வெனிசுவேலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோ: "6 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்" மற்றும் பிற செய்திகள்

அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த நாட்டின் அதிபர்: "ஆறு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்"

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த நாட்டின் அதிபர்

அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் வெனிசுவேலா நாட்டின் மறைந்த அதிபர் ஹியூகோ சாவேஸ். அவரது மறைவுக்குப் பிறகு அதிபரானார் நிக்கோலஸ் மதுரோ. அவர் அதிபர் பொறுப்பை ஏற்றபின் ஏராளமான சர்ச்சைகள் எழுந்தன.

அனைத்தையும் சமாளித்து அதிபராக தொடரும் மதுரோ பெண்கள் சுகாதார திட்டத்தை ஊக்குவிப்பதற்காகத் தொலைக்காட்சியில் தோன்றினார். அப்போது நாட்டின் நலனுக்காக வெனிசுவேலாவின் ஒவ்வொரு பெண்களும் ஆறு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.

பட மூலாதாரம், Getty Images

அந்நாட்டின் குழந்தைகளில் 13 சதவீதம் பேர் 2013 - 2018 ஆகிய காலகட்டங்களில் ஊட்டச்சத்து குறைபாட்டால் தவித்ததாகக் கூறுகிறது ஐ.நா. மதுரோவின் இந்த கூற்றை எதிர்க்கட்சிகள் கடுமையாக வலியுறுத்தி உள்ளனர்.

நாட்டின் பலர் ஊட்டச்சத்து குறைபாட்டால் தவிக்கும் போது உளவியல் சிக்கல் உள்ளவர்களால்தான் இப்படி கூற முடியும் என்கின்றனர் எதிர்க்கட்சிகள்.

பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கம் எழுப்புவது தேசத் துரோகமா?

பட மூலாதாரம், Getty Images

பிப்ரவரி 20 அன்று, பெங்களூரில் சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராக 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று முழங்கினார் 19 வயதான மாணவி அமுல்யா லியோனா. மேடையில் பேசிக் கொண்டிருந்த அமுல்யா, தனது பேச்சை முடிக்கக்கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை, மேடையில் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டார். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124 A-ன் கீழ் தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தற்போது காவலில் உள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் சமூக வலைத் தளங்கள் மீது விதிக்கப்பட்ட தடை அகற்றம்

பட மூலாதாரம், Getty Images

ஜம்மு மற்றும் காஷ்மீரில் சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை இன்று விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இணையத்தின் வேகம் 2ஜி அளவிலேயே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புரிமை மத்திய அரசால் அகற்றப்பட்டது முதல் அங்கு சுமார் 6 மாதங்களுக்கு இணையம் துண்டிக்கப்பட்டிருந்தது.

ஜிப்ஸி - சினிமா விமர்சனம்

பட மூலாதாரம், Gypsy

குக்கூ, ஜோக்கர் திரைப்படங்களுக்குப் பிறகு ராஜு முருகன் இயக்கியிருக்கும் மூன்றாவது படம். படத்தின் சில காட்சிகளுக்கு தணிக்கை வாரியம் எதிர்ப்பு தெரிவித்த செய்தி வெளியானதையடுத்து, பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் படமும்கூட. காஷ்மீரில் பிறந்து, பெற்றோர் துப்பாக்கிச் சூட்டில் இறந்துவிட, குதிரையை வைத்து வேடிக்கைகாட்டும் ஒருவரால் வளர்க்கப்படுகிறான் ஜிப்ஸி (ஜீவா).

ஊர் ஊராகப் பயணம் செய்யும் ஜிப்ஸி ஒரு முறை நாகூருக்கு வரும்போது, அங்குள்ள இஸ்லாமியப் பெண் (நடாஷா சிங்) அவனைக் காதலிக்கிறாள். இவரும் வட மாநிலம் ஒன்றுக்குச் சென்று திருமணம் செய்துகொள்கிறார்கள்.

அவர்களுக்கு குழந்தை பிறக்கும் தருணத்தில் கலவரம் வெடிக்க, அதில் சிக்கி திசைக்கு ஒருவராகப் பிரிகிறார்கள். பிரிந்தவர்கள் சேர்ந்தார்களா என்பது மீதிக் கதை.

விரிவாகப் படிக்க:ஜிப்ஸி - சினிமா விமர்சனம்

கொரோனா வைரஸ் இந்தியாவில் 28 பேருக்கு தொற்றியது

பட மூலாதாரம், Getty Images

சீனாவை மட்டும் ஆட்டிப் படைத்து வந்த கொரோனா வைரஸ் தற்போது உலகில் 78 நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனா, தென் கொரியா, இரான், சிங்கப்பூர் போன்ற நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், ஒப்பீட்டளவில் இந்தியா பெரிய பிரச்சனை இல்லாமல் இதுவரை தப்பித்துவந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: