மலேசியாவில் மீண்டும் கொரோனா தாக்குதல்: ஒரே நாளில் 7 பேர் பாதிப்பு

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்பு படம்

மலேசிய அரசியல் களத்தில் நீடித்து வந்த பரபரப்பு சற்றே ஓயத்தொடங்கியுள்ள நிலையில், இங்கு ஒரே நாளில் 7 பேர் கொரோனா கிருமித் தொற்றுக்கு ஆளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதிய பரபரப்பு நிலவுகிறது.

கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு மலேசியாவில் கால்பதித்தது முதல் ஒரே நாளில் ஏழு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது இதுவே முதன் முறை.

இதன் மூலம் இந்நாட்டில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.

மலேசியாவைப் பொறுத்தவரை கடந்த ஜனவரி 25ஆம் தேதி தான் கொரோனா பாதிப்பு உள்ள முதல் நபர் அடையாளம் காணப்பட்டார். அதன் பிறகு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வந்தது.

ஒருமுறை மட்டுமே அதிகபட்சமாக ஒரே நாளில் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பிப்ரவரி 16ஆம் தேதி வரை 22 பேர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு 11 நாட்களுக்கு வேறு யாரும் பாதிக்கப்படவில்லை.

கொரோனா கிருமித்தொற்றுப் பரவலை தடுக்க மலேசிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்பு பாராட்டியது. அண்டை நாடுகளும் மலேசியாவுக்குப் பாராட்டு தெரிவித்தன.

தேவையற்ற பயணத் தடைகளை விதிப்பது, மக்கள் மத்தியில் கிருமித்தொற்று குறித்து அச்சத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று மலேசிய அரசு நடந்து கொள்ளவில்லை. அதேசமயம் உண்மை நிலவரத்தை வெளிப்படையாக அறிவித்து வந்தது.

ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. மார்ச் 3ஆம் தேதி ஒரே நாளில் மலேசியாவில் புதிதாக 7 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் புதிய பிரதமர் மொகிதின் யாசின் கொரோனா விவகாரம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கிருமித்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

மலேசியாவில் கொரோனா கிருமித் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 36ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 22 பேர் சிகிச்சைக்குப் பிறகு பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இந்தியாவில் கொரோனா எச்சரிக்கை.

தற்போது 14 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரது உடல்நிலையும் சீராக உள்ளது என மலேசியப் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பிட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கொரோனா கிருமித் தொற்று குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என மலேசிய அரசு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.

தொடர்ந்து பரவும் வதந்திகள்: மலேசிய அரசு கடும் எச்சரிக்கை

தலைநகர் கோலாலம்பூரில் உள்ள கே.எல்.சென்ட்ரல் என்ற பகுதியில் ரயில், பேருந்து நிலையங்கள் அமைந்துள்ளன. இந்நிலையில் அங்கு செயல்படும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியானது. எனவே அப்பகுதிக்குச் செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் கே.எல்.சென்ட்ரல் பகுதிக்கு வருவதும், அங்குள்ள போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துவதும் வாடிக்கை. அந்தப் பகுதியை அதிகாரிகள் தனிமைப்படுத்தி, கிருமி நாசினியைத் தெளிப்பது உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக வெளியான தகவல் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதே போல் பிரபல மருத்துவமனை அமைந்துள்ள பகுதியிலும் கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாக வெளியான தகவலும் மக்கள் மத்தியில் குழப்பத்தை அதிகரிக்கச் செய்தது.

இந்நிலையில் இவை இரண்டுமே வெறும் வதந்திகள் என மலேசிய சுகாதார அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. கொரோனா கிருமித் தொற்று குறித்து வதந்தி பரப்பிய, தவறான தகவல்களை வெளியிட்ட ஊடகவியலாளர் உட்பட பலர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது. கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் பொறுப்பற்ற வகையில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை பாயும் என மலேசிய அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: