கொரோனா வைரஸ்: இத்தாலியில் தனிமைப்படுத்தப்பட்ட 1.6 கோடி மக்கள் - மீறினால் சிறை

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

சீனாவை தாண்டி உலக நாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸின் பாதிப்பின் உச்சமாக வடக்கு இத்தாலியில் 1.6 கோடி மக்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இத்தாலியின் லோம்பார்டி பிராந்தியத்தில் மட்டுமின்றி அந்நாட்டின் 14 மாகாணங்களில் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் ஏப்ரல் மாதத்தின் தொடக்கம் வரை நீடிக்கும் என்று கருதப்படுகிறது.

இத்தாலி எடுத்துள்ள தடுப்பு நடவடிக்கைகள் என்ன?

கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் மற்றொரு பகுதியாக இத்தாலி முழுவதும் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் கேளிக்கை சேவைகள் ஒட்டுமொத்தமாக மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பட மூலாதாரம், Getty Images

ஐரோப்பிய கண்டத்திலேயே கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக விளங்கும் இத்தாலியில் இதுவரை இந்த நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கோவிட்-19 தொற்றால் நேற்று மட்டும் புதிதாக 1,200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த எண்ணிக்கை 5,883 ஆக உயர்ந்துள்ளது.

10 மில்லியன் மக்கள் வசிக்கும் லோம்பார்டி பிராந்தியத்தில் இத்தாலியின் நிதி மையமான மிலன் உள்ளிட்ட நகரங்களும் அடக்கம். இந்த பிராந்தியத்தோடு, மேலும் வெனிஸ், பர்மா மற்றும் மொடெனா உள்ளிட்ட 14 மாகாணங்களும் தனிமைப்படுத்தப்படுவதன் மூலம் மொத்தம் 16 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டின் பிரதமர் கியூசெப் கோண்டே தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இத்தாலியில் உள்ள உணவகங்கள் மற்றும் தேனீர் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி விட்டு அமர வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, இத்தாலியில் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு மற்றும் பொழுபோக்கு நிகழ்ச்சிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மற்ற நாடுகளின் நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images

  • கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட சீனாவில் இதுவரை அந்நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,097ஆக உயர்ந்துள்ளது.
  • சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட 80,695 பேரில் 57,065 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சீன சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • சீனாவின் குவான்சோ நகரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த விடுதி ஒன்று முற்றிலும் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 70க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • இந்த விபத்திற்கான காரணம் குறித்தும், இதுவரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள் என்பது குறித்தும் இன்னும் தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை.

பட மூலாதாரம், Getty Images

  • இரானில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145ஆக அதிகரித்துள்ளது. மேலும், இரானில் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 6,000 கடந்ததன் மூலம், உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • அமெரிக்காவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது. நியூயார்க் நகரத்தில் கொரோனா வைரஸ் பரவலின் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில், அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.
  • 3,533 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் 21 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
  • கொலம்பியா, பல்கேரியா, கோஸ்டாரிகா, மால்டா, மாலத்தீவு மற்றும் பராகுவே ஆகியவை தங்களது நாட்டில் முதல் முறையாக கொரோனா பாதிப்பை உறுதிசெய்துள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :