கொரோனா வைரஸ்: பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும்: நிலைப்பாட்டை மாற்றிய உலக சுகாதார நிறுவனம்

பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும்:

பட மூலாதாரம், ARUN SANKAR / Getty

கொரோனா பெருந்தொற்று பரவுவதைத் தடுக்க மக்கள் பொது இடங்களில் கூடும்போது மாஸ்க் அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

மாஸ்க் அணிவதால் கொரோனா வைரஸ் பரவாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என உலக சுகாதார நிறுவனம் முன்பு கூறியிருந்த நிலையில், தனது நிலைப்பாட்டை தற்போது மாற்றியுள்ளது.

தொற்றைப் பரப்பக்கூடிய நுண்ணிய எச்சில் மற்றும் சளி துளிகளைத் தடுக்கும் ஒரு தடையாக மாஸ்க் உள்ளது என்பது சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

மக்கள் பொது இடங்களில் மாஸ்க் அணிவதை ஏற்கனவே பல நாடுகள் கட்டாயமாக்கியுள்ளன.

’’நோய்த்தொற்று பரவும் ஆபத்து உள்ள இடங்களுக்குச் செல்லும்போது மக்கள் துணி மாஸ்கை அணியும்படி அறிவுறுத்தப்படுகிறது’’ என ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார் உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா வைரஸுக்கான தொழில்நுட்ப நிபுணர் டாக்டர் மரியா வென் கேர்கோவி.

பட மூலாதாரம், REUTERS

படக்குறிப்பு,

மக்கள் பொது இடங்களில் மாஸ்க் அணிவதை ஏற்கனவே பல நாடுகள் கட்டாயமாக்கியுள்ளன

உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மருத்துவ மாஸ்க்கை அணிய வேண்டும் எனவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜான்ஸ் ஹாப்கிங்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி 60 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு வைரஸ் பரவத்தொடங்கியதிலிருந்து இதுவரை கிட்டதட்ட 4 லட்சம் பேர் இறந்துள்ளனர்.

’’மக்கள் பொது இடங்களில் மாஸ்க் அணிவதை அந்தந்த நாடுகளின் அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்’’ என்கிறார் மரியா.

அதே சமயம், கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவுவதை மாஸ்க் குறைக்கும் என்றும், மாஸ்க் அணிவதால் முழு பாதுகாப்புடன் இருப்பதாக மக்கள் உணர வேண்டாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘’மாஸ்க் மட்டுமே கோவிட் 19 வைரஸிடம் இருந்து உங்களை பாதுகாக்காது’’ என்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரெயெசஸ்.

’’மாஸ்க் அணிய மக்களை ஊக்குவிப்பது, அவர்களிடையே ஒரு போலியான பாதுகாப்பை உண்டாக்கும் என உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர்கள் நினைத்தனர். ஆனால், மாஸ்க் அணிவதால் தொற்று பரவுதல் குறையும் என்ற ஆராய்ச்சி முடிவை இப்போது அந்த நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது’’ என்கிறார் பிபிசி அறிவியல் பிரிவு செய்தியாளர் டேவிட் ஷுக்மென்

தங்களுக்கு கொரோனா இருப்பதற்கான அறிகுறி தெரிவதற்கு முன்பே பலருக்கு அந்த தொற்றைப் பரப்பிவிடும் ஆபத்து அதிகரித்துவருவதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

’’பொதுப்போக்குவரத்து, கடைகள், அகதிகள் முகாம்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது சிரமம் என்பதால், தொற்று பரவால் தடுக்க துணியால் தயாரிக்கப்பட்ட மாஸ்கை அணிய உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது’’ என்கிறார் ஷுக்மென்.

60 வயதைக் கடந்தவர்கள், உடல்நலன் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ மாஸ்க் அணிய வேண்டும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது என்கிறார் ஷுக்மென்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: