கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தடை நீக்கம்: நரேந்திர மோதிக்கு டிரம்ப், பிரேசில் அதிபர் நன்றி

கடந்த திங்கட்கிழமை அன்று, இந்தியா ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்காவிட்டால் ‘தக்க பதிலடி’ கொடுக்க நேரிடும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கடந்த திங்கட்கிழமை அன்று, இந்தியா ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்காவிட்டால் ‘தக்க பதிலடி’ கொடுக்க நேரிடும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து மீதான தடையை விலக்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் இந்தியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

உலக நாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தைக் குறைப்பதற்கு இதுவரை மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் அதை கட்டுப்படுத்துவதற்கு மலேரியா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு வகை மருந்தான ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை பயன்படுத்தலாம் என்று கடந்த வாரம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பரிந்துரை செய்திருந்தது.

இந்த நிலையில், கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடாக விளங்கி வரும் அமெரிக்கா இந்த வகை மருந்துகளை இந்தியாவில் இருந்து பெறுவதற்கு திட்டமிட்டிருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு கடந்த மாத இறுதியில் இந்திய அரசு தடை விதித்தது.

இதையடுத்து கடந்த சனிக்கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோதியை தொலைபேசி வாயிலாக அழைத்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

பட மூலாதாரம், Getty Images

டிரம்பின் இந்த கோரிக்கை தொடர்பாக இந்திய அரசு உடனடியாக எந்த அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று, இந்தியா ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்காவிட்டால் ‘தக்க பதிலடி’ கொடுக்க நேரிடும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இந்த வகை மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக இந்திய அரசு அறிவித்தது.

இதையடுத்து இந்தியர்களுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள டிரம்ப் அதில், “அசாதாரண சூழலில்தான் நண்பர்களுக்கு இடையே அதிகமான ஒத்துழைப்பு தேவை. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்த இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி. இந்த உதவியை அமெரிக்க மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள். கொரோனா வைரஸுக்கு எதிரான இந்த போராட்டத்தில் இந்தியாவுக்கு மட்டுமல்ல, மனிதநேயத்திற்கும் உதவுவதில் உங்கள் வலுவான தலைமைக்கு நன்றி, பிரதமர் நரேந்திர மோதி” என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் டிரம்பின் கருத்திற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி, “உங்களது கருத்துடன் நான் முற்றிலும் உடன்படுகிறேன். இதுபோன்ற நேரங்களில் நண்பர்களுக்கிடையேயான கூட்டுறவு அதிகரிக்கிறது. இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் வலுவாக உள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் மனித குலத்துக்கு தேவையான தன்னாலான எல்லாவித உதவிகளையும் இந்தியா செய்யும். இதை நாம் ஒன்றிணைந்து வெல்லவேண்டும்” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்

நன்றி தெரிவித்த பிரேசில் அதிபர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரேசில் மக்களிடம் உரையாற்றிய அந்த நாட்டின் அதிபர் சயீர் பொல்சனாரூ, ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கான தடையை நீக்கியதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்

“இந்திய பிரதமருடனான எனது நேரடி உரையாடலின் விளைவாக, கோவிட்-19 தொற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு தேவைப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கான மூலப்பொருட்களை இந்தியாவிடமிருந்து பெறவுள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: