கொரோனா வைரஸ் நெருக்கடியை ஆவணப்பதிவு செய்த இத்தாலிய செவிலியர் - "தனிமையில் இறப்பது என்பது கொடுமை"

செவிலியர் போலோ கேமரா வைத்து கொண்டுள்ளார் படத்தின் காப்புரிமை PAOLO MIRANDA
Image caption இத்தாலியில் உள்ள மருத்துவமனையில் பாலோ

”எல்லோரும் எங்களை ஹீரோ என்கிறார்கள், ஆனால் எங்களுக்கு அப்படி தோன்றவில்லை “, என்கிறார் பாலோ மிரண்டா.

இத்தாலி நாட்டில் உள்ள கிரெமொனா நகரில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் செவிலியராக இருக்கிறார் பாலோ மிரண்டா. இத்தாலியை பொறுத்தவரை லம்போர்டி பகுதியில் உள்ள சிறய நகரம்தான் கொரோனா தொற்றின் மையப்பகுதியாகும். அங்கு 2,167 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 199 பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்ற செவிலியர்களைப் போல் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து 12 மணி நேரம் உழைக்கிறார் பாலோ.

”நாங்கள் அனைவரும் செவிலியர் சேவையில் இருக்கிறோம். ஆனால் நாங்களும் அவ்வப்போது சோர்வாக உணர்கிறோம். ஆனால் இப்போது ஏதோ பாதாளத்தில் இருப்பது போல் உள்ளது. எங்களுக்கும் அச்சமாக இருக்கிறது” என்கிறார் அவர்.

படத்தின் காப்புரிமை PAOLO MIRANDA
Image caption ஒரு செவிலியர் உட்கார்ந்திருக்கிறார்

புகைப்படங்கள் எடுக்க அதீத ஆர்வம் கொண்ட பாலோ, இந்த இக்கட்டான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் சூழலை புகைப்படங்கள் எடுத்து அதை ஆவணம் செய்ய அவர் முடிவெடுத்தார்.

”என்ன நடக்கிறது என்பதை நான் மறக்க விரும்பவில்லை. இது நாளைய வரலாறு. வார்த்தைகளை விட புகைப்படங்களே வலுவானதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்” எனக் கூறுகிறார் பாலோ.

இந்த புகைப்படங்களில் அவர் தன் சக ஊழியர்களின் பலத்தையும் பலவீனத்தையும் காட்ட விரும்புகிறார்.

”ஒரு நாள் என்னுடைய சக ஊழியர் ஒருவர் மருத்துவமனையின் நடை பாதையில் குதித்து கொண்டும் கத்தி கொண்டும் வந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதில் அவருக்கு நோய் தொற்று இல்லை என முடிவானதுதான் அதற்கு காரணம். பொதுவாக அவர் மிகவும் அமைதியானவர். ஆனால் மிகுந்த அச்சத்தில் இருந்த அவரால் தனக்கு கொரோனா இல்லை என்ற செய்தியை கேட்டதும் அந்த நிம்மதியை கட்டுபடுத்த முடியவில்லை. அவரும் சாதாரண மனிதர் தானே”, என்றார் பாலோ.”

படத்தின் காப்புரிமை PAOLO MIRANDA
Image caption ஒரு மருத்துவ பணியாளர் முகமூடி அணிகிறார்

இது பாலோவுக்கும் அவருடைய குழுவுக்கும் மிகவும் சோதனைக்குரிய காலம். ஆனாலும் குழுவில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு ஒரு பிணைப்போடு உள்ளார்கள்.

”சில நேரங்களில் எங்களில் சிலர் சோர்வடைவோம், வெருப்புக்குள்ளாவோம், பயனில்லாதவர்கள் போல நினைப்போம். அழுவோம். ஏனென்றால் நாங்கள் கவனித்து கொள்ளும் சில நோயாளிகளிடம் எந்த முன்னேற்றமும் இருக்காது” என்று பாலோ தெரிவிக்கிறார்.

படத்தின் காப்புரிமை PAOLO MIRANDA
Image caption செவிலியர்கள் ஒருவரை ஒருவர் ஆறுதல் படுத்துகிறார்கள்

ஆனால் அப்படி சோர்வாக இருக்கும் செவிலியரை, மற்ற செவிலியர்கள் பார்த்துக்கொள்வோம். அந்த நேரத்தில் நாங்கள் அவருக்கு ஆதரவாக இருப்போம். ஏதாவது நகைச்சுவை செய்து அவரை சிரிக்க வைப்போம். இல்லையென்றால் நாங்கள் எங்களை இழந்துவிடுவோம் என்கிறார் பாலோ.

இதுவரை இத்தாலியில் நான்கு வாரத்தில் சுமார் 3000 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

35,000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நேரத்தில் நாட்டில் உள்ள மருத்துவர்களும் செவிலியர்களும் கடினமான நிலையை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக வடக்கு பகுதியில் இருப்பவர்கள் பெரிதும் சிக்கலுக்கு ஆளாகின்றனர்.

பாலோ செவிலியர் 9 ஆண்டுகளாக இருக்கிறார். மக்கள் உயிரிழப்பதை அவர் பார்த்துள்ளார். ஆனால் இந்த நேரத்தில் இவ்வளவு மக்கள் யாருமே உடன் இல்லாமல் இறப்பது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

படத்தின் காப்புரிமை PAOLO MIRANDA
Image caption நோயாளிகளை பார்க்க சென்ற போது எடுத்த புகைப்படம்

"தீவிர சிகிச்சை பிரிவில் உயிரிழக்கும்போது பொதுவாக அந்த நோயாளியை சுற்றி அவர்களது உறவினர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு நாங்கள் ஆதரவாக ஏதாவது பேசுவோம். இது நாங்கள் வழக்கமாக செய்வதில் ஒன்று"

ஒருவர் உயிரிழக்கும் நிலையில் இருந்தால், அவரை பார்க்க உறவினர்களும் நண்பர்களும் அங்கு அனுமதிக்கப்படுவர். ஆனால் கொரோனா தொற்று பரவக் கூடாது என்பதற்காக குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களால் மருத்துவமனைக்கு கூட வர முடியாது.

"பொதுவாக அனைவரையும் விட்டு தன்னை தனிமைப்படுத்தி கொண்டவர்களுகே நாங்கள் சிகிச்சை செய்கிறோம். தனிமையில் இறப்பது என்பது மோசமான விஷயம். யாருக்கும் அது நடக்கக்கூடாது", என்கிறார் பாலோ.

படத்தின் காப்புரிமை PAOLO MIRANDA
Image caption மருத்துவமனையில் செவிலியர்கள் பேசுகின்றனர்

நிரம்பி வழியும் மருத்துவமனை

கிரெமொனா மருத்துவமனை இப்போது கொரோனா வைரஸ் மருத்துவமனையாக மாறிவிட்டது. இப்போது மற்ற சிகிச்சைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, சுமார் 600 கொரோனா தொற்று நோயாளிகளுக்கு மட்டுமே அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும் புதிய நோயாளிகள் வந்த வண்ணம் இருப்பதால், இந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

"மருத்துவமனையின் எல்லா மூலைகளிலும் தற்போது நாங்கள் படுக்கைகளை போடுகிறோம். மருத்துவமனையில் கூட்டம் அந்தளவிற்கு அதிகமாகி விட்டது" என்கிறார் பாலோ.

மருத்துவமனையின் நுழைவாயில் வெளியே தற்காலிகமாக கள மருத்துவமனை ஒன்றை கட்டுகிறார்கள். அதில் 60 படுக்கைகள் இருக்கும். ஆனால், அதுவும் போதாது.

பாலோ இதை எப்படி சமாளிக்கிறார்?

"நாட்டு மக்கள் செவிலியர்களிடம் காட்டும் அதீத அன்பே எங்களை இந்த சூழலிலும் வேலை பார்க்க வைக்கிறது" என்கிறார் பாலோ.

எங்களை ஹீரோக்களாக பார்க்கின்றனர். கிரெமோனா மருத்துவமனைக்கு பல பரிசுப் பொருட்கள் அனுப்பப்படுகின்றன.

படத்தின் காப்புரிமை PAOLO MIRANDA
Image caption மருத்துவமனையில் ஆறுதல் தெரிவிக்கும் செவிலியர்கள்

"ஒவ்வொரு நாளும் வேலைக்கு வந்தால் புதிதாக ஒன்றை கற்றுகொள்கிறோம். ",என்கிறார் பாலோ.

"பிசாக்கள், இனிப்புகள், கேக்குகள், குளிர்பானங்கள் சில நேரங்களில் காஃபி மெஷின்கள் கூட வருகிறது. இவை எங்களுக்கு உற்சாகம் அளிக்கிறது", என்கிறார் அவர்.

இந்த பரிசு பொருட்கள் சிறிது மகிழ்ச்சியைத் தந்தாலும் அவரால் மருத்துவமனையின் தொடர்பில்லாமல் இருக்க முடியாது.

படத்தின் காப்புரிமை PAOLO MIRANDA
Image caption ஓய்வில் இருக்கும் பெண் செவிலியர்

"பணியை முடித்து வீட்டுக்கு வரும்போது மிகவும் சோர்வாகவும் சோகமாகவும் இருக்கும். தூங்கும்போது நடுவில் பல நேரங்களில் எழுந்து விடுவேன். என்னுடைய சக ஊழியர்களுக்கும் இது நடக்கும்,"என்கிறார் பாலோ.

ஆனால் வைரஸ் தொற்று இருக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க பாலோ இன்னும் சோர்வாகிறார்.

"இதற்கு ஒரு முடிவே இல்லாமல் போய்கொண்டிருக்கிறது. விரைவில் இது முடிந்தால் நன்றாக இருக்கும். ஆனால், அது எப்போது நடக்கும் என்று எனக்கு தெரியாது. ஆனால், இதுவும் கடந்து போகும் என நம்புகிறேன்" என்று பாலோ கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை PAOLO MIRANDA
Image caption கேமரா முன்பு போஸ் கொடுக்கும் செவிலியர்கள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: