கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? கோவிட்-19 தொற்று உள்ளதா என கண்டுபிடிப்பது எப்படி?

கொரோனா வைரஸ்

சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதனால் உண்டாகும் மரணங்கள் அதிகரிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. கோவிட் மரணங்களால் சீனாவின் சில பகுதிகளில் மாயனங்கள் நிரம்பி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால், இந்தியா மற்றும் பிற உலக நாடுகளில் கொரோனாவில் மீண்டும் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் மீண்டும் எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் என்றால் என்ன? கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்னென்ன? இந்த வைரஸ் எப்படி ஒருவருக்கு பரவுகிறது? இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியுமா? போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த கட்டுரை.

கொரோனா வைரஸின் ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, ஒமிக்ரான் என பல வகையான திரிபுகள் உலகின் பல்வேறு நாடுகளில் பரவின.

முந்தைய வகை கொரோனா வைரசில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளால் உண்டாகும்போது புதிய வகை கொரோனா வைரஸ் ஒரு 'திரிபு' (variant) என்று அழைக்கப்படும். உலகம் முழுவதும் பல்வேறு திரிபுகள் இதுவரை வந்திருக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன?

  • புதிதாக, தொடர்ச்சியான இருமல். ஒரு மணி நேரத்துக்கும் மேல் அந்த இருமல் தொடரும் அல்லது 24 மணி நேரத்துக்குள் மூன்று அல்லது நான்கு முறை தொடர் இருமல் வரும்.
  • காய்ச்சல். உங்கள் உடல் வெப்பம் 37.8 டிகிரி செல்ஸியசைவிட அதிகமாகும்.
  • வாசனை அல்லது சுவையை உணர முடியாமல் போகலாம்.

சிலருக்கு தீவிரமான சளி உண்டானதைப் போல அறிகுறிகள் தென்படலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

தலைவலி, தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை எரிச்சல், மற்றும் மூக்கு ஒழுகல் ஆகியவை இதற்கான அறிகுறிகள்.

ஒமிக்ரான் திரிபின் அறிகுறிகள் என்ன?

ஸோ கோவிட் (Zoe Covid) எனும் செயலி மூலம் தங்களுக்கு ஏற்பட்ட கொரோனா அறிகுறிகளை பதிவிடுமாறு ஆய்வாளர்கள் தெரிவித்தார்கள்.

தடுப்பூசி

பட மூலாதாரம், Reuters

இதற்கு முன்பு மிகவும் பரவலான பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா திரிபு மற்றும் தற்பொழுது உலக நாடுகளில் பரவி வரும் ஒமிக்ரான் திரிபு ஆகியவற்றுடன் அவர்களது அறிகுறிகளுக்கு உள்ள தொடர்பை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர்.

அப்பொழுது கீழ்காணும் 5 அறிகுறிகளும் ஐந்தும் அதிகமாக தென்படுபவையாக இருந்தன. அவை

  • மூக்கு ஒழுகல்
  • தலைவலி
  • லேசான அல்லது தீவிரமான உடற்சோர்வு
  • தும்மல்
  • தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை எரிச்சல்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் நபர்களில் குறைந்தது 85% பேருக்கு மேற்கண்ட மூன்று அறிகுறிகளில் ஒன்று தென்படும் என்று இங்கிலாந்து பொது சுகாதாரத் துறை தெரிவிக்கிறது.

உங்களுக்கு உங்கள் அருகில் இருக்கும் ஒருவருக்கோ இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், வீட்டிலேயே இருப்பது, கொரோனா வைரஸ் தொற்று பிறருக்கு வராமல் தடுக்க உதவும்.

இந்த கோவிட்-19 முதன்முதலில் காய்ச்சலாக தொடங்கும். பின் வறட்டு இருமல் அதன்பின் ஒரு வாரம் கழித்து சுவாசக் கோளாறுகள் ஏற்படும். ஆனால் இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தமில்லை. இந்த அறிகுறிகள் பிற பொதுவான வைரஸாலும் ஏற்படக்கூடியவை.

கொரோனா வைரஸ்: சர்வதேச நிலை என்ன? மரணங்கள் எவ்வளவு? - எளிய விளக்கம்

கோவிட்-19 அறிகுறிகள் தென்படி, ஒருவரின் உடலில் தொற்று உண்டான நேரத்தில் இருந்து சராசரியாக ஐந்து நாட்கள் ஆகும். எனினும் 14 நாட்கள் வரை கூட ஆகலாம் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

அமெரிக்க அரசு கூறும் 10 கொரோனா அறிகுறிகள்

பின்வரும் அறிகுறிகள் உள்ளவர்கள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அமெரிக்க அரசின் வழிகாட்டுதல் கூறுகிறது.

  • குளிர் - காய்ச்சல்
  • சளி
  • குறைவாக மூச்சு வாங்குதல் அல்லது மூச்சு விடுவதில் சிரமம்
  • உடல் சோர்வு
  • தசை அல்லது உடல் வலி
  • தலைவலி புதிதாக சுவை அல்லது முகர் திறனை இழத்தல்
  • தொண்டை எரிச்சல் அல்லது தொண்டை கரகரப்பு
  • மூக்கடைப்பு அல்லது மூக்கு ஒழுகல்
  • குமட்டல் அல்லது வாந்தி வருவது போன்ற உணர்வு
  • வயிற்றுப்போக்கு

எல்லோருக்கும் அறிகுறிகள் ஒன்று போல இருக்குமா?

இல்லை. அறிகுறிகள் ஒருவருக்கொருவர் மாறுபடும். இதற்கு காரணம் வெவ்வேறு நபர்களின் உடல்களில் வெவ்வேறு பாகங்களை கொரோனா வைரஸ் தாக்கும் என்பதுதான்.

காய்ச்சல் இல்லாத இன்ஃபுளுவென்சா: தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், தசை வலி, சளி, தொண்டை எரிச்சல், நெஞ்சு வலி.

காய்ச்சலுடன் கூடிய இல்லாத இன்ஃபுளுவென்சா: தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், தசை வலி, சளி, தொண்டை எரிச்சல், பசியின்மை, தொண்டை அடைப்பு அல்லது பேச்சு தடைபடுவது போன்ற உணர்வு.

ஜீரண மண்டலத்தில் அறிகுறிகள்: தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், காய்ச்சல், சளி, தொண்டை எரிச்சல், பசியின்மை, நெஞ்சு வலி, வயிற்று போக்கு.

உடல் சோர்வு (முதல் நிலை தீவிரத் தன்மை): தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், காய்ச்சல், சளி, தொண்டை எரிச்சல், பசியின்மை, நெஞ்சு வலி, வயிற்று போக்கு, தசை வலி, தொண்டை அடைப்பு அல்லது பேச்சு தடைபடுவது போன்ற உணர்வு, உடல் சோர்வு.

குழப்பநிலை (இரண்டாம் நிலை தீவிரத் தன்மை): தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், காய்ச்சல், சளி, தொண்டை எரிச்சல், நெஞ்சு வலி, வயிற்று போக்கு, தசை வலி, தொண்டை அடைப்பு அல்லது பேச்சு தடைபடுவது போன்ற உணர்வு, உடல் சோர்வு, தெளிவாக சிந்திக்க இயலாமல் போகும் மனநிலை.

வயிறு மற்றும் சுவாசக் கோளாறு (அதீத தீவிரத் தன்மை): தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், காய்ச்சல், சளி, தொண்டை எரிச்சல், பசியின்மை, நெஞ்சு வலி, வயிற்று வலி, வயிற்று போக்கு, தசை வலி, தொண்டை அடைப்பு அல்லது பேச்சு தடைபடுவது போன்ற உணர்வு, உடல் சோர்வு, மூச்சு விடுவதில் சிரமம்.

இந்த கோவிட் 19 தீவிரமாக இருந்தால், நிமோனியா, சிறுநீரக பழுது, தீவிர சுவாசப் பிரச்சனை, தீவிர நிலையில் உயிரிழப்பும் ஏற்படலாம். பொதுவாக இந்த அறிகுறிகள் சராசரியாக ஐந்து நாட்களில் தெரியலாம என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் சிலருக்கு அதைக்காட்டிலும் தாமதம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

சிலருக்கு உடல் நலக்குறைவு இருப்பது தென் படுவதற்கு முன்னரே அவர் தொற்றை பரவலாம் என்றும் கூறப்படுகிறது.

டெல்டா திரிபின் அறிகுறிகள் என்ன?

டெல்டா திரிபு முதன் முதலாக அக்டோபர் 2020இல் இந்தியாவில் கண்டறியப்பட்டது. இந்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் இந்தியாவில் உண்டான கொரோனா இரண்டாம் அலைக்கு எளிதில் பரவும் தன்மை உள்ள இந்தத் திரிபும் ஒரு காரணம் என்று கருதப்படுகிறது.

தலை சுற்றல், வறண்ட தொண்டை, தொடர் சளி போன்ற அறிகுறிகள் கொரோனா டெல்டா வகை திரிபு பாதிப்பை எதிர்கொள்பவர்களிடம் பொதுவாக காணப்படுகின்றன என்று பிரிட்டனில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஆராய்ச்சிப் பணிகளுக்கு உதவுவதற்காக நடத்தப்படும் ஸோ கோவிட் ஆய்வு எனப்படும் லாபநோக்கமற்ற செயலியை நிறுவியுள்ள பேராசிரியர் டிம் ஸ்பெக்டர், இளம் வயதினருக்கு மோசமாக சளி இருந்தால் அதை டெல்டா திரிபு ஆக உணரலாம் என்று கூறியுள்ளார்.

அதே சமயம் பாதிக்கப்பட்ட நபர், தமது உடல்நிலை மோசமடைவதை உணராமல் போனாலும், அது அவரது நிலையை மோசமாக்கி ஆபத்தான நிலைக்கு தள்ளி விடும் என்று அவர் கூறுகிறார்.

எனவே, தங்களுக்கு கொரோனா இருக்குமா என எவருக்கேனும் சந்தேகம் எழுந்தால், உடனடியாக அவர் பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது பேராசிரியர் டிம் தரும் அறிவுரை.

உலக சுகாதார நிறுவனம் கூறும் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள்

coronavirus sympoms corona tamil nadu news
படக்குறிப்பு,

இங்கே உள்ள அறிகுறிகள் அல்லாமல் சிலநேரம் வயிற்றுப்போக்கு உண்டாவதும் (குறிப்பாக குழந்தைகளுக்கு) ஒரு கொரோனா அறிகுறியாகும்.

குழந்தைகளுக்கு கொரோனா வந்தால் என்ன அறிகுறி?

வாந்தி, வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பகுதியில் தசை பிடிப்பு ஆகியவை குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று வந்ததற்கான அறிகுறி என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இருமல் வந்தால் கோவிட்-19 அறிகுறியா?

பல வைரஸ் தொற்றுகளுக்கும் கோவிட்-19 தொற்று போன்றே அறிகுறிகள் இருக்கும். குறிப்பாக இந்த அறிகுறிகள் குளிர் காலத்தில் பரவலாக இருக்கும்.

கொரோனா வைரஸ் தொற்றின் மூன்று முக்கிய அறிகுறிகளில் ஏதாவது ஒன்று இருக்கும், பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 இருப்பதற்கான வாய்ப்பு இருக்கும். அவர்கள் வேறு வைரஸ் தொற்றுகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

ஆனாலும், பரிசோதனை செய்து அதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.

எப்போது மருத்துவமனைக்கு செல்லவேண்டும்?

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள், போதிய ஒய்வு மற்றும் பாராசெட்டமால் போன்ற வலி நிவாரணிகளை எடுத்துக் கொண்டாலே குணமாகிவிடுவர்.

ஆனால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வதற்கு முக்கிய காரணம் சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படுவதால்தான்.

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?

பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரலை பரிசோதிக்கும் மருத்துவர்கள், அது அந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து, பிராணவாயு சிகிச்சை அல்லது வெண்டிலேட்டர் சிகிச்சை எடுத்துக்கொள்ள பரிந்துரைப்பார்.

தீவிர சிகிச்சை பிரிவில் என்ன நடக்கும்?

மிகவும் கடுமையாக உடல்நலன் பாதிக்கப்படுபவர்கள் அனுமதிக்கப்படும் மருத்துவமனை பிரிவே தீவிர சிகிச்சை பிரிவு.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிராணவாயு சிகிச்சை அளிக்கப்படும்.

மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செலுத்தப்படும் பிராணவாயுவின் அளவு மற்றவர்களுக்கு வழங்கப்படுவதில் இருந்து முற்றிலும் மாறுபடும்.

கடுமையான பாதிப்பை சந்திந்தவர்களுக்கு வென்டிலேட்டர்கள் மூலம் அவர்களின் சுவாசப் பிரச்னை சரிசெய்ய துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?

கொரோனா அறிகுறி தெரிந்தால் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பயணம் செய்திருந்தாலோ அல்லது பயணம் செய்தவருடன் தொடர்பில் இருந்தாலோ, விட்டிலேயே இருங்கள். குறிப்பாக உங்களுக்கு லேசாக ஏதேனும் அறிகுறி இருந்தாலோ அது சரியாகும் வரை பிறருடன் தொடர்பில் இருப்பதை தவிர்த்து விடுங்கள். மாஸ்க் (முகக்கவசம்) அணிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் மருத்துவரிடம் சென்றாலும் அது முழுமையாக உறுதிப்படுத்தப்படுமா என்பது தெரியவில்லை. ஏனென்றால் வைரஸ் தொற்று ஏற்பட்டு அது அறிகுறிகள் காட்டுவதற்கு 14 நாட்கள் எடுத்துக் கொள்ளும்.

உங்கள் மாநில கொரோனா உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். அதன் பின் சுகாதார அதிகாரிகள் உங்களின் மாதிரிகளை சேகரிப்பர். இந்தியாவில் தற்போது 15 சோதனை ஆய்வகங்கள் உள்ளன. உங்களுக்கு தொற்று இருப்பது தெரிந்தால் நீங்கள் தனிமை வார்டில் சிகிச்சை பெறுவீர்கள்.

ஒருவரின் உடல் வெப்ப நிலையை தெரிந்துகொள்ள எந்த பகுதிகளில் தெர்மாமீட்டர் வைத்து சோதிக்கலாம்?

how to take temperature

கொரோனாவிலிருந்து நான் என்னை தற்காத்து கொள்வது எப்படி?

உங்கள் கைகளை குறைந்தது 20 நொடிகள் கழுவ வேண்டும். உங்கள் கைகளின் அனைத்து பாகங்களுக்கும் கவனம் கொடுங்கள். சோப்பு மற்றும் நீரைக் கொண்டு நன்றாக கழுவுங்கள். உங்கள் கண்கள், மூக்குகள், மற்றும் வாயை தொடுவதை தவிருங்கள் எனவே அந்த வழியில்தான் வைரஸ் உங்கள் உடம்பில் பரவும்.

நீங்கள் இருமினாலோ அல்லது தும்மினாலோ டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்துங்கள். அதை மறக்காமல் குப்பையில் போட்டு கை கழுவுங்கள். கைக்குட்டைகளை காட்டிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் டிஷ்யூக்களை பயன்படுத்துங்கள்.

டிஷ்யூ பேப்பர் இல்லை என்றால் உங்கள் முழங்கை மூட்டை பயன்படுத்தி இருமுங்கள். கைப்பிடிகள், லிஃப்ட் பொத்தான்கள், போன்ற அதிகம் பேர் தொடும் பொத்தான்களை தொடுவதை தவிருங்கள். காய்ச்சல், இருமல், சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் இருப்பவர்களிடமிருந்து தள்ளி இருங்கள். உங்களுக்கு காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்சனைகள் இருந்தால் எங்கும் போகாமல் வீட்டிலேயே இருங்கள்.

கொரோனா வைரஸ்

கோவிட்-19 என்றால் என்ன?

கொரோனா வைரஸ்கள் ஒரு பெரிய குடும்பத்தை சேர்ந்தவை. அது மனிதர்கள் மற்றும் விலங்குகள் மத்தியில் பல நோய்களை உருவாக்கும். மனிதர்களில் இந்த கொரோனா வைரஸ் சளி முதல் சார்ஸ் வரையில் உண்டாக்கக்கூடியவை.

தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த தொற்றுக்கு கோவிட்-19 என பெயரிட்டுள்ளனர். இந்த தொற்று சமீபமாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படுகிறது. இது விஞ்ஞானிகளால், சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் கொரோனா வைரஸ் 2 அல்லது Sars-CoV-2 என்று பெயரிடப்பட்டுள்ளது.

coronavirus symptoms bbcnews

கொரோனா ஏற்பட்டால் இறப்பு நிச்சயமா?

கொரோனா தொற்று குறித்த அச்சம் பரவலாக இருந்தாலும், இதனால் இறப்பு ஏற்படும் விகிதம் மிகவும் குறைவே. ஒரு சதவீதத்திலிருந்து 2 சதவீதம் வரையே இறப்பு விகிதம் என கூறப்படுகிறது. ஆனால் அதை உறுதியாக கூற முடியவில்லை.

தொற்று ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டவர்களுக்கு உண்டான இறப்பு விகிதம் (Case Mortality Rate) வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறாக உள்ளது என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

இது 0.1 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை நாட்டைப் பொறுத்து வேறுபடுகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி ஒட்டுமொத்தமாக தொற்று ஏற்பட்டவர்கள் உயிரிழந்தவர்களின் விகிதம் (Infected Mortality Rate) 0.5 சதவிகிதம் முதல் 1 சதவீதமாக உள்ளது.

கோவிட்-19 தொற்றின் காரணமாக நிகழ்ந்து உயிரிழப்புகள் என்று உறுதி செய்யப்படாவிட்டாலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இறக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இவற்றில் சில மரணங்கள் கணக்கில் காட்டப்படாத கொரோனா மரணங்களாக இருக்கலாம். அதே நேரத்தில் வேறு சில மரணங்கள் கொரோனா நெருக்கடி காரணமாக சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டதால் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காத, வேறு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பாகவும் இருக்கலாம்.

56,000 நோயாளிகளிடம் உலக சுகாதார நிறுவனம் சோதனை செய்தது; அதில் கண்டறிந்தவை:

  • 6% பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது என்றும் அவர்களுக்கு - நுரையீரல் பழுது, செப்டிக் ஷாக் (தொற்றிலிருந்து நம்மைக் காக்க நோய் எதிர்ப்பு சக்தி ரத்தத்தில் வெளியிடும் ரசாயனம் தவறாக நமக்கு ஆபத்தை உருவாக்கும் நிலை), உறுப்புகள் செயலிழப்பு மற்றும் இறப்பு ஏற்படும் ஆபத்து ஆகியவை தென்படுகிறது.
  • 14% பேருக்கு தீவிர அறிகுறிகள் காணப்படுகின்றன. - சுவாப்பதில் சிரமம் மற்றும் நுரையீரலுக்குள் சரியாக காற்று செல்லாமை
  • 80% பேருக்கு மிதமான அறிகுறிகள் - காய்ச்சல், இருமல் சிலருக்கு நிமோனியாவும் இருக்கலாம்.

வயதானவர்கள், ஆஸ்துமா, நீரிழிவு மற்றும் இதய நோய்கள் உள்ளவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படலாம்.

கொரோனாவை குணப்படுத்த முடியுமா?

தற்சமயம் கொரோனா தொற்றை குணப்படுத்தும் மருந்து இல்லை. இருப்பினும் ஆய்வாளர்கள் மருந்து கண்டுபிடித்து விலங்குகளில் சோதனை செய்து வருகின்றனர் அது சரியாக இருந்தால் பின் மனிதர்களிடத்தில் சோதனை செய்யப்படும். விஞ்ஞானிகள் மருந்து கண்டுபிடித்தாலும் அது அதிகளவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும். கோவிட் 19 வைரஸ் என்பதால் ஆண்டி பாக்டீரியல் மருந்து (பாக்டீரியாவை அழிக்கும் மருந்து)) செயல்படாது.

கொரோனாவிலிருந்து உங்களை தற்காத்து கொள்வதற்கான சிறந்த வழி நன்றாக கைகளை சுத்தம் செய்வது. சோப்பையும், தண்ணீரையும் கொண்டு உங்கள் கைகளை நன்றாக சுத்தம் செய்யுங்கள்.

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

கொரோனா எங்கிருந்து வந்தது?

இந்த SARS-COV-2 வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள விலங்குகள் சந்தையிலிருந்து, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எந்த விலங்கு என்று இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் வெளவால்கள் மூலம் பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கொரோனா தொற்று எவ்வாறு பரவுகிறது?

கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் இரும்பும்போது, அந்த வைரஸ் காற்றில் கலக்கலாம். இதை சுவாசித்தாலோ அல்லது அந்த வைரஸ் துகள்கள் பட்ட இடத்தை தொட்டு பின் கண்கள், மூக்கு அல்லது வாயை தொட்டாலோ தொற்று ஏற்படலாம்.

இரும்பும் போதோ அல்லது தும்மலின் போதோ டிஷ்யூ வைத்துக் கொள்ள வேண்டும். கைகளை கழுவாமல் முகத்தை தொடக்கூடாது. மேலும் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களிடமிருந்து தள்ளி இருத்தல் வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் மலத்திலிருந்து இந்த வைரஸ் தொற்று பரவ வாய்ப்பில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Banner image reading 'more about coronavirus'

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுபரவலை தடுப்பது எவ்வாறு?

உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸை உலகளவில் பரவும் தொற்றாக அறிவித்துள்ளது.

Pandemic என்பது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் மக்களிடையே பரவும் தொற்றாகும்.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ், வைரஸை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் நிலையின் ஆபத்தை விவரிக்கவே இந்த பதம் இப்போது பயன்படுத்தப்படுகிறது எனக் கூறியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கூறுகையில், சில நாடுகள் கட்டுப்படுத்தும் திறன் இல்லாமலும் ,வளம் இல்லாமலும், பிரச்சனைகளை தீர்க்க முடியாமலும் போராடிக் கொண்டிருக்கின்றன என்கிறார்.

எனவே உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளிடமும்,

  • உடனடி சிகிச்சை தரும் முறையை உயர்த்தவும்
  • மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றி கொள்ளும் முறை குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கவும்

கொரோனா வைரஸ் எனப்படும் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தி, சோதனைக்குள்ளாக்கி அவர்களுக்கு சிகிச்சை வழங்கவும் எடுத்துரைப்பதாக கூறியுள்ளது.

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இப்போது எந்த மருந்து உள்ளது?

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தற்போது வெவ்வேறு வகையில் உடலில் வைரஸை எதிர்த்துப் போராடும் வெவ்வேறு மருந்துகள் உள்ளன.

  • கொரோனா வைரஸ் உடலில் நுழைந்த பின்பு நோயெதிர்ப்பு மண்டலம் மிகவும் அதிகமாக செயல்பட்டு மோசமான விளைவுகளை உண்டாகாமல் இருக்க, அழற்சியைத் தவிர்க்கும் (anti-inflammatory) மருந்துகள்
  • கொரோனா வைரஸ் உடலுக்குள் பெருகாமல் இருப்பதை தவிர்க்கும் ஆன்டி-வைரஸ் (anti-virus) மருந்துகள்
  • நோயெதிர்ப்பு மண்டலம் வைரஸை தாக்கி அழிக்க நோய் எதிர்ப்பொருட்கள் (antibodies) உடலில் உற்பத்தியாக உதவி செய்யும் மருந்துகள்

ஆகியவை தற்போது உலகெங்கிலும் பரவலான பயன்பாட்டில் உள்ளன

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :