுமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக சபாநாயகர் முகமட் அரிப் முகமட் யூசோப் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான தேதி குறித்து பிரதமர் அலுவலகத்தை தாம் தொடர்புகொள்ள இருப்பதாக அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மார்ச் 9ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் மலேசிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா துவக்கி வைப்பதாக இருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: