மலேசியா அரசியல்: “நான் துரோகி அல்ல”: மலேசிய பிரதமர் மொகிதின் யாசின் - விரிவான தகவல்கள்

மொகிதின் யாசின்

பட மூலாதாரம், Getty Images

தாம் ஒரு துரோகி அல்ல என்றும், நாட்டைக் காப்பாற்றவே பிரதமராக பொறுப்பேற்றுள்ளதாகவும் மலேசியாவின் புதிய பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.

பிரதமராகப் பொறுப்பேற்ற பின் மலேசிய குடிமக்கள் மத்தியில் முதன்முறையாக உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரதமர் பதவிக்காக முன்னிறுத்தப்பட்ட இரண்டு வேட்பாளர்களுக்கும் பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், அரசியல் நெருக்கடி தீவிரமடையும் வரை தமக்கு பிரதமராக வேண்டும் எனும் விருப்பம் இல்லை என்று தெரிவித்தார்.

"நான் பிரதமர் பதவியை ஏற்பதா அல்லது மகாதீர் மொஹம்மத் பிரதமராக நீடிக்க ஆதரவு அளிப்பதா என்பது தொடர்பில் முடிவெடுப்பது கடினமாக இருந்தது. ஒருவேளை நான் மகாதீருக்கு ஆதரவு அளித்திருந்தால் அரசியல் முட்டுக்கட்டைகள் நீடித்திருக்கும்.

"நாட்டு மக்கள் ஏற்கெனவே இந்த நெருக்கடியால் களைத்துப் போய்விட்டனர். ஒரு தலைவராக இந்நிலை மாற தீர்வுகாண வேண்டும். இந்த நெருக்கடி நீடிப்பதை அனுமதிக்கக் கூடாது," என்றார் மொகிதின் யாசின்.

பட மூலாதாரம், Getty Images

தமக்கு ஆதரவு வழங்கக் கோரி மகாதீரை நேரில் சந்திப்பதாக குறிப்பிட்ட அவர், போதுமான எம்பிக்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் தம்மை ஆதரிக்கத் தயார் என மகாதீர் கூறியதாகத் தெரிவித்தார்.

"என் மீது உங்களுக்கு கோபம் இருக்கும். நான் முன்பே எதிர்பார்த்தபடி ஒரு தரப்பினர் துரோகி என்று என்னைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் நான் துரோகி அல்ல. எத்தகைய நெருக்கடியில் இருந்தும் நாட்டைக் காப்பாற்றவே நான் இருக்கிறேன். மலேசியாவை கட்டியெழுப்பவும், பழைய பெருமையை மீட்டெடுக்கவும் அனைவரும் இணைந்து செயல்படுவோம்," என்று மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.

மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், சீக்கியர்கள், பூர்வ குடிமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தாமே பிரதமர் என்று குறிப்பிட்ட அவர், விவசாயிகள், மீனவர்கள், தொழில் அதிபர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கும் தாமே பிரதமர் என்றார்.

"அரசாங்கத்தையும் இந்த நாட்டையும் சரியான பாதையில் செலுத்த சற்று காலஅவகாசம் தேவைப்படுகிறது. எனது 40 ஆண்டுகால அரசியல் அனுபவத்தைப் பயன்படுத்த ஒரு வாய்ப்பு அளியுங்கள்.

"மகாதீரின் ஆதரவுடனேயே பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டேன். கடந்த சில தினங்களில் நடந்தது குறித்து எதுவும் பேச விரும்பவில்லை. எனினும் எனது நேர்மை குறித்து கேள்வி எழக்கூடாது என்பதால் நடந்தவற்றை விளக்க முற்பட்டுள்ளேன்," என்றார் மொகிதின்.

ஊழல் கறைபடியாத, நிர்வாகத் திறனுள்ளவர்களுக்கு மட்டுமே தமது அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்றும், மலேசியாவில் உள்ள பல்லின மக்களைத் திருப்திபடுத்தும் வகையில் தமது அமைச்சரவை அமையும் என்றும் பிரதமர் மொகிதின் யாசின் உறுதியளித்தார்.

மொகிதினுக்கு நஜீப் ஆதரவு

இதற்கிடையே, புதிய பிரதமர் மொகிதின் யாசினுக்கு பெரும்பான்மை எம்பிக்களின் ஆதரவு இருக்கும் என நம்புவதாக முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

இன்று கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டை வழிநடத்த பிரதமர் மொகிதினுக்கு உரிய வாய்ப்பும் அவகாசமும் வழங்கப்பட வேண்டும் என்றார்.

கடந்த தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் நஜீப் பிரதமராக இருந்தார். அப்போது வெடித்த 1-எம்டிபி ஊழல் தொடர்பாக, அச்சமயம் துணைப் பிரதமராக இருந்த மொகிதின் யாசின் கேள்வி எழுப்பினார். இதைடுத்து துணைப் பிரதமர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில் மொகிதினுக்கு ஆதரவு அளித்துள்ளார் நஜீப்.

இவர் சார்ந்துள்ள அம்னோ கட்சியின் ஆதரவுடன் தான் மொகிதின் தற்போது பிரதமராகி உள்ளார்.

மகாதீர் மகளிடம் போலிஸ் விசாரணை

இதற்கிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கோலாலம்பூரில் நடைபெற்ற கண்டனக் கூட்டம் தொடர்பாக முன்னாள் பிரதமர் மகாதீரின் மகள் மரினா மகாதீர், மனித உரிமை ஆர்வலர் அம்பிகா சீனிவாசன் ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தப்படும் என மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், MOHD RASFAN / GETTY IMAGES

நாட்டின் எட்டாவது பிரதமராக மொகிதின் யாசின் நியமிக்கப்பட்டதற்கு சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து கோலாலம்பூரில் உள்ள சோகோ வணிக வளாகம் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை இருநூறுக்கும் அதிகமானோர் திரண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

அச்சமயம் மரினா மகாதீரும் அம்பிகா சீனிவாசனும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அங்கு வருகை தந்தனர்.

இந்த கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடந்த போதிலும், காவல்துறையின் அனுமதி பெறாமல் நடத்தப்பட்டதாக மலேசிய காவல்துறை தலைவர் அப்துல் ஹமிட் படோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மரினா, அம்பிகா மற்றும் அக்கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தும் என்று அவர் கூறியுள்ளார்.

பதவி விலகியதற்காக மன்னிப்பு கோரிய மகாதீர்

இந்நிலையில் பிரதமர் பதவியில் இருந்து தாம் விலகியதற்காக பக்கத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர்களிடம் மகாதீர் மொஹம்மத் மன்னிப்பு கோரியுள்ளார்.

"சில தவறுகளைச் செய்துவிட்டேன். எம்பிக்களின் ஆதரவை இழந்துவிட்டதாக கருதியதால் பதவி விலகினேன். எனக்கு வேறு வழியில்லை," என்று கடந்த 1ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட காணொளி ஒன்றில் அவர் இவ்வாறு கூறும் காட்சி இடம்பெற்றுள்ளது.

மகாதீர் பேசும் போது அவருக்கு அருகே எந்தவித உணர்ச்சியையும் வெளிகாட்டாமல் அன்வார் இப்ராகிம் நிற்பதும் அந்தக் காணொளியில் பதிவாகி உள்ளது.

இந்நிலையில் இந்தக் காணொளிப் பதிவு டுவிட்டரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: