கொரோனா வைரஸ்: கைகுலுக்கும் பழக்கம் எங்கிருந்து வந்தது?

கைகுலுக்கும் பழக்கம்

பட மூலாதாரம், iStock

கொரோனா வைரஸ் பரவல் குறித்த செய்திகள் வெளிவரத் தொடங்கியதிலிருந்து, ஒருவருக்கொருவர் கைகுலுக்காமல், வேறு எந்தெந்த வழிகளில் வரவேற்கவும், வணக்கம் சொல்லவும் முடியும் என பலரும் பேசி வருகிறார்கள்.

கைகுலுக்கும்போது, கிருமிகள் ஒருவரிடமிருந்து, மற்றொருவருக்கு பரவ வாய்ப்புள்ளதால் வேறு வழிகளை கையாளுமாறு மருத்துவ நிபுணர்களும் கூறுகிறார்கள்.

சீனாவில் கைகளை குலுக்க வேண்டாம் என்று எல்லா இடங்களிலும், விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. பிரான்ஸில், அதற்கு உள்ள மாற்று வழிகள் குறித்த விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஜெர்மனி, போலாந்து என பல உலக நாடுகளிலும் இதே கதைதான். இந்த மாதம், இலங்கைக்கு செல்லும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் கைகுலுக்க மாட்டோம் என்று ஏற்கனவே தெரிவித்து விட்டார்கள். அதற்கு பதிலாக, முஷ்டிகளை மோதி FIST BUMP செய்து ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவிப்போம் என தெரிவித்துள்ளார்கள்.

சரி.. மக்களை இப்படி யோசிக்க வைக்கும், இந்த கைகுலுக்கும் பழக்கத்தின் கதைதான் என்ன? வாருங்கள் பார்ப்போம்…

பட மூலாதாரம், iStock

எதிரிகள் மீதான சந்தேகம்

5ஆம் நூற்றாண்டிலிருந்து கைகுலுக்கும் பழக்கம் இருப்பதாக பல வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. அந்த நூற்றாண்டில் வாழ்ந்த இருவர் கைகுலுக்கிக் கொள்ளும் வகையிலான சிலைகளையும், படங்களையும் இப்போதும் பார்க்க முடிகிறது. இது பண்டைய கால வழக்கம் என்றாலும், இதில் ஒரு காரணம் இருக்கிறது.

அந்த காலத்தில், மன்னர்களும், படை வீரர்கள் தங்களின் இடதுபக்க இடுப்பில், போர்வாள்களை வைத்திருப்பார்கள். அவர்களுக்கு தேவை ஏற்படும்போது, வலது கையால் அதை வெளியே எடுப்பார்கள்.

இருவர் சந்தித்துக்கொள்ளும் சூழலில், ஒருவருக்கு ஒருவர் வலது கைகளால், கைகுலுக்கும்போது, தங்கள் கைகளில் எந்த ஆயுதம் இல்லை என்றும், தங்களுக்குள் எந்த பகை உணர்வும் இல்லை என்றும், இடுப்பிலுள்ள வாளை எடுக்க வேண்டிய தேவை இல்லை என்பதையும் இது குறிக்கும்.

கைகுலுக்குதல் என்பது, இருவருக்கு இடையிலான நட்பு மற்றும் நம்பிக்கையை குறிப்பதாக விளங்கியது என்றும் வரலாறு கூறுகிறது.

ரோமானிய மக்கள், மற்றவர்களை வரவேற்கும்போது, அவர்களின் முழங்கைகள் வரை பிடித்து வணக்கம் செலுத்தும் முறை இருந்துள்ளது. இதன் மூலம், எதிரிலுள்ளவர் முழுக்கை ஆடைக்குள் எந்த ஆயுதத்தையும் மறைத்து வைக்கவில்லை என்பதை அவர்களால் தெரிந்துகொள்ள முடிந்தது.

கைகளை குலுக்கும்போது, அவை மேலும் கீழுமாக சென்று வருகின்றன. இதன்மூலம், எந்த ஆயுதம் மறைத்து வைக்கப்பட்டிருந்தாலும், கீழே விழுந்துவிடும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது. இதுவே, காலப்போக்கில், ஒருவரை ஒருவர் வரவேற்கும் முறையாக மாறியுள்ளது.

அரசியல், விளையாட்டு, வணிகம் உள்ளிட்ட சூழல்களில் கைகுலுக்க மறுத்தல் என்பது, சில நேரங்களில் அநாகரிகமாக பார்க்கப்படும் நிலையும் இருக்கவே செய்கிறது.

பட மூலாதாரம், Getty Images

உலகம் முழுவதும் இப்படித்தானா?

உலகம் முழுவதும் கைகுலுக்கும் பழக்கம் இருந்தாலும், பல நாடுகள் வேறு முறைகளையும் பயன்படுத்துகின்றன. இந்தியாவில் இரு கைகளையும் கூப்பி 'வணக்கம்' சொல்லும் முறை உள்ளது. அதே முறை தாய்லாந்திலும் உள்ளது.

பிரான்ஸ், மொராக்கோ உள்ளிட்ட நாடுகளில், கைகுலுக்குவதற்கு பதிலாக கன்னங்களில் முத்தமிட்டுக்கொள்ளும் பழக்கம் உள்ளது. கைகுலுக்கும் பழக்கம் இருக்கும் நாடுகளில் சில மாற்றங்கள் இருக்கின்றன. ரஷ்யா மற்றும் அரபு நாடுகளில் உள்ள பெண்கள் கைகுலுக்குவது இல்லை. நார்வே, அமெரிக்கா போன்ற நாடுகளில் கைகுலுக்குதல் முக்கிய பழக்கமாக உள்ளது.

பிரிட்டனில் உள்ள அபெர்ஸ்டிவித் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உலகிலேயே மிகவும் சுகாதாரமற்ற ஒரு முறை கைகுலுக்குதல் என்று கூறுகின்றனர். கைகுலுக்குவதன் மூலமாக, ஒருவரின் கைகளில் இருக்கும் கிருமி மற்றொருவரின் கைகளுக்குப் பரவ 90% வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவிக்கிறனர்.

ஆக, இதுவே கைகுலுக்குதலின் வரலாறு.

அனைவருக்கும் வணக்கம்!

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: