கொரோனா மரணங்கள், பிரதமரை கொல்ல குண்டு வெடிப்பு,வீழும் எண்ணெய் விலை - என்ன நடக்கிறது சர்வதேச அளவில்?

வீழும் எண்ணெய் விலை, கொத்து கொத்தான மரணங்கள் - என்ன நடக்கிறது சர்வதேச அளவில்?

பட மூலாதாரம், Getty Images

கோவிட் 19 வைரஸ்

இத்தாலியில் தீவிரமாகி வரும் கோவிட் 19 வைரஸ் பரவலை, இருள் சூழ்ந்த தருணம் என்று அந்நாட்டு பிரதமர் வர்ணித்துள்ளார்.

இருப்பினும், விதிகளை பின்பற்றினால் இந்த நிலையை எதிர்கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, வைரஸ் பாதிப்பு நிறைந்த பெர்காமோவில் உள்ள மருத்துவமனையில் நிலைமை மோசமாக இருப்பதாக அங்குள்ள அறுவை சிகிச்சை மருத்துவர் ஸ்டெஃபானோ மக்னோன் தெரிவித்தார்.

இத்தாலியில் இன்றைய நிலவரப்படி கோவிட் 19 வைரஸால் மொத்தம் முன்னூற்று அறுபத்து ஆறு பேரும், இரானில் மொத்தம் இருநூற்று முப்பத்து ஏழு பேரும் உயிரிழந்துள்ளார்கள்.

எண்ணெய் வீழ்ச்சி

பட மூலாதாரம், Getty Images

எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க செளதி அரேபியா தீர்மானித்துள்ள நிலையில், எண்ணெய் விலை சர்வதேச அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

கோவிட்-19 வைரஸ் பரவலால் ஏற்கெனவே ஐரோப்பிய நாடுகளில் உள்ள பங்குச்சந்தைகள் சுமார் எட்டு சதவீதம் வீழ்ச்சி அடைந்தன.

ஆசிய பங்குச்சந்தைகளிலும் அதன் தாக்கம் எதிரொலித்தது. இதற்கிடையே, சர்வதேச அளவில் எண்ணெய்க்கான பற்றாக்குறை மேலும் அதிகமாகலாம் என சர்வதேச எரிசக்தி முகமை கணித்துள்ளது.

ஆனால், ஒபெக் மற்றும் ரஷ்யா இடையே நடந்த எண்ணெய் உற்பத்தி குறைப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால், சந்தைக்கு மேலதிக எண்ணெய் வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விசாரணை தொடக்கம்

பட மூலாதாரம், Getty Images

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, இருநூற்று தொண்ணூற்று எட்டு பேர் பலியான எம்ஹெச் 17 மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், யுக்ரேனில் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் மூன்று ரஷ்யர்கள், ஒரு யுக்ரேனியருக்கு எதிரான விசாரணை, நெதர்லாந்து நீதிமன்றத்தில் இன்று தொடங்கியுள்ளது.

ரஷ்ய ஆதரவு யுக்ரேனிய பிராந்தியத்தில் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

குற்றம்சாட்டப்பட்ட மூவரும் நீதிமன்றத்துக்கு வராத நிலையில், நான்காவது நபர் சார்பில் அவரது வழக்கறிஞர் மட்டும் விசாரணைக்கு ஆஜரானார்.

சந்தேக நபர்களின்றி இந்த வழக்கு விசாரணை நடைபெறும் என்று ஆம்ஸ்டெர்டாம் பல்கலைக்கழக பேராசிரியரும் விசாரணையை தொடங்கி வைப்பவருமான மேரியெக் டி ஹூன் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த வழக்கில் ரஷ்யாவுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்பட்டாலும் அதை அந்நாடு தொடர்ந்து மறுத்து வருகிறது.

விடுவிக்கப்படும் கைதிகள் எப்போது சிறைச்சாலைகளுக்கு திரும்புவார்கள்?

பட மூலாதாரம், Getty Images

கோவிட்-19 வைரஸ் பரவலுக்கு இரானில் புதிதாக நாற்பத்து ஒன்பது பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில், பல்வேறு சிறைகளில் உள்ள சுமார் எழுபதாயிரம் கைதிகளை விடுவிப்பதாக இரானிய நீதித்துறை தலைமை நிர்வாகி எப்ராஹிம் ராய்ஸி தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு வெளியே வைரஸ் பாதிப்பு அதிகம் நிறைந்த நாடுகளில் இத்தாலியும், இரானும் உள்ளன.

இந்த நிலையில், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்காத கைதிகள் அடையாளம் காணப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நீதித்துறை தொடர்புடைய செய்திகளை வெளியிடும் வலைதளம் கூறுகிறது.

விடுவிக்கப்படும் கைதிகள் எப்போது சிறைச்சாலைகளுக்கு திரும்புவார்கள் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

ஃபேஸ்புக் நிறுவனம்

பட மூலாதாரம், Getty Images

முப்பதாயிரத்துக்கும் அதிகமானோரின் தரவுகளை அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா அணுகிய சர்ச்சைக்குரிய விவகாரத்தில், ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அங்குள்ள அந்தரங்க உரிமைகள் மீறப்படும் விவகாரங்களை கண்காணிக்கும் தகவல் ஆணையத்தின் ஆணையர், திஸ் இஸ் யுவர் டிஜிட்டல் லைஃப் என்ற செயலியை நடத்தும் நிறுவனத்திடம் அந்தரங்க தகவல்களை பகிர்ந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அமைப்பின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் கூறினாலும், அதன் விவரங்களை மேற்கொண்டு வெளியிட மறுத்துள்ளது.

அடுத்தடுத்த குண்டுவெடிப்புகள்

பட மூலாதாரம், Getty Images

ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரஃப் கானி, இரண்டாவது முறையாக நாட்டின் அதிபராக பதவியேற்கும் நிகழ்வுக்கு அருகே அடுத்தடுத்து இரண்டு வெடிச்சத்தங்கள் கேட்டன.

அங்கு கடந்த செப்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றது என்பதில் குழப்பம் நீடித்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில், அதிபர் அஷ்ரஃப் கானி, அதிபர் மாளிகையிலும், முன்னாள் தலைமை நிர்வாகி அப்துல்லா அப்துல்லா வேறொரு இடத்திலும் பதவியேற்பு நிகழ்வை நடத்திக் கொண்டனர்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சமீபத்தில் சண்டை நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில், ஆளுகை தொடர்பாக அஷ்ரஃப் கானிக்கும் அவரது போட்டியாளரான அப்துல்லா அப்துல்லாவுக்கும் இடையே நடக்கும் அதிகார போட்டி, அங்கு சமாதான நடவடிக்கையை மோசமாக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: